PUBLISHED ON : செப் 18, 2011

இன்றைய பட்டாம்பூச்சியின் பெயர் சரிகா; மிகுந்த ஏழை குடும்பம். உள்ளூரில் ஒரு சிறிய ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.
அசப்பில் நடிகை சீதா போன்று இருப்பாள் சரிகா. ஓட்டலுக்கு மாவு அரைத்துக் கொடுப்பது, அதை பார்த்துக் கொள்வது என, எல்லா உதவிகளையும் பெற்றோருக்கு செய்து வந்தாள்.
இவளுக்கு ஒரு தங்கை; அவள் சுமாராகத்தான் இருப்பாள். சரிகாவை, 'ஜொள்' விடுவதற்கென்றே ஓட்டலுக்குச் செல்வர் இளைஞர்கள். பிளஸ் 2க்கு மேல் படிக்கவில்லை.
தன்னுடைய அழகில் பெருமைப்பட்டு கிடந்த சரிகா, தன்னை மணக்க, அஜீத் போன்ற தோற்றத்தில், பணக்கார வாலிபன் வருவான் என, கனவு கண்டு, காத்திருந்தாள். இதற்கெல்லாம் காரணம், இன்றைய சினிமாக்களும், சீரியல்களும் தான். அதை பார்த்து, பார்த்து தங்கள் கற்பனையை, பயங்கரமாக வளர்த்துக் கொள்கின்றனர் இன்றைய பட்டாம்பூச்சிகள். சினிமாவில் வரும் பணக்கார ஹீரோ, ஹீரோயின்கள் போன்றே, தங்கள் வாழ்விலும் நடக்கும் என, 'அதீத' கற்பனையை வளர்த்துக் கொள்கின்றனர்.
பிறகு, நிஜ வாழ்க்கையை சந்திக்கும் போது, அதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், 'கிறுக்கு' பண்ணி, தங்கள் உண்மையான வாழ்க்கையை கெடுத்துக் கொள்கின்றனர்.
சரிகாவிற்கு, நிஜத்தில் வந்த மாப்பிள்ளை வசந்த், கரிய நிறத்தில், களையாக இருந்தான்; கொழுத்த பணக்காரன்.
வசந்த், சிவந்த நிறமுள்ள, அழகான பெண் வேண்டும் என ஆசைபட்டதில் தவறேதும் இல்லை. காரணம், கறுப்பு ஹீரோவின் அம்மா, பவுர்ணமி நிறம் என்றால், அப்பா அமாவாசை போன்று இருப்பார். 'அம்மா நிறத்தில் பெண் எடுத்தால், தனக்கு பிறக்கும் வாரிசுகளும், தங்க நிறத்தில் இருப்பர்...' என, ஆசைப்பட்டான் வசந்த்.
எனவேதான், தங்களது ஜாதியை சேர்ந்த, ஏழைப் பெண்ணான சரிகாவை தேர்ந்தெடுத்தனர்.
கறுப்பு ஹீரோ கிடைத்ததில் மிகுந்த வருத்தம் தான். இருப்பினும், பங்களா, நகை, பணம் என்ற ஆடம்பர வாழ்க்கை, அவள் வாயை கட்டிப் போட்டது.
இவளது கணவனோ, பெற்றோர் சொல் கேட்டு நடப்பவன். பைக் ஓட்ட சொன்னால், ஓட்ட மாட்டான்; காரும் ஓட்ட மாட்டான்; டிரைவர்தான் ஓட்டுவார்.
கணவனுடன் பீச், பார்க், சினிமா என, ஊர் சுற்ற விரும்பினாள் சரிகா. அவனோ, 'வீட்டிலேயே, ஹோம் தியேட்டர் இருக்கே... அதில் பார்க்கலாம்...' என்றான். ஜாலியாக ஊர் சுற்ற வராத கணவனை வெறுக்க ஆரம்பித்தாள் சரிகா.
'நீ ஒண்ணுக்கும் ஆகாதவன்... வேஸ்ட்... உனக்கு, வாழ்க்கையை ஜாலியாக,'என்ஜாய்' பண்ணவே தெரியல... எதற்கெடுத்தாலும், அம்மா பேச்சு கேட்குறே... என்னோட டேஸ்ட்டுக்கு ஒத்து வரல...' என, சண்டை போட்டாள் சரிகா.
இவளது இம்சை தாங்காமல், தவித்தான் வசந்த்.
அச்சமயம், சரிகாவின் தங்கைக்கு திருமணம் நடந்தது. அவளது கணவனோ, மிகவும் ஜாலி பேர்வழி; ஆண் அழகனும் கூட. சரிகாவுக்கு எப்படி எல்லாம் பிடிக்குமோ, அந்த மாதிரியே இருந்தான். மொத்தத்தில், வெட்டி பந்தா செய்வதில் கில்லாடி.
தன்னிடம் உள்ள பழைய காரில், பீச், ஓட்டல் என, மனைவியுடன் நன்றாக சுற்றுவான். மனைவியின் அக்கா பணக்காரி என்பதால், கடன் பட்டாவது, தன்னையும் பெரிய பணக்காரன் போல் காட்டிக் கொள்வான்.
