PUBLISHED ON : நவ 04, 2012

வாழ்க்கையில் முழுமையான வெற்றி சிலருக்கு மட்டுமே கிடைக்கிறது. அந்த சிலருக்கு மட்டுமே தெரிந்த வெற்றியின் ரகசியம், பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானதுதான் இந்த வழிகாட்டித் தொடர். பல்வேறு துறைகளில் சாதனையாளர்களை நேரில் சந்தித்து அறிந்த குணநலன்களையும், வாழ்க்கையில் பல அம்சங்களைத் தெளிவுபடுத்திய சிறந்த நூல்களின் சாராம்சங்களையும், ஒன்று சேர்த்து குழைத்ததில் கிடைத்த வண்ணக் கலவையை, சமூக அக்கறையென்னும் தூரிகையால் வரைந்த ஓவியம் தான், 'வெற்றியின் ரகசியம்' எனும் இந்தத் தொடர்.எதுவும் சாத்தியம் என எண்ணுதல்!
'நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கும்' என்பது பேச்சு வழக்கு. இதன் உட்பொருள், தவறான, மட்டமான நினைப்பு, பிழைப்பைக் கெடுக்கும் என்பதாகும். அதே சமயம், நம்மைப் பற்றி, நாம் வைத்திருக்கும் உயர்வான எண்ணங்கள், நம்மை உயர்த்தவும் செய்யும்.
'எல்லாம் நன்மைக்குத்தான்' என்ற மனப்பக்குவம் இருக்கும் போது, நடந்து முடிந்த நிகழ்ச்சியைப் பற்றிய புலம்பல் குறையும். நாளைய பொறுப்புகளை நோக்கி கவனம் திரும்பும், பகவத்கீதையில் சொல்லப்பட்ட கீழ்கண்ட வாசகத்தை மனதூன்றி சொல்லிப் பார்க்கலாம். புத்துணர்ச்சி உருவாகும். பிரகாசமான எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கை பிறக்கும்.
'எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கவிருக்கிறது'
நாம் மனதிற்குள் என்ன நினைக்கிறோமோ, அது தான் எண்ண அலைகளாக மாறி, நம்முடைய சிந்தனையிலும், செயலிலும் பிரதிபலிக்கும். நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோம்? நம்மைச் சுற்றிய உலகத்தைப் பற்றி என்ன நினைக்கிறோம்? தோல்வியை, ஏமாற்றத்தை, கேலி, கிண்டலை, எப்படி எடுத்துக் கொள்கிறோம்? இவையெல்லாம் சேர்ந்து தான், நம் மனப்பான்மையை உருவாக்குகிறது.
நாம் வளர்ந்த சூழ்நிலையால், இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை இருந்தால், அதை மாற்ற முடியுமா? முடியும். மனது வைத்தால், வெற்றியாளனுக்குரிய மனப்பான்மையை நாம் பெற முடியும் என்பதை, இந்த அத்தியாயம் உங்களுக்கு உணர்த்தும். இந்தப் போட்டியுலகத்தில் வெற்றி பெறுவதற்கு, வெற்றியாளனுக்குரிய மனப்பான்மை வேண்டும். 'நான் தொண்டனாகவே இருந்து விட்டுப் போகிறேனே' என்று நினைப்பவனுக்கு, தலைமைப்பதவி தேடி வராது. 'நான் ஏழையாகவே இருந்து விட்டுப் போகிறேன்' என்று நினைப்பவனுக்கு, பணமும், வசதி வாய்ப்பும் தேடி வராது.
'நான் ஏழை என்றால், என்ன செய்ய முடியும்?' என்று புலம்புபவர்களைப் பார்த்திருப்போம். நாம் பிறப்பால் ஏழையாக இருந்தாலும், வளர்ந்த பின்னும் ஏழ்மையில் வாடினால், குறை நம் பிறப்பில் இல்லை. நம் வளர்ப்பிலும், மனப்பான்மையிலும் தான் இருக்கிறது.
