PUBLISHED ON : மே 16, 2021

சிவன், ஜுர தேவர், அக்னி... ஆகியோர் வரிசையில், சுதர்சனர் எனப்படும் சக்கரத்தாழ்வாருக்கும் மூன்று கண்கள். இந்த மூன்றாம் கண்ணுக்கு என்ன விசேஷம்?
முதலாமவர், ஆணவத்தை அழித்து, முக்தி தருபவர். இரண்டமாவர், நோய் தீர்த்து, சுகவாழ்வு தருபவர். மூன்றாமவர், எரிபொருளை அழித்து, சுவையான உணவளிப்பவர்.
நான்காமவரான சுதர்சனர், செய்த பாவங்களுக்கு மனம் வருந்தி, தன்னை வணங்குகிறவர்களின் கடந்த கால, நிகழ்கால பாவங்களை அழித்தும், எதிர்காலத்தில் செய்யப் போகிற பாவங்களைத் தடுத்தும், நல்வாழ்வு தருகிறவர்.
இவர்கள் முக்காலத்தையும் உணர்ந்தவர்கள். இவர்களின் புருவ மத்தியிலுள்ள நெற்றிக்கண், தங்களை வணங்குகிறவர்களின் எதிர்கால விதியையும் நிர்ணயிக்கிறது.
இவர்களில் சுதர்சனர், சக்கர வடிவில் இருக்கிறார். 'சுதர்சனம்' என்றால் மேலான ஒளி. அதாவது, சூரியனையும் மிஞ்சிய ஒளி, சுதர்சனத்துக்கு உண்டு.
மகாபாரதப் போரில், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை, சூரியன் மறைவதற்குள் கொல்ல வேண்டும் என்ற, அர்ஜுனனின் சபதத்தை நிறைவேற்ற, கிருஷ்ணருக்கு அது உதவியது.
கோடி சூரியன் ஒளியுள்ள சக்கரத்தை ஏவி, சூரியனை மறைத்தார், கிருஷ்ணர். சூரியன் மறைந்து விட்டதாகக் கருதிய ஜயத்ரதன், வெளியே வந்தான். அர்ஜுனனால் இனி தன்னை ஏதும் செய்ய முடியாது என, கொக்கரித்தான். உடனே, சக்கரத்தை திரும்பப் பெற்று, அர்ஜுனன் மூலமாக ஜயத்ரதனை அழித்தார், கிருஷ்ணர்.
விதிவசத்தால் சாபம் பெற்ற கந்தர்வர்கள் இருவர், கூகு என்ற முதலையாகவும், கஜேந்திரன் என்ற யானையாகவும் பிறந்தனர். ஒருமுறை, கஜேந்திரன் தண்ணீர் அருந்த, திரிகூடமலை ஆற்றுக்கு வந்த போது, கூகுவிடம் சிக்கிக் கொண்டது.
'ஆதிமூலமே...' என, அது கதறிய போது, திருமால் தன் சக்கரத்தை ஏவி, கூகுவைக் கொன்றார். பிரகலாதனை, இரண்யன் துன்புறுத்திய போது, திருமாலின் நகங்களில் அமர்ந்த சுதர்சனர், இரண்யனின் வயிற்றைக் கிழித்துக் கொன்றார்.
இந்த சக்கரமே, ராமாவதாரத்தில் பரதனாக பிறந்து, அரச பதவியை அடைந்தது. பல பெருமாள் கோவில்களில் சுதர்சனருக்கு தனி சன்னதி உள்ளது என்றாலும், அவருக்கான தனி கோவில், கும்பகோணத்தில் உள்ளது. இங்குள்ள சக்ரபாணி கோவிலில், மூலவரே சுதர்சனர் தான்.
மூலஸ்தானத்தில் இவர், சக்கர வடிவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை வழிபட, இரண்டு வாசல்கள் உண்டு. தை முதல் ஆனி வரை, உத்ராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை, தட்சிணாயண வாசல் வழியாகவும் பக்தர்கள் செல்வர்.
ஒரு வாசல் திறந்திருக்கும் போது, இன்னொரு வாசல் மூடப்பட்டிருக்கும். இந்த மூன்று கண் நாயகரை வணங்கினால், முக்காலமும் செய்த பாவங்கள் விலகி, நன்மை நடக்கும்.
தி. செல்லப்பா