'என்ன... இப்படி வீட்டிலேயே அடைந்து கிடக்கிறீங்க... வெளியே போக மாட்டீங்களா... வாங்க... நான் கூட்டிக்கிட்டு போறேன்...' என்று சொல்லி, சரிகாவை, 'உசுப்பி' விட்டான்.
பிறகென்ன... மூவரும் ஊர் சுற்ற ஆரம்பித்தனர். சரிகாவின் பணத்தில், நன்றாகத் தின்று, 'தீம்பார்க் - பீச்' என, சுற்றி திரிந்தனர்.
சரிகாவை, கணவன், மாமனார், மாமியார் கண்டித்துப் பார்த்தனர்; கேட்கவே இல்லை. 'கணவனை அழைச்சிட்டுப் போ...' என்றாலும், போக மாட்டாள்.
'இந்த முசுடுக்கு ஜாலின்னா என்ன தெரியும்... நீ ஒண்ணும் வர வேண்டாம். நானும், என் தங்கை, அவள் கணவரும் செல்கிறோம்...' என்றாள்.
அத்துடன், 'மருமகள் கர்ப்பமாகவில்லையே...' என்ற கவலையில், 'டாக்டரிடம் போகலாம்...' என்றால், வரவே மாட்டாள்.
எவ்வளவோ பிடிவாதம் பிடித்து, அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றனர்.
'இருவரும் நார்மல்; எந்தப் பிரச்னையும் இல்லை...' என்றே டாக்டர்கள் கூறினர்.
அப்புறம்தான், கர்ப்பமானால் அழகு போய்விடும் என்பதற்காக, சரிகா, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தாள் என்ற விஷயம் தெரிந்தது. அதையும் கூட பொறுத்துக் கொண்டான் வசந்த். ஆனால், தங்கை கணவனுடன், அவள் அத்துமீறிப் பழகுவதை அறிந்து, துடித்துப் போனான்.
பெரிய தகராறு ஆகி, 'சீ...சீ... இந்த நாயை வெளியே துரத்துங்க...' என, துரத்தி விட்டனர் வசந்த் குடும்பத்தினர். இன்று இருவருக்கும், 'டைவோர்ஸ்' ஆகி விட்டது. தங்கையின் கணவனோ, இவளை எவ்வளவு, 'யூஸ்' பண்ண முடியுமோ அவ்வளவு, 'யூஸ்' பண்ணிவிட்டு, கைவிட்டு விட்டான்.
விஷயமறிந்த தங்கை, 'அடிப்பாவி... உன் மீது உள்ள பாசத்தில் உன்னை ஊர் சுற்ற அழைத்துச் சென்றேன். நீ என் மடியிலேயே கை வச்சிட்டியா?' என பேசி, ரகளை செய்து விட்டாள்.
தங்கையின் கணவனோ, 'எனக்கு நீதாண்டி முக்கியம்... உன் அக்காதான் என்னிடம் வலிய வந்தாள்; நான் என்ன செய்வது?' என்று, 'ப்ளேட்டை' மாற்றி விட்டான்.
சரிகாவின் கணவன், முன்பு, கறுப்பாக இருக்கிறாள் என்பதற்காக வேண்டாம் என்று சொன்ன, அத்தை மகளை மணந்து, சந்தோஷமாக இருக்கிறான்; குழந்தையும் உள்ளது.
தனக்கு அமைந்த மகாராணி போன்ற வாழ்க்கையை வீணடித்து, தங்களது சிறிய ஓட்டலுக்கு மாவு அரைத்து, பெற்றோருடன் ஒரு வேலைக்காரியை போல வாழ்கிறாள் சரிகா!
டியர் பட்டாம்பூச்சிகளே... சினிமா, சீரியல்களைப் பார்த்து, அதில் வரும் ஹீரோக்களின் சில்மிஷங்கள், வீர சாகசங்களைக் கண்டு மயங்கி, பல கற்பனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்களே வீட்டுக்கு போனால், நம்மை மாதிரி சாதாரண வாழ்க்கைதான் வாழ்கின்றனர் என்பதை மறந்துடாதீங்க. இப்படியெல்லாம் கற்பனை செய்ததால் தான், தனக்கு கிடைத்த ராஜ வாழ்க்கையை இழந்து, சீரழிகிறாள் சரிகா.
ஆண்களே... நீங்களும் உங்கள் மனைவியரின் ரசனைக்கேற்ப கொஞ்சம் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். அவர்கள் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பு கொடுக்காத போது, இப்படி சில ஆண்கள் பலவீனம் புரிந்து, வீழ்த்தி விடுகின்றனர். இதனால், எல்லாருக்குமே பாதிப்புதானே...
இன்றைய உலகில் பிறக்கும் குழந்தைகளே பல கற்பனை, கனவுகளோடு பிறக்கின்றன. அப்படியிருக்கும் போது, கணவன், மனைவி என்று ஆன பிறகு, ஒருவர் ரசனையை மற்றவர் புரிந்து, சற்று, 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டால், வெற்றி ஜோடிகள் பட்டியலில் நீங்களும் வலம்
வரலாம்!
—தொடரும்.
ஜெபராணி ஐசக்