sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (19)

நான் வந்த பாதை! (19)

நான் வந்த பாதை! (19)


PUBLISHED ON : செப் 10, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 10, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ். ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

பூம்புகார் படத்தில், பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த, ஜி.சகுந்தலா, கவுந்தியடிகளாக வந்து, கோவலனாக நடிக்கிற என்னை, 'மகனே...' என்று அழைத்துப் பேசினால், அது நகைச்சுவையாக மாறிவிடும் என்பதால், மாற்று யோசனை ஒன்று கூறினேன்.

'கவுந்தியடிகள் வேடத்துக்கு, அவ்வையாராக பாடி நடித்து பெரும் புகழ்பெற்ற, கே.பி.சுந்தராம்பாளை நடிக்க வைத்தால், படத்துக்கு பெருமை சேருமே...' என்றேன்.

'அருமையான தேர்வு. மிகப்பொருத்தமாக இருக்கும். இதுபற்றி யோசிக்கிறேன். பிறகு பேசுவோம்...' என்றார், கருணாநிதி.

கே.பி.சுந்தராம்பாளை பற்றி, நான் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நான் முன்பு, டி.கே.எஸ்., நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தபோது, பல்வேறு ஊர்களில் நாடகங்களை நடத்தி முடித்து, ஆக., 2, 1942ல், திருச்சி மாவட்டம் கரூரில், நாடகங்கள் நடத்தத் துவங்கினர். எங்கள் குழுவினர் தங்குவதற்கு பெரிய வீடு வாடகைக்கு கிடைத்தது.

கே.பி.சுந்தராம்பாளுக்கு சொந்த ஊர் கொடுமுடி. என்ன காரணத்தாலோ, கரூரில் நாங்கள் இருந்த வீட்டுக்கு அருகில், ஒரு வீட்டில் தங்கியிருந்தார். அவரது இல்லத்தில் எப்போதுமே ஒரு சிறு கூட்டம் இருக்கும்.

அவ்வப்போது எங்களது நாடகங்களை விடாமல் பார்த்து வந்தார். என் மீது தனி பாசம் கொண்டவர். பகலில் பெரும் பகுதி அவர் வீட்டில்தான் இருப்பேன். வாரத்தில் ஒருநாள் எங்கள் குழுவில் எண்ணெய் தேய்த்து ஊற வைத்து, சீயக்காய் தேய்த்து குளித்தே ஆகவேண்டும் என, ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

கரூர் வந்த பின், அதேபோல் எனக்கு, எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி, அடர்ந்து நீண்ட என் சுருட்டை தலைமுடிக்கு, சாம்பிராணிபுகை காட்டி, சிக்கெடுத்து சீவி விடுவார், கே.பி.சுந்தராம்பாள்.

அந்த சமயங்களில், என்னை பெற்று வளர்த்த தாயின் பாசத்தை அந்த அம்மாவிடம் காண்பேன். என் பெயரை சொல்லாமல், 'மகனே மகனே...' என்று தான் அழைப்பார். நானும், வாஞ்சையுடன் 'அம்மா அம்மா...' என்று தான் அழைப்பேன். இந்த அன்பு பிணைப்பு, பிற்காலத்திலும் தொடர்ந்தது.

ஒருநாள், கருணாநிதி என்னிடம், 'உங்கள் கருத்துப்படி, கே.பி.சுந்தராம்பாளையே படத்தில் நடிக்க ஏற்பாடு செய்து விடலாம்; மிகச் சிறப்பாக இருக்கும். கொடுமுடி கோகிலம் என, அண்ணாதுரையால் பாராட்டப்பட்டவர் ஆயிற்றே. ஆனால், பணம் நிறைய கேட்பார்களாமே, நம் பட்ஜெட்டுக்கு சரி வருமா. அதான் யோசிக்கிறேன்...' என்றார்.

'நீங்கள் எது பற்றியும் சிந்திக்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன். ஈரோடுக்கு பக்கத்தில்தான் கொடுமுடி இருக்கிறது. நாம் வருவதாக அந்த அம்மாவிடம் தெரிவித்து விடுகிறேன். என் காரிலேயே புறப்படலாம்...' என கூறி, கருணாநிதியுடன் காரில் புறப்பட்டேன்.

'என் மகன் எஸ்.எஸ்.ஆர்., என்னை காண வரப்போகிறான்...' என்ற விபரத்தை ஊர் முழுதும் பரப்பி விட்டார், அந்த அம்மையார்.நாங்கள் சென்றபோது, அவரது வீட்டு முன் மக்கள் கூட்டம் குழுமியிருந்தது.

'சரி, என் மகன் எஸ்.எஸ்.ஆரை பார்த்துட்டீங்கள்ல... எல்லாரும் போயிட்டு வாங்க. அவங்க சாப்பிடட்டும்...' என்றார்.

உணவருந்திய பின் உட்கார்ந்து பேசி, வந்த காரணத்தை கூறினோம்.

'என்னது, சினிமாவில் இனிமேல் நான் நடிப்பதாவது...' என்றார்.

'ஆமாம். பூம்புகார் படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். அதைத் தொடர்ந்து இனியும் நீங்கள் படங்களில் நடிக்க வேண்டும்...' என்றேன்.

'அவ்வையார் படத்தில் நடித்தேன். எஸ்.எஸ்.வாசன், ஒரு லட்சம் கொடுத்தார்...' என்றார்.

