தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பட்டாம்பூச்சிகளின் கதை! (9)

பட்டாம்பூச்சிகளின் கதை! (9)

பட்டாம்பூச்சிகளின் கதை! (9)


PUBLISHED ON : ஜூலை 31, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 31, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இனிய வாசகர்களே... 'பட்டாம்பூச்சிகளின் கதை எங்களுக்கு ரொம்ப, ரொம்ப பிடிச்சிருக் கிறது... உங்களிடம் நிறைய எதிர்ப்பார்க்கிறோம் ஜெபராணி...' என, எழுதியிருந்த வாசகர்களுக்கு, என் பணிவான வணக்கங்கள். இந்த வாரம், 'பெரிய' பட்டாம்பூச்சி ஒன்றின் அட்டகாசங்களைப் பற்றி பார்ப்போம்...

என் தோழியான இளம் பெண்ணின் பெயர் நந்திதா - பெயர் மாற்றியுள்ளேன். வெகு காலத்திற்குப் பிறகு தான், அவளால் தாயாக முடிந்தது. எப்பவும் சிரித்துக் கொண்டே இருப்பாள். அவளுடன் பிறந்தவர்கள், நான்கு சகோதரிகள். எனவே, அவர்கள் வீடே கூத்தும், கும்மாளமுமாக இருக்கும்.

கறுப்பாக இருந்தாலும், களையாக இருப்பாள். மாப்பிள்ளை பார்த்தனர்; கிடைத்தது ஒரு வரன். ஒரே பையன்; ஒரு நாத்தனார்... அவருக்கும் திருமணமாகி விட்டது. மாமியார் விதவை; அவர் ஆசிரியைப் பணியில் இருந்தார் என்றதும், பெண்ணைப் பெற்றோர் மகிழ்ந்தனர். 'ஆஹா... நந்திக்கு பிரச்னையே இல்லை. வயசான மாமியார், கணவர், இவள் மட்டுமே இருப்பர். மாப்பிள்ளை மிகவும் அடக்கமா இருக்கிறார். நம் மகள் நிம்மதியாக இருப்பாள்...' என நினைத்து, மகிழ்ந்தது நந்திதாவின் குடும்பம்.

இப்பெல்லாம் மாமியார், மாமனார் இல்லாத குடும்பத்தில், தங்கள் பெண்ணை கொடுக்கத்தான் எல்லாரும் விரும்புகின்றனர். அதாவது, இவங்க பொண்ணு புகுந்த வீட்டுக்கு போனவுடனே, எல்லாரும் காலியாகி விடணும்... தங்கள் பெண்ணும், மாப்பிள்ளையும் மட்டும் இன்பமாக இருக்கணும்ன்னு நினைக்கின்றனர்.

ஆனால், தன் வீட்டுக்கு வரும் மருமகள் மட்டும், தனக்கு அடங்கியவளாக குப்பை கொட்டணும். அவள் மட்டும் தனிக்குடித்தனம் போவதைப் பற்றி நினைக்கவே கூடாது; இது என்ன நியாயமோ...

சரி... விஷயத்துக்கு வருகிறேன்...

திருமணம் நடந்தது.

'நந்திதா... நீ ரொம்ப கொடுத்து வச்சவடீ...' என, சகோதரிகள் புகழ் பாட, இன்பமாக புகுந்த வீட்டில் நுழைந்தாள் நந்திதா. முதல் இரவை எப்படியெல்லாம் தள்ளிப் போடணுமோ, அப்படியெல்லாம் தள்ளிப் போட்டார் நந்திதாவின் மாமியார்; இதற்கு, நாத்தனாரும் உடந்தை. அவள் சீண்டி விடவும், மாமியார் ஆட்டமாக ஆடுவார்.

தன் கணவர் சரியான, 'அம்மாக்கோண்டு' என்பதை அறிந்து, அதிர்ந்தாள் நந்திதா. என்ன செய்வது? கணவருக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். ஆனால், படுக்கை அறை கதவை சாத்தினால் கூட, மாமியார் கோபப் படுவதைக் கண்டு, அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

கணவரும், 'சரிம்மா... சரிம்மா!' என்று தலையாட்டி, கதவை தாளிடாமல் இருப்பது, இவளை மிகவும் வேதனைப் படுத்தியது.

