sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கடிதம் சொன்ன கதை!

/

கடிதம் சொன்ன கதை!

கடிதம் சொன்ன கதை!

கடிதம் சொன்ன கதை!


PUBLISHED ON : டிச 13, 2020

Google News

PUBLISHED ON : டிச 13, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டில்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பையும், ராணுவ மரியாதையும் ஏற்றார், குடியரசு தலைவர்.

விழா மேடையில் பல துறையில் சிறந்து விளங்கியவர்கள், சில துறையில் சாதனை புரிந்தவர்கள் அனைவருக்கும் விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கி, கவுரவப்படுத்திக் கொண்டிருந்தார்.

குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி வீரர், ராமர் பிச்சை, சிட்னியில் நடந்த உலக பாரா ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கிச் சுடும் போட்டியில், தங்கப்பதக்கம் வென்று, சாதனை புரிந்துள்ளார்.

ராமர் பிச்சைக்கு, இந்திய நாட்டின் விளையாட்டுத் துறையில், உயரிய விருதான, அர்ஜுனா விருதும், பயிற்சியாளர், தாமோதரனுக்கு, துரோணாச்சாரியா விருதும், ராமர் பிச்சையின் அம்மா பத்மாவதிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதும் கொடுக்கப்பட்டது.

பாராட்டு விழாவில் ராமர் பிச்சைக்கு, பரிசுத் தொகை கொடுத்து கவுரவப்படுத்தினார், தமிழக முதல்வர்.

விழா மேடையில், ராமர் பிச்சையை ஓரிரு வார்த்தைகள் பேசுமாறு கேட்டுக் கொண்டார், தொகுப்பாளர். அவருடைய வார்த்தைக்கிணங்க, தன் அம்மாவின் காலைத் தொட்டு ஆசி வாங்கி பேச வந்தான், ராமர் பிச்சை.

''ஒரு துறையில், கடின உழைப்பு, விடா முயற்சி, தன்னம்பிக்கை, பயிற்சி, இவை நான்கும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்தால், எல்லாரும் சாதனையாளர்கள் தான். அதற்கு, ஊனம் ஒரு தடையல்ல. ஊனம் என்பது உடம்பிற்கு தானே தவிர, மனதிற்கு அல்ல,'' என்று, அவன் பேசி முடித்தான்.

பார்வையாளர்கள் மற்றும் மேடையில் அமர்ந்திருந்தோர் என, அனைவரும் கை தட்டி, தங்களின் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

'ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்' என்ற குறள், அனைவரது குரல்வளையும் முணுமுணுக்க செய்வது போல் இருந்தது.

இதை பார்க்கும்போது, பத்மாவதிக்கு ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து, பழைய நினைவுகள், அவள் கண் முன்னே நிழலாடியது. இந்த சாதனைக்கு, திறமையும், விடா முயற்சியும் ஒரு புறம் இருந்தாலும், பத்மா பட்ட கஷ்டங்களும், அவள் செய்த தியாகமும் முழு காரணம்.

ராமர் பிச்சை, கருவில் இருக்கும்போதே, கணவனை இழந்து, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனையில், செவிலியராக பணிபுரியும் சாதாரண பெண் தான், பத்மாவதி.

பிரசவத்தின்போது ஏற்பட்ட ஜன்னி காரணமாக, பிறந்த சிசுவிற்கு இரண்டு காதுகளும் சரியாக கேட்கவில்லை. மேலும், முதுகு தண்டுவட முடக்குவாதம் ஏற்பட்டு, குழந்தையின் முதுகு சற்று புடைத்து, கூனல் விழுந்து காணப்பட்டது.

இது, அவளுடைய சோகத்தை மேலும் அதிகரித்தது. இருந்தாலும், அவள் தன்னம்பிக்கையை கை விடவில்லை. ராமர் பிச்சையை நன்றாக படிக்க வைத்து, பெரிய ஆளாக்க வேண்டும் என்று, வைராக்கியம் கொண்டாள்.

ஒருநாள், தபால்காரர் கொடுத்த கடிதத்தின் விலாசத்தை பார்த்தாள். அது, ராமர் பிச்சை படிக்கும் பள்ளியிலிருந்து வந்திருப்பது தெரிய வந்தது.

இதை தெரிவிக்க, ராமரை தேடினாள். அவன், பக்கத்து குடியிருப்பில், ஓய்வுபெற்ற ராணுவ வீரர், தாமோதரன் வீட்டில் இருந்தான்.

அங்கு வசிக்கும் சிறுவர்களுக்கு யோகா, தியானம் மற்றும் துப்பாக்கி சுடுவது போன்றவற்றிற்கு பயிற்சி அளிப்பார், தாமோதரன். அனைவரிடமும் அன்பாக பழகக்கூடிய நல்ல மனிதர். குறிப்பாக, மாற்றுத் திறனாளி, ராமரிடம் நெருக்கமாக பழகுபவர்.

