PUBLISHED ON : ஆக 06, 2023

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுயசரிதை!
பிள்ளை கனியமுது படத்துக்காக, சிறுத்தையுடன் மோத வேண்டிய காட்சியில், அதனுடன் கட்டிப்புரண்டு உருண்டேன். அதன் வாயில் போடப்பட்டிருந்த தையல்களில் கொஞ்சம் பிரிந்து விட்டன. அது, ரத்தத்துடன் நாக்கை நீட்டி, என் மீது ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது. எனக்கு ஒரே பயம். உண்மையிலேயே உயிருக்கு போராடுகிறேன்.
நான் பிரமாதமாக சண்டையிட்டு நடிப்பதாக கருதி ரசித்தனர், இயக்குனர் திருமுகமும், மற்றவர்களும். ஒருவழியாக சிறுத்தையின் கழுத்தை என் பலம் கொண்ட மட்டும் இறுகப் பிடித்து நெருக்கியவாறு, 'கட்' என்றேன்.
பிறகு, கோவிந்தராஜன் குழுவினர் ஓடி வந்து சிறுத்தையை பிடித்து அழுத்த, நான் ஒரு வழியாக புரண்டு எழுந்தேன். முகம், உடம்பெல்லாம் பலத்த காயம். டாக்டர் வரவழைக்கப்பட்டு, காயங்களுக்கு சிகிச்சை அளித்தார்.
ஏவி.எம்.செட்டியார், வாகினி நாகி ரெட்டியார், சின்னப்பா தேவர், எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் மற்றும் பலர் வந்து, நலம் விசாரித்தனர்.
'நீ ஒரு நடிகன். நடிக்க வேண்டுமே தவிர, உன்னை யார் உண்மையிலேயே சண்டை போடச் சொன்னது. இதுபோன்ற காட்சிகளில் கதாநாயகனுக்கு பதிலாக, 'டூப்' போட்டு நடிக்கத்தான், 'ஸ்டன்ட் பார்ட்டி'யில் அதற்கென்று ஆட்கள் இருக்கின்றனரே, அவர்களை பயன்படுத்தியிருக்க வேண்டியதுதானே...' என, சத்தம் போட்டனர்.
ஆனால், சிறுத்தை சண்டை, படத்தில் சிறப்பாக அமைந்து, பாராட்டுதலை பெற்றதில், எனக்கு திருப்தி.
ஒருநாள் என்னிடம், 'சென்னையில், எனது, 'கட்டபொம்மன்' நாடகம் நடக்க இருக்கிறது. அதை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அக்கதையை படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
'அப்படத்தில் நீங்கள் வெள்ளையத் தேவனாக நடிப்பது மிகப் பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருக்கும் என கருதுகிறேன். தங்களுக்கென திரைக்கதையில் வெள்ளையத் தேவன் பற்றிய காட்சிகளை விரிவாக்கவும் சொல்லியிருக்கிறேன். தங்களுக்கு ஜோடியாக பத்மினியை நடிக்க வைக்கலாமென இருக்கிறோம்.
'தாங்கள், சம்பந்தப்பட்ட காட்சிகளில் மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன. நீங்கள் நடிப்பதானால், கதாநாயகனுக்கான சம பங்கை நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் என, நான் நம்புகிறேன். அது, படத்துக்கு ரெட்டிப்பு வெற்றியை சேர்க்கும்...' என்றார், சிவாஜி கணேசன்.
'கட்டபொம்மன்' நாடகம் எழுதியவர், சக்தி கிருஷ்ணசாமி. முக்கிய நகரங்களில், நாடகம் வெற்றிகரமாக நடந்து வந்தது. சினிமாவுக்கும் அவரே திரைக்கதை வசனம் எழுதினார். அச்சமயம், அவர் என்னை சந்தித்தார். அவரை கண்டவுடன், 'நீ யார், மாமனா, மச்சானா அல்லது எம் குலப்பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா...' என்றேன். அவர், மனம் விட்டு உரக்க சிரித்து, என்னை கட்டி அணைத்துக் கொண்டார்.
பணிவுடன், 'வணக்கம் அண்ணே...' என்றேன்.
'எல்லாம் கேள்விப்பட்டேன், தம்பி. உன்னை மனதில் எண்ணியவாறே எழுதும்போது வெள்ளையத் தேவனுக்கு தெளிவான தமிழ் வசனங்கள் அமைந்துவிடும்...' என்றார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிப்புற காட்சிகளை எடுக்க, ஜெய்ப்பூர் புறப்பட்டனர்.