நம்முடைய வளர்ச்சியை மட்டப்படுத்துகிற ஒரே சக்தி, நம் மனப்பான்மை தான் என்பதை மறந்து விடாதீர்கள். நமக்குத் திறமையும், உழைப்பும், வைராக்கியமும் இருந்தால், நம்முடைய வளர்ச்சியை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
'நான் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்; கிராமப்புரத்தில் படித்தவன். எனக்கு ஆங்கிலம் சரியாகப் பேச வராது. நான் தோற்றத்தில் சராசரி. என்னால், முன்னுக்கு வர முடியுமா?' என்று நினைப்பவர்கள், ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய இந்தப் பின்னணிதான், முன்னுக்கு வருவதற்குத் தேவையான உந்து சக்தி. இந்த உந்து சக்தி, எல்லா வசதிகளுடன் பிறந்து வளர்ந்தவர்களிடத்தில் கூட இருப்பதில்லை.
நம்மை நாமே அவமானப்படுத்தக் கூடாது. நம்முடைய உயரத்தை, நாமே குறைத்துக் கொள்ளக் கூடாது. நம்மை நாமே தாழ்த்திக் கொண்டால், இந்த உலகம் எப்படி நம்மை உயர்த்திப் பார்க்கும்?
ஏளனம், நக்கல், நையாண்டி, விமர்சனம், கண்டனம், பொறாமை, சூழ்ச்சி, சதி இவையெல்லாம் நம்மைப் பலப்படுத்த வந்த சக்திகள் என்று எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர இவற்றால், நொந்துபோய் பலவீனப்பட்டு துவண்டு விடக் கூடாது.
பிரச்னையைக் கண்டு பயப்படக் கூடாது. பிரச்னை வரும் போதெல்லாம், நம்முடைய மனத்திடத்தைப் பரிசோதிக்க வந்த சவாலாக எடுத்துக் கொள்ள வேண்டும். தோல்வி வரும் போதெல்லாம், நல்ல பாடம் புகட்ட வந்த அனுபவம் என உணர வேண்டும்.
நம் ஆழ் மனதில் அச்சம், குழப்பம், தெளிவின்மை, தாழ்வு மனப்பான்மை, விரக்தி, ஆத்திரம் ஆகியவை இருந்தால், அது நம் பேச்சிலும், செயலிலும் பிரதிபலித்து, நம்முடைய வாழ்க்கையின் போக்கை மாற்றி விடும்.
நாம் சிறுவயதில் வளர்ந்த சூழ்நிலையில் ஏற்பட்ட மனப்பான்மையை இறுகப் பிடித்து, அதுதான் எல்லாக் காலக்கட்டத்துக்கும் சரியென்று பிடிவாதமாக இருப்பது தவறு. அந்தந்தக் காலத்துக்கேற்ப, புதிய சிந்தனைகளை ஆராய்ந்து, சரியெனப்பட்டதை, மனமுவந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பான்மையைப் பெற வேண்டும். 'மாற்றுக் கருத்தைப் பரிசீலிக்க மாட்டேன்' என்று, மனதை மூடி வைத்து, குறுகிய வட்டத்தில் இருப்பது, விவேகமான செயல் அல்ல. குடையை விரித்து வைக்கும் போதுதான், குடையின் பயனை உணர முடியும். அது போல, மனது விரியும் போது தான், புதிய சிந்தனைகளை உள் வாங்க முடியும்.
ஆக்கப்பூர்வமான சிந்தனையை உள்வாங்கிக் கொள்வதையும், ஆரோக்கியமான செயலைச் செய்வதையும், பயிற்சியாக எடுத்து, திரும்பத் திரும்பச் செய்தால், அதுவே ஒரு கட்டத்தில் பழக்கமாகி, ஆக்கப்பூர்வமான செயல்வீரர் என்ற நற்பெயரை நமக்கு வாங்கித் தரும்.
நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, நம்மால் மாற்ற இயலாது. ஆனால், நம்முடைய மனம், நம் கட்டுப்பாட்டில் இருந்தால், எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கக் கூடிய மன வலிமை வரும். நல்ல நாளுக்கும், கெட்ட நாளுக்கும் இருக்கும் ஒரே வித்தியாசம், அதை நாம் எடுத்துக் கொள்ளும் மனப்பான்மை தான்.