தாமோதரன் வீட்டிற்கு சென்று, ராமர் பிச்சையிடம், 'நீ படிக்கும் பள்ளியிலிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது...' என்றாள், பத்மா; தாமோதரனும் உடன் இருந்தார். கடிதத்தை பிரித்தாள்.

'உங்கள் மகன், மிகவும் புத்திசாலி, திறமையானவன். விளையாட்டு துறையில் மிகவும் உற்சாகமானவன். ஆகையால், அவனுக்கு பாடம் சொல்லித் தரும் அளவிற்கு எங்களிடம் திறமையான ஆசிரியர்கள் இல்லை.

'அதனால், உங்கள் மகனை, வீட்டில் வைத்தே திறமையான ஆசிரியர் மூலம், கல்வி கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். இப்படிக்கு, பள்ளி ஆசிரியை ஜான்சி...' என்று, கடிதத்தை படித்து முடிக்கும்போது, அவள் கண்களில் நீர் கசிவதை பார்க்க முடிந்தது.

மறுநாள் காலை, உணவு சாப்பிட்ட பின், 'ராமர், இன்று நாம் இருவரும் மார்க்கெட் போய் காய்கறி மற்றும் மளிகை சாமான்கள் வாங்க, ரெங்கநாதன் தெருவுக்கு போவோம்...' என்று கூறினாள், பத்மா.

உடனே உற்சாகமானான், ராமர்.

மார்க்கெட்டில் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வரும் வழியில், சிறுவர்களை கவரும் வகையில் பலுான், காற்றாடி, கார் மற்றும் துப்பாக்கி ஆகிய அனைத்து பொருட்களையும் ஒரு முதியவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரிடம், 'என்ன விலை...' என்று பத்மா கேட்க, 'எது எடுத்தாலும், 100 ரூபாய்...' என்று கூறினார்.

'என்ன வேண்டும்...' என்று, ராமரை நோக்கினாள், பத்மா.

அவன் ஒரு கணம் யோசிக்காமல், 'துப்பாக்கி வேண்டும்...' என்றான்; வாங்கிக் கொடுத்தாள்.

அருகே, எடை பார்க்கும் இயந்திரம் இருந்தது. அதில், ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு ஏறி நின்றான், ராமர்.

அட்டையில், அவன் எடையையும், பின்புறம், 'அதிர்ஷ்டம் காத்திருக்கு...' என்ற வாசகமும் அச்சிடப்பட்டிருந்தது.

உடனே, 'அதிர்ஷ்டம் வரப் போகுதாம்மா...' என்று கேட்டான், ராமர்.

கத்திரிக்காய் வாங்கிய கூடையை இயந்திரத்தின் மீது வைத்து, ஒரு ரூபாயை போட்டாள், பத்மா. வந்த அட்டையில், 'காதல் கைகூடும்...' என்று அச்சிடப்பட்டிருந்தது.

'பார்த்தாயா... கத்தரிக்காய்க்கு ஏது காதல். எப்பவும் அதிர்ஷ்டத்தை நம்பி வாழக்கூடாது. உழைப்பு, தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும்...' என்று கூறி, ராமரை வீட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

வீட்டின் ஹாலில் அமர்ந்து, காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள், பத்மா. நாற்காலியில் உட்கார்ந்திருந்த ராமரிடம், 'ரொம்ப புழுக்கமாக இருக்கிறது. அந்த மின்விசிறியை போடு...' என்றாள். அவன், காதில் வாங்கிக் கொள்ளாதது போல், துப்பாக்கியை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

கோபத்தோடு மீண்டும், 'மின்விசிறியை போடு...' என்று சத்தம் போட்டாள், பத்மா.

உடனே, சற்றும் யோசிக்காமல், நாற்காலியில் அமர்ந்தபடியே துப்பாக்கியின் துணை கொண்டு சுட்டான். அந்த பிளாஸ்டிக் குண்டு, லாவகமாக, 'சுவிட்ச் ஆன்' செய்து, மின்விசிறி சுற்ற ஆரம்பித்தது. பத்மாவுக்கு ஒரே ஆச்சரியம்.

ராமரை கட்டியணைத்து, 'கண்ணே...' என்று அவன் கன்னத்தை இரு கைகளாலும் தடவி, சொடக்கு முறித்தாள்.

அன்றே முடிவெடுத்தாள். ராமரை பெரிய துப்பாக்கி சுடும் வீரனாக்க வேண்டும் என்று.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர், தாமோதரனிடம் பயிற்சி பெற்று, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் அனைத்திலும் பங்கேற்று, வெற்றி வாகை சூடினான், ராமர்.

சர்வதேச அளவில் பங்கேற்க, தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் நிதி திரட்டி, அனைத்து போட்டிகளிலும் வெற்றியடைந்தான். இவனுடைய அசாத்திய திறமை கண்டு, ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க, அனைத்து வகையான உதவிகளையும், தமிழக அரசு வழங்கியது.