'எனக்கு அங்கே படப்பிடிப்பு இல்லையா...' என, ஆவலுடன் கேட்டேன்.
'இல்லை. நீங்களும், பத்மினியும் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை சென்னையிலிருந்து ஆந்திரா போகும் வழியில் உள்ள, தடா எனும் மலை நீர் வீழ்ச்சி உள்ள பகுதியில் தான் எடுக்க திட்டமிட்டுள்ளோம்...' என்றனர்.
அச்சமயம், நிறைய படங்களில் நான் நடிக்க ஒப்பந்தமாகி, இரவு பகலாக வேலை செய்து கொண்டிருந்தேன். சேலம், மாடர்ன் தியேட்டர்சாரின் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அண்ணனாக, நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி நடித்தார்.
அந்த படம் தான், தலை கொடுத்தான் தம்பி. கதை, வசனத்தை, முரசொலி மாறன் எழுதினார். அந்த படம் முடியும் தருவாயில் இருந்தது. படம் முடியப் போகும் உச்சக்கட்ட காட்சிக்காக, அப்படத்தில் நடிக்கிற முக்கிய நடிகர் - நடிகையர் அத்தனை பேரும், சேலம் வரவழைக்கப்பட்டு, படப்பிடிப்பு தினமும் நடைபெற்று வந்தது.
இந்த சமயத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில், எஸ்.எஸ்.ஆர்., - பத்மினி வருகிற காட்சிகளையும் ஜெய்ப்பூரிலேயே எடுத்து விடலாம் என முடிவு செய்தனர்.
'எஸ்.எஸ்.ஆர்., உடனே புறப்பட்டு வரவேண்டும்...' என, அவசர அழைப்பு விடுத்தனர்.
சாரதா படம் எடுத்த, சாரதா ஸ்டூடியோ அதிபரும், எனக்கும், சிவாஜிக்கும் நெருங்கிய நண்பருமான, ஏ.எல்.சீனிவாசன், ஜெய்ப்பூருக்கு என்னை அழைத்துச் செல்ல, சேலத்துக்கே வந்து விட்டார்.
'நீங்களே பார்க்கிறீர்கள். சேலத்தில் இத்தனை நடிகர், நடிகையருடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு, நான் எப்படி ஜெய்ப்பூருக்கு புறப்பட்டு போக முடியும். அதனால், தயாரிப்பாளருக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும்...' என்றேன்.
நிலைமையை புரிந்துகொண்டு, ஜெய்ப்பூரில் உள்ளவர்களுக்கு விபரத்தை தெரிவித்தார், ஏ.எல்.சீனிவாசன்.
அங்கு இருந்த பட அதிபரும், இயக்குனருமான பி.ஆர்.பந்துலுவுக்கு செய்தி கிடைக்க, எப்படியும் படப்பிடிப்பை நடத்திவிட வேண்டும் என்ற நிலையில், நண்பர் ஜெமினி கணேசனை, வெள்ளையத் தேவன் வேடத்தில் நடிக்க ஏற்பாடு செய்தார்.
நண்பர் ஜெமினி கணேசன் பண்புள்ள நடிகர். நிலைமைகளை என்னிடம் சொல்லி, 'நீங்கள் அனுமதித்தால், அங்கு சென்று வெள்ளையத் தேவனாக நான் நடிக்கிறேன்...' என்றார்.
'எனக்கு பதிலாக நீங்கள் நடித்தால், ஒரு இக்கட்டான கட்டத்திலிருந்து என்னை விடுவித்து, பெரிய உதவி செய்ததாகவே கருதுவேன். நீங்கள் ஜெய்ப்பூர் சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ளுங்கள்...' என கூறி அனுப்பி வைத்தேன்.
வீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளிவந்து, வெற்றி பெற்ற பிறகும் கூட, என் அருமை நண்பர் சிவாஜி கணேசனுக்கு மனக்குறை தான்; நான் அதில் நடித்திருந்தால், படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்குமே என்று. அதனால், சில நாட்கள் என்னிடம் சரியாக பேசாமல் இருந்தார்.
பிறகு எப்படி சமாதானமானோம் தெரியுமா?
- தொடரும்- எஸ்.எஸ்.ராஜேந்திரன்