'என்னங்க இதெல்லாம்?' என்று கேட்டால், 'சப்தம் போட்டு பேசாதே... அம்மா காதுல விழுந்துடப் போகுது. அப்பா இல்லாததால், எங்கம்மா எங்களை எல்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்த்தாங்க தெரியுமா... அதனால, அவங்க மனம் கோணாம நடந்துக்க; எதிர்த்துப் பேசாதே. எங்கம்மாதான் எனக்கு முதலில்; அப்புறம் தான் நீ!' என்று சொல்லி இருக்கிறார் அவள் கணவர்.

'டொம்' என்று இதயத்தில் விழுந்த, முதல் அடியை தாங்கிக் கொண்டாள் நந்திதா.

'சரி... போக, போக எல்லாம் சரியாகும்...' என்று நினைத்தாள் நந்திதா; ஆனால், நிலைமை மோசமானது தானே தவிர, சரியாகவில்லை.

வீட்டுக்கு வந்த உறவினர், மாமியாரிடம், 'எப்படிம்மா இருக்கா புதுப் பொண்ணு?' என்று கேட்டால் போதும், 'ஹும்... என்னத்த சொல்றது... மகனுக்கு கல்யாணம் செய்து வச்சி, வீட்டுக்கு மருமக வந்தா, என் பாரம் குறையும்ன்னு பார்த்தேன்; ஆனால், உடம்புல புதுப்புது நோய் வந்துவிடும் போலிருக்கே!' என்றார்.

கிச்சனில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த நந்திதா, 'இது என்ன புதுக் கதையா இருக்கே... என்னதான் சொல்லப் போறாங்களோ...' என, பயந்தபடியே காத்திருந்தாள்.

'என்னம்மா... மருமகள் சமையல் நல்லா இல்லையா... சின்னப் பொண்ணு, இப்பதான் காலேஜ் முடிச்சிட்டு வந்திருக்கா... அவளுக்கு என்ன தெரியும்? நீங்க, உங்க கை பக்குவத்தை சொல்லித் தர வேண்டியது தானே!' என்றார் உறவினர். 'சமையல் பரவாயில்லை... ஏதோ வாயில வைக்கலாம்...' என்றார் மாமியார்.

இதைக் கேட்டு கொண்டிருந்த நந்திதாவுக்கு, துக்கம் நெஞ்சை அடைத்தது. தான் செய்யும் விதவிதமான சமையலை, வாரி வழிச்சி மாமியார் சாப்பிடும் காட்சிதான், நந்திதாவின் கண்ணில் வந்தது.

'அப்புறம் என்னம்மா பிரச்னை?' என்றார் உறவினர்.

'ராத்திரி எனக்கு நிம்மதியா, 'யூரின்' பாஸ் பண்ண முடியல... அப்படியே அடக்கி, அடக்கி வச்சிக்கிட்டு இருக்கேன். ரொம்ப மிஞ்சிப் போனா, பக்கெட்ல, 'யூரின்' போய், விடிஞ்சதும் வெளில கொட்டுறேன். சில நாள்ல யூரினை அடக்கி, அடக்கி வச்சே நீர் கடுப்பு வந்துடும் போலிருக்கு.

'உ<னக்குத்தான் தெரியுமே... சின்ன வயசிலேயே அந்தப் பாவி மனுஷன், என்னை விட்டுட்டு போயிட்டாரு. இந்த இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க, நான் எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன். அப்படி இருக்கும் போது, இவனும், மருமகளும் ரூம்ல போய், கதவ சாத்திக்கிறாங்க. அவங்க ரூம்ல தான் டாய்லெட் இருக்கு. வீட்டுக்கு வெளியில இருக்கிற டாய்லெட்டுக்கு நான் இரவு நேரத்தில் எப்படி போக முடியும். எல்லாம் என் தலையெழுத்து. அந்த மனுஷன் போனவுடனே நானும் போயிருக்கக் கூடாதா?' என்று பசப்பி இருக்கிறார். உறவினருக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவமானத்தில் சுருண்டு போனாள் நந்திதா.

நாத்தனார் ஒரு பக்கம் தம்பியை திட்டவும், பயந்து போன நந்திதாவின் கணவர், 'சரிம்மா... இனிமேல் படுக்கை அறையில் நீங்க படுத்துக்கோங்க!' என்று சொல்லி விட்டார்; பிறகு, ஹாலில் படுத்திருந்திருக்கின்றனர்.

அப்போதும், 'சரக், சரக்...' என, ராத்திரியில், பல முறை ஹாலுக்கு வந்து நடப்பதும், அதையும், இதையும் உருட்டுவதுமாக இருப்பாராம் மாமியார். பதறிப் போய், 'என்னம்மா... என்னத்த தேடுற...' என்று மகன் கேட்டால், 'தலைவலி தாங்கலடா... மாத்திரிரையை தேடுறேன். ஒரே கால் குடைச்சல்...' என்று புராணம் பாடுவாராம்.