பாரா ஒலிம்பிக் போட்டியில், முதன்முதலாக துப்பாக்கி சுடும் போட்டியில், தங்கப் பதக்கம் வாங்கும் முதல் இந்தியர் என்ற, சாதனையை படைத்தான்.

அடுத்து, ராமர் பிச்சையின் அம்மாவை பேச, அழைத்தனர். பழைய நினைவுகளில் இருந்து கலைந்தவள், சிறிது தயக்கத்முடன் மேடை ஏறி, 'மைக்'கை பிடித்து, பேச ஆரம்பித்தாள்...

''இந்த சுதந்திர தின மேடையில், மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கையை பணிவன்புடன் வைக்க நினைக்கிறேன். அது என்னவென்றால், மாநிலம் தோறும் பெரிய நகரங்களில், விளையாட்டு பயிற்சி பள்ளிகள் துவங்க வேண்டும். அவைகளில் முறையான பயிற்சி ஆசிரியரை வைத்து, அனைவருக்கும் இலவசமாக பயிற்சியளிக்க வேண்டும்.

''அப்படி, இந்த அரசு செயல்பட்டால், விளையாட்டுத் துறையில், அனைத்து போட்டிகளிலும் தங்கம் வெல்லலாம். இதை, அரசு செய்து கொடுக்குமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.

''மேலும், 'உபதேசம் சொல்லும் உதடுகளை விட, உதவிகள் செய்யும் கரங்களே உயர்வானது...' என்ற, அன்னை தெரசாவின் பொன்மொழிக்கேற்ப பரிசுத் தொகையை, உடல் ஊனமுற்றோர் பள்ளிக்கு நன்கொடையாக, நானும், ராமர் பிச்சையும் சேர்ந்து வழங்குகிறோம்,'' என்று சொல்ல, மீண்டும் ஒருமுறை, அரங்கம் அதிர கை தட்டல், காதை பிளந்தது.

நிகழ்ச்சி முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

பொழுது விடிந்து, எழுந்து கடிகாரத்தை பார்த்தான், ராமர். மணி, 8:00 ஆகியிருந்தது.

'அம்மா, 6:00 மணிக்கெல்லாம் எழுந்து விடுவாளே...' என்று, படுக்கையறையில் அவள் அருகே சென்று, 'அம்மா...' என்று தோள்பட்டையை அசைத்தான். துாக்கத்திலேயே, உயிர் அடங்கியிருந்தது.

'அம்மா...' என்று கதறினான். சத்தம் கேட்டு, பக்கத்து வீடு, எதிர் வீட்டுக்காரர்கள் மற்றும் பயிற்சியாளர் தாமோதரனும் வந்து, துக்கம் விசாரித்தனர்.

பத்மாவதியின் கையில், ஒரு டைரியின் நடுவே கடிதம் வைத்திருப்பது தெரிந்து, அதை எடுத்து பார்த்தான், ராமர்.

அந்த கடிதத்தின் விலாசத்தை பார்த்ததும், அவன் பள்ளியில் படிக்கும்போது, வந்த கடிதம் போல் தெரிந்தது. அதை எடுத்து, தாமோதரனும், ராமர் பிச்சையும் படித்தனர்.

அதில், 'உங்கள் மகன், யாருக்கும் மரியாதை கொடுக்க தெரியாதவன். படிப்பிற்கும் அவனுக்கும் ஆகவே ஆகாது. எது சொன்னாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டான். சுறுசுறுப்பு கிடையாது. மிகவும் அருவருப்பானவன். இவனையெல்லாம் வைத்து, அவன் பேருக்கு பின்னால் இருக்கும் பிச்சை கூட எடுக்க முடியாது...' என்று எழுதியிருந்தது.

அதை படித்ததும், ராமருக்கு, கண்ணீர் பெருக்கெடுத்தது. கண்ணீரை துடைத்து, கடிதத்தை திருப்பி பார்த்தான்.

அதில், 'காயம் ஏற்படுத்தும் உண்மையை விட, குணப்படுத்தும் பொய் மேலானது... இப்படிக்கு, பாசத்திற்குரிய தாய் பத்மாவதி...' என்று எழுதியிருந்தது.

அன்று, அம்மா வேறு விதமாக கடிதத்தை படித்தாளே என, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின்பு, அம்மாவின் காலை பிடித்து, ''என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே,'' என்று, அழுது புலம்பினான், ராமர்.

அவனை துாக்கி தன் தோளில் அணைத்து, ''சில நேரங்களில், தனிமையின் தவம் கூட வலிமையின் வரமாகும்,'' என தேற்றினார், தாமோதரன்.

எம். சிவராமன்

படிப்பு: பிளஸ் 2;

ஊர்: திருச்சுழி, விருதுநகர் மாவட்டம். கதை, திரைக்கதை, பாடல் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. மேலும் பல கதைகள் எழுத, இப்பரிசு உற்சாகம் அளிக்கிறது.