அது, இன்றைய கணக்குப்படி, 10 கோடி இருக்கும்.

கருணாநிதி முகம் மாறியது. சரி, சென்னை புறப்படலாமா என்பது போல இருந்தது, அவரது பாவனை.

கண்களால் கொஞ்சம் பொறுங்கள், எப்படியும் முடித்து விடலாம் என, சைகை காட்டினேன்.

'அதெல்லாம் எனக்கு தெரியாதம்மா. பூம்புகார் படத்தில் நீங்கள் நடித்தாக வேண்டும். ஏதோ நாங்கள் கொடுக்கிற தொகையை, நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்...' என்றேன்.

'சரி மகனே, உன் விருப்பம் போலவே நான் நடிக்க ஒத்துக்கொள்கிறேன். இங்கிருந்து புறப்படும்போது நீங்கள் மகிழ்ச்சியுடன் செல்ல வேண்டும்...' என உபசரித்து, எங்களை வழியனுப்பி வைத்தார்.

பூம்புகார் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது.

கர்நாடகாவில் உள்ள, ஹம்பி என்ற இயற்கை அழகு நிறைந்த பகுதியில் தான் வெளிப்புற படப்பிடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டன. வெளிப்புற பகுதிகளை படம் எடுக்கும் கேமரா, வசனங்களை பதிவு செய்யும் ரிக்கார்டிங் இயந்திரம் உட்பட எஸ்.எஸ்.ஆர்., பிக்சர்ஸ் அவுட்டோர் யூனிட்டை வைத்துதான் அங்கே காட்சிகள் எடுக்கப்பட்டன.

பூம்புகார் படம், விரைவில் எடுத்து முடித்து, முதல் பிரதியும் போடப்பட்டு விட்டன. ஆனால், படத்தை வாங்கி திரையிட, எந்த விநியோகஸ்தர்களும் முன் வரவில்லை.

அப்போது, நான் கதாநாயகனாக நடித்து தயாரிப்பில் இருக்கிற வேறு படங்களெல்லாம் நல்ல விலைக்கு போய்க் கொண்டிருந்தன. சங்கடப்பட்டார், கருணாநிதி; எனக்கும் வருத்தம் தான்.

என் மற்ற படங்களை வாங்குகிற விநியோகஸ்தர்களுக்கு, பூம்புகார் படத்தை போட்டுக் காட்டினேன். படத்தை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் எழுந்து சென்றனர், சிலர்.

இரண்டொருவர் என்னிடம் பரிவோடு, 'என்ன எஸ்.எஸ்.ஆர்., கருணாநிதியிடம் நீங்களாவது சொல்லியிருக்கக் கூடாதா... பாகவதர், பி.யு.சின்னப்பா ஆகியோர் நடித்த பழைய வெற்றிப் படங்களை திருப்பி எடுத்து, அவைகளில் சிவாஜி கணேசன் மற்றும் பிரபல நட்சத்திர நடிகர், நடிகையரை நடிக்க வைத்து பெரும் செலவில் தயாரித்து, வெளியிட்ட படங்களெல்லாம் படுதோல்வி அடைந்து விட்டனவே...

'பி.யு.சின்னப்பா, கண்ணாம்பா, என்.எஸ்.கே., டி.ஏ.மதுரம் ஆகியோர் நடித்த வெற்றி படமான, கண்ணகி இன்னும் நினைவில் இருக்கிறதே...' என சொல்லி போய் விட்டனர்.

ஒரு படத்தை, ஒவ்வொரு ஏரியாக்களுக்கும் (மாவட்டங்களுக்கும்) சினிமா விநியோகஸ்தர்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்வது என்பது ஒருமுறை. அப்படி கொடுத்து விட்டால், லாபமோ, நஷ்டமோ படத்தை வாங்கியவர்களையே சேரும்.

இன்னொரு முறை, 'டிஸ்டிரிபியூஷன்' என சொல்வர். படம் திரையிடப்படும் முன், விநியோகஸ்தர்கள், ஒவ்வொரு ஏரியாக்களுக்கும், கணிசமான ஒரு தொகையை படத் தயாரிப்பாளருக்கு கொடுத்து, படத்தின் பிரதிகளை வாங்கி, அவர்களே தியேட்டரில் வெளியிடுவர்.

படம் சரியாக போகாமல் தோல்வியடைந்தால், அவர்கள் கொடுத்த பணத்தில் செலவு போக, மீதி பணத்தை, விநியோகஸ்தர்களுக்கு திருப்பி கொடுத்து விடவேண்டும், தயாரிப்பாளர். இது, சினிமா உலகின் வியாபார முறை.

பூம்புகார் படம் விலைபோகாததால் கவலையில் ஆழ்ந்தார், கருணாநிதி.

- தொடரும்.

நந்தனார் படத்தில், கே.பி.எஸ்., நடித்தார். அதில் ஒரு காட்சி. ஒரு வேதியர், கே.பி.எஸ்., காலில் விழுந்து வணங்க வேண்டும். அவர் காலில் விழுந்து வணங்கும் காட்சியில் உண்மையிலேயே விழுந்து வணங்கியவர், வேதியராக நடித்த, பிரபல பாடகர் மேதை மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர்.

- எஸ்.எஸ்.ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us