நம்முடைய ஒவ்வொரு அனுபவத்திற்கும், உணர்வுப்பூர்வமாக என்ன அர்த்தம் கற்பிக்கிறோம் என்பதைப் பொறுத்து, நம்முடைய மனப்பான்மை பெருமளவுக்கு மாறக்கூடிய வாய்ப்பு உள்ளது. 'எல்லாம் போச்சு, வாழ்க்கை மோசம் போச்சு,
குடிமுழுகிப் போச்சு' என்று புலம்பத் தோன்றும் போதெல்லாம், சற்று மாற்றிச் சொல்லிப் பார்க்கலாம். 'இது ஒரு பாடம். இது ஒரு நல்ல அனுபவம், என்னுடைய மன வலிமையைச் சோதிக்க வந்த ஒரு சோதனை, என் திறமையை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு' என்று சொல்லிப் பழகலாம்.
எதிர்மறை உணர்வுகள் வரும் போது, கீழ்கண்ட ஆரோக்கியமான நம்பிக்கை தரக்கூடிய வாசகங்களை மனதுக்குள் திரும்பச் திரும்ப சொல்லுங்கள். முடிந்தால், நாளேட்டில் குறித்து வைக்கலாம். 'என்னால் இந்த பிரச்னையிலிருந்து மீள முடியும். என்னால் இந்தச் சோதனையான காலக்கட்டத்தை வெற்றிகரமாகத் தாண்ட முடியும்; என்னால், இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர் கொள்ள முடியும்; நான் மேற்கொண்ட இந்த சிரமமான வேலையை, சிறப்பாகச் செய்து முடிப்பேன்!'
— இப்படி மனவியல் ரீதியாக, நாம் எந்த எண்ணத்தை நம் மனதில் விதைக்கிறோமோ, நாளடைவில், நாம் அதுவாகவே மாறி விடுவோம்.
சோர்வு வரும் போதெல்லாம், நாம் வெற்றி பெறும் காட்சியையும், அதனால் நமக்குக் கிடைக்கப் போகும் அங்கீகாரம், அந்தஸ்து, புகழ் பற்றிக் கற்பனை செய்து பார்த்து, அதன் மூலம் வரும் மகிழ்ச்சியை மனக்கண் முன் நிறுத்தினால், புத்துணர்வு தானே வரும்.
நம்மை சோர்வடையச் செய்யும் மற்றும் கவனத்தைத் திசை திருப்பும் சக்திகளிலிருந்து விடுபட வேண்டும். நம்மை பலவீனப்படுத்தும், ஏளனப்படுத்தும், ஊக்கத்தைக் குறைக்கும் நபர்களிடமிருந்து தள்ளி இருக்க வேண்டும். இவர்கள் நம் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்படுவர். இவர்களுடைய அர்த்தமற்ற விமர்சனங்கள், நம்மை ஊக்கப்படுத்த வேண்டுமேயன்றி, பலவீனப்படுத்தக் கூடாது.
குறிப்பாக, வெற்றியாளர்களின் வாழ்க்கை வரலாறுகள், நம்மை ஊக்கப்படுத்தும் சுயமுன்னேற்றம் சம்பந்தமான புத்தகங்களைப் படிக்கலாம். உற்சாகமூட்டும் வாசகங்களை, நம் கண்ணில்படும் இடத்தில் எழுதி வைக்கலாம். திறமையால் உயர்ந்த மனிதர்களோடு நட்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.
நம்முடைய வளர்ச்சியை, இந்த உலகத்தில், எந்த சக்தியாலும் தடுக்க இயலாது. அப்படியொரு சக்தி இருக்கிறது என்றால், அது, 'நம்மால் இயலாது' என்று, நமக்கு நாமே போட்டுக் கொள்ளும் வரையறை தான். 'வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம்' என்ற மனப்பான்மையை அகற்றிவிட்டு, 'ஒரு நாள் வாழ்ந்தாலும், உன்னதமாக வாழ்ந்தோம்' என்று பெயரெடுக்க வேண்டும் என்ற மனப்பான்மையுடன் வாழப் பழக வேண்டும்.
— முற்றும் —
சி.அருண்பரத், கூடுதல் ஆணையர், வருமான வரித்துறை, மும்பை
