sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சீக்ரெட் ரெசிப்பி!

/

சீக்ரெட் ரெசிப்பி!

சீக்ரெட் ரெசிப்பி!

சீக்ரெட் ரெசிப்பி!


PUBLISHED ON : ஜூலை 07, 2024

Google News

PUBLISHED ON : ஜூலை 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்கழி மாதம். சில்லென்ற காலை நேரம். கல்யாணமாகி வந்ததும் முதன் முறையாக, பெரிய முற்றத்தில், ஆசையுடன் கோலம் போட்டு முடித்தாள், ரஞ்சனி.

ஆனால், மாமியார் பாக்கியமோ, ''இவ்வளவு பெரிய கோலம் தேவையா?'' என்றாள்.

அப்போது, தோழி ஹேமாவிடமிருந்து போன் வந்தது. தோழிக்கும், சமீபத்தில் தான் கல்யாணம் முடிந்திருந்தது.

''என்ன ரஞ்சனி, மாமியார் தொல்லை ஆரம்பமாகி விட்டதா?''

''தொல்லைன்னு சொல்ல முடியாது. வாசலில் பெரிய அழகான கோலம் போட்டேன். சின்னக்கோலமே உனக்கு போடத் தெரியாதா? கோலப்பொடியை, 'வேஸ்ட்' செய்யறியேன்னு சொன்னாங்க.

''வாசல் முற்றம் பெரிசா இருக்கு. சின்னக் கோலம் போட்டா இவ்வளவு பெரிய வாசலில், ஈ உட்கார்ந்தது போல இருக்கும். என்ன செய்வது? வந்ததுமே எதிர்த்து பேச வேண்டாமுன்னு சும்மா இருந்திட்டேன்.''

''ஏதாவது குத்தம் சொல்லணுமே! என் மாமியார், 'குக்கரில் சாதம் வைக்கக் கூடாது. என் மகனுக்கு பிடிக்காது'ன்னு, குதிச்சார். நான், 'உங்க மகன் தான் குக்கரில் சாதம் வைக்கச் சொன்னார்'ன்னு, ஒரே போடா போட்டுட்டேன். வாயை பொத்திக்கிட்டாங்க.

''புள்ளபூச்சியா இருக்காதே, ரஞ்சனி. அவங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டிட்டு இருந்தே. நீ செத்த. நம்ம உரிமையை விட்டுக் கொடுக்கக் கூடாது,'' என்றாள். ஹேமா.

அடுத்த நாள், ரஞ்சனியிடம் வம்புக்கு வந்தாள், அடுத்த வீட்டு மாமி.

''என்ன ரஞ்சனி, மாமியார் கெடுபிடி எப்படி இருக்கு?''

''அதெல்லாம் இல்லையே! அவங்க எனக்கு அம்மா மாதிரி.''

''விட்டுக் கொடுக்க மாட்டியே,'' என்றபடி போனாள், மாமி.

இதை பாக்கியம் கேட்க நேர்ந்தது.

''மருமகள் நம்மை விட்டுக் கொடுக்கலைடி. அவளுக்கு,

20 மார்க் போடலாம்,'' என்றாள்

மகளிடம்.

ஆரம்பத்தில் மாமியார் பாக்கியம் குறை சொல்லிக் கொண்டே தான் இருந்தாள்.

'சதா பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கா... ரொம்ப ஸ்லோ... சமையல் ருசியா இல்லே... எப்ப பார் போனில் அரட்டை...' என, இப்படி, ஏதாவது சொல்வது வழக்கம்.

இன்னொரு நாள் போன் செய்தாள், ஹேமா.

''எப்படி இருக்கு வாழ்க்கை. என்ன புது புது புகார் படிக்கிறாங்களா மாமியார்,'' என்றாள்.

''அவங்க என்கிட்டே இருக்கிற குறைகளை சொன்னாங்க. என்னை நானே, 'இம்புருவ்' பண்ணிட்டு இருக்கேன்.''

''சரி, சரி... நீ, 'டிப்பிகல் ஓல்ட் பாஷன்' மருமகள் ஆயிட்டே. என் மாமியார் என்னை காலையில் எழுந்ததும் குளிச்சிட்டு, அடுப்பை மொழுகிட்டு தான் பால் காய்ச்சணும்ன்னு நிபந்தனை போட்டாங்க. விட்டேன் ஒரு டோஸ். 'கப்சிப்' ஆயிட்டாங்க.''

''எதுக்குடி, டோஸ் எல்லாம் விடற? சில பழைய பழக்க வழக்கங்களில், நம் சுத்தம் சுகாதாரம் சம்பந்தப்பட்டது தானே?''

மருமகள் பேசியதை, ஒட்டுக்கேட்ட பாக்கியம், மகிழ்ந்து, 30 மார்க் போட்டாள்.

நாட்கள் கடந்து, அந்த குடும்பத்துக்கு பிடித்த மாதிரி சமைக்க கற்றுக் கொண்டாள், ரஞ்சனி. இதனால் மருமகளுக்கு கூட,

10 மார்க் போட்டாள், பாக்கியம்.

அடுத்து, 'சொன்னா தான் காரியம் செய்வா. இல்லே மழுங்கினி மாதிரி நிப்பா...' என, அடுத்த குற்றச்சாட்டு ஆரம்பமானது.

புரிந்து கொண்ட, ரஞ்சனி, மாமியாரின் கை வேலைகளை பிடுங்கிச் செய்தாள்.

'பரவாயில்லையே...' என்று, மேலும்,

20 மார்க் போட்டாள்.

ஒருநாள், பாக்கியத்தின் தங்கை குடும்பம் வந்தது. அவர்களை அன்புடன் உபசரித்து நல்ல பேர் வாங்கினாள்.

கண்ணை கசக்கிக் கொண்டு, அடிக்கடி பிறந்தகம் போகவில்லை. அதுக்கு, கூடுதலாக, 20 மார்க் கிடைத்தது அவளுக்கு.

வீட்டில் தண்டமாக சுற்றிக் கொண்டிருந்த, பாக்கியத்தின் இளைய மகன் கிரிக்கு பிறந்த நாள் வந்தது.

கணவனிடம் சொல்லி, அவனுக்கு அழகான ரெடிமேட் பேன்ட் - ஷர்ட் மற்றும் ஒரு பாக்ஸ் ஸ்வீட்ஸ் வாங்கினாள். ரெண்டையும் அவனுக்கு பரிசாக தந்து, ''பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி,'' என்றாள்.

''தேங்க்ஸ் அண்ணி,'' என்ற அவனுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

'நாம அவனை உதவாக்கரைன்னு திட்டறோம். இவள் அவனை மதித்து பாசம் காட்டுறா. போடு இன்னும் 20 மார்க்; பாக்கியத்தின் கணக்கு தொடர்ந்தது.

''தம்பி, நல்ல வேலை கிடைக்கும் வரை, தற்காலிகமா வேலை பாருங்க,'' என்றாள், மென்மையாக ரஞ்சனி.

அடுத்த வாரமே, அவன் ஒரு கம்ப்யூட்டர் சென்ட்ருக்கு வேலைக்குப் போய் வந்தான். முதல் மாத சம்பளத்தில் அண்ணிக்கு, கைப்பை வாங்கி வந்தான்.

அவள் காலில் விழுந்து, ''நாளையே நல்ல வேலை கிடைக்க ஆசீர்வாதம் பண்ணுங்க அண்ணி,'' என்றான்.

அந்த வீட்டில், ரஞ்சனிக்கு கிடைத்த முதல் அங்கீகாரம். அவள் முகத்தில் ஆயிரம் நிலவுகளின் பிரகாசம் வந்திருந்தது. பார்த்த, பாக்கியம், மருமகளுக்கு, 70 சதவீதம் மார்க் போட்டாள்.

மாமனாருக்கு குறிப்பறிந்து உணவு பரிமாறும் நேர்த்திக்காக, பாக்கியம் மார்க்கை, 80 ஆக உயர்த்தினாள்.

கணவன் பிரசாத் வேலை, வேலை

என்று அதிலேயே மூழ்கி விடுவான். நண்பர்கள் தான் அவன் உலகம். வீட்டின்

எந்த நல்ல காரியத்திலும் முழுமையாக ஈடுபட மாட்டான்.

'இதோ பாருங்க இன்னைக்கு வீட்டிலே சுமங்கலி பூஜைக்கு அத்தை ஏற்பாடு பண்ணியிருக்காங்க. லீவ் போடுங்க. கணவன் நலனுக்காக செய்யப்படும் பூஜை இது. கண்டிப்பாக நீங்க இருக்கணும்...' என்று அவனைக் கட்டிப் போட்டாள்.

ஒவ்வொருரிடமும், அன்பெனும் நார் எடுத்து, உறவெனும் உயிர் பூக்களை கொண்டு, அவள் மாலை தொடுத்தாள். ரஞ்சனியின் அதிர்ஷ்டம், அந்தக் குடும்பம், அதை மெல்ல மெல்ல ஏற்றுக் கொண்டது.

பம்பரமாக வேலை செய்தாள், ரஞ்சனி. எல்லாரிடமும் அன்பாகப் பழகினாள்.

மெல்ல மெல்ல ரஞ்சனியிடம் பாக்கியம் யோசனை கேட்கும் அளவுக்கு, அவளின் செல்வாக்கு உயர்ந்தது.

''என்ன பாக்கியம். உன் மருமக சீதனமா பண்ட பாத்திரம், நகைகள்ன்னு கொண்டு வந்த மாதிரி தலையிலே துாக்கி வச்சு ஆடுறே. எம் மருமக, என் பையனுக்கு பைக்கை சீதனமா கொண்டு வந்தா. நகை நட்டு, வெள்ளி சாமான், பண்ட பாத்திரம்ன்னு ஏகப்பட்டது லாரியில் வந்து இறங்கிச்சு தெரியுமா?'' என்றாள், பொறாமை பிடித்த, அடுத்த வீட்டுக்காரி.

''நிறுத்து... எல்லாம் கொண்டு வந்த உன் மருமக, எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு தனி குடித்தனம் போயிட்டா இல்லே. உன் மகனை, 'அபேஸ்' பண்ணிக்கிட்டு போனது எனக்குத் தெரியாதா? பேச வந்திட்டே. எம் மருமக தங்கம். அது தான் பெரிய சீதனம்,'' என்று பாக்கியம் சொல்ல, முக்குடைப்பட்டு போனாள், அடுத்த வீட்டுக்காரி.

மருமகளுக்கு, நுாற்றுக்கு நுாறு மார்க் போட்டு விட்டாள், பாக்கியம். குடும்பத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்வானாள், ரஞ்சனி.

அவளை அனுதாபத்துடன் பார்த்தாள், தோழி ஹேமா.

போனில் அழைத்து, ''ரஞ்சனி இப்படி நாயா பேயா உழைத்துக் கொட்டி, உனக்குன்னு உள்ள ஆசைகளை புதைச்சுக்கிட்டு வாழற. கஷ்டமா இல்லையா உனக்கு? தியாகி பட்டம், விட்டுக் கொடுக்கிற மனசு எல்லாம் கடைசியில், 'டிப்ரெஷனில்' தான் முடியும்.

''உன்னை மாதிரி பத்தாம் பசலியா இருக்க என்னால் முடியாது. நான், என் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டேன். என் மாமியார் - மாமனார், நாத்தி, கொழுந்தன் இவர்களை திருப்திபடுத்தவா நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தேன்?'' என்றாள்.

பழைய மாணவியர் அனைவரையும் அழைத்து, விழா ஏற்பாடு செய்திருந்தது, அவர்கள் படித்த கல்லுாரி.

அன்று, மாடர்ன் அழகியாக வந்திருந்தாள், ஹேமா; அவளுடன் யாரும் வரவில்லை.

அழகான நீல நிற சில்க் காட்டன் புடவையில் தேவதை போல் வந்திருந்தாள், ரஞ்சனி.

''ஹேமா, இவங்க என் மாமியார் - மாமனார். என் நாத்தனார், கொழுந்தன் கிரி,'' என்று அறிமுகப்படுத்தினாள், ரஞ்சனி.

''கும்பலா வந்திருக்கே... சிங்கம் சிங்கிளா தான் வரும்,'' என்று சொல்லி பெருமை அடித்துக் கொண்டாள், ஹேமா.

நிகழ்ச்சிகள் நடந்தன. உணவு, ஆட்டம் பாட்டம் என்று பொழுது போனது. கடைசியில், போட்டி வைத்தனர்.

பொது அறிவுப்போட்டி. அதில், ஹேமாவுக்கு தான் முதல் பரிசு கிடைத்தது. ரஞ்சனிக்கு இரண்டாம் பரிசு. ரஞ்சனியை தோற்கடித்து விட்டோம் என்ற பெருமையுடன் அவளை பார்த்தாள், ஹேமா. ரஞ்சனியை சுற்றி அவள் குடும்பமே நின்று பாராட்டினர்.

''அண்ணி காங்கிராட்ஸ். ரொம்ப ஹாப்பி,'' என்று கிரியும், நாத்தனாரும் கொண்டாடினர். இரண்டாவது பரிசு வாங்கியதுக்கு, இத்தனை ஆர்ப்பாட்டமா?

ஹேமா... வெள்ளிக் கோப்பையுடன் நின்றாள். பாராட்டி மகிழ அவள் புகுந்த வீட்டு மனிதர்கள் தான் யாரும் இல்லை.

''வாழ்த்துக்கள் ஹேமா, நீ எப்பவும் பொது அறிவில் எக்ஸ்பர்ட். முதலிடத்துக்கு நீ தகுதி ஆனவள்,'' என்றாள், ரஞ்சனி.

''எப்படி ரஞ்சனி? இவங்க உன்னை கொண்டாடறாங்க. குறை சொல்லிட்டே தானே இருந்தாங்க. அதன் ரகசியம் என்ன?'' என்றாள், வியப்புடன், ஹேமா.

''நான் அன்பை சேகரிச்சேன்; நீ பகையை சேகரிச்சே. அவ்வளவு தான். அது தான் சீக்ரெட்.

''ஹேமா... புகுந்த வீட்டோட அன்பும், பாசமும் கிடைக்க, கொஞ்சம் விட்டுக் கொடுக்கணும். கடமையை முதலில் செய்து விட்டு, உரிமையை கோரலாம். உரிமையை முதலில் கோரினால், தனிமை தான் கிடைக்கும்.

''வானத்தை விட்டு நிலா ஓட முடியாது. நிலாவை துரத்திவிட்டு வானமும் இருக்க முடியாது. எப்போதும் அமாவாசை இருட்டில் வானம் இருக்க முடியுமா? தனிமை என்னும் இருட்டை விரட்ட வானத்துக்கு நிலா தேவை.

''தேய்பிறையாகவோ, வளர்பிறையாகவோ நிலா இருக்கணும். நம் குடும்பம் நமக்கு இருக்கணும். நான் பழைய டைப் தான். அனுசரித்தலுக்குப் பேர் அடிமைத்தனம் இல்லை,'' என்று முடித்தாள்.

ஹேமாவுக்கும் அந்த ஆசை வந்தது.

'பாட்டி காலத்து சீக்ரெட் ரெசிப்பி வொர்க் அவுட் ஆகுமா?' சிந்தித்தாள், ஹேமா.

- சங்கரி அப்பன்






      Dinamalar
      Follow us