உடனே, மகனும் எழுந்து போய், தலைவலி தைலம் தேய்ச்சு விடுவதும், காலை அமுக்கி விடுவதும், அப்புறம் அம்மாவுக்கு துணையாக அங்கேயே படுத்துக் கொள்வாராம்.

மாதங்கள் செல்லச் செல்ல, 'என்ன... விசேஷம் ஏதும் இல்லையா?' என, அனைவரும் கேட்க ஆரம்பிக்க, 'என்ன பரம்பரையோ தெரியல... எங்க பரம்பரையில் மறு மாதமே விசேஷமாகத்தான் இருக்கும்; என் மருமகளுக்கு மட்டும் நிக்கல... டாக்டர்கிட்ட தான் போகச் சொல்லணும்...' என்று பசப்பிருக்கிறார் மாமியார்.

இவ்வளவு நாட்களாக பொறுத்துக் கொண்ட நந்திதாவால், இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. கணவரிடம் சொல்லி அழுதிருக்கிறாள். 'சரி... விடு. இதையெல்லாம் பெருசு படுத்தாதே. எங்கம்மாவோட சந்தோஷம்தான் முக்கியம். நீதான், 'அட்ஜெஸ்ட்' பண்ணிக்கணும்...' என்று சொல்லியிருக்கிறார் கணவர்.

கடைசியாக, பெற்றோரிடம் சொல்லி அழுதிருக்கிறாள் நந்திதா. நொந்து போன பெற்றோர், மிகவும் கஷ்டப்பட்டு, வேறு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிக் கொடுத்தனர் மாப்பிள்ளைக்கு. கடைசியில், தனிக்குடித்தனம் வந்த பிறகுதான் கர்ப்பமானாள் நந்திதா.

இதை அறிந்து, 'மகனே... உடனே புறப்பட்டு வீட்டுக்கு வா!' என, மாமியாரின் மிரட்டல்களும், துண்டைக் காணோம் என கணவர் ஓடுவதும் தொடர்ந்தது. பிறகு, மகனுடனே சென்று தங்கி, நந்திதாவை பாடாய் படுத்திக் கொண்டு திரிகிறார்.

ஆமாம்... நானும் தெரியாமல்தான் கேட்கிறேன்... மகனுக்கு பொண்ணு பார்க்கும் போது மட்டும், அழகான, கலரான, உயரமான பெண் வேண்டும். அப்பதான் வீட்டுல பொறக்கும் வாரிசும் அழகாக இருக்கும் என நினைத்து, வலை போட்டு தேடி, பெண்ணை தேர்ந்தெடுத்து, ஊர்பட்ட சீர்வரிசைகளுடன், இவர்கள் கவுரவத்திற்காக பெரிய ஆடம்பரமான கல்யாண மண்டபத்தில் திருமணம் நடத்துவது... அப்புறம் கொள்ளை நகைகளுடன் பெருமையாக தன் உறவினர்களிடம் மருமகளைக் காட்டி பீத்திக் கொள்வது. அதன் பிறகு, தன் மகன், மனைவியிடம் பாசம் காட்டுவதை அறவே வெறுத்து, பல சதித் திட்டங்கள் தீட்டி பிரிக்க முயல்வது... இதெல்லாம் நடக்கும் என்பது முன்பே தெரியும்தானே. அப்புறம் எதுக்காக உங்கள் செல்ல மகனுக்கு கல்யாணம் கட்டி வைக்கிறீங்க?

'மகனே... உங்கப்பன் என்னை விட்டுவிட்டு போன பிறகு, உன்னை ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்தேன். உன்னை பிரிய மனமில்லை. அதனால், உனக்கு கல்யாணமே வேண்டாம்...'ன்னு சொல்லி, அம்மாக்கோண்டுவாவே வச்சிக்கிட்டு திரிய வேண்டியதானே...

தயவு செய்து ரொம்ப பாசம் காட்டி, உங்கள் செல்ல மகன்களின் சந்தோஷத்தை கெடுத்து விடாதீர்கள்.

அந்தந்த எல்லைக்குள், அவரவர் இருப்பதுதான் சந்தோஷமே... எல்லையை மீறினால் தொல்லைகள்தான் வரும்.

— தொடரும்.
ஜெபராணி ஐசக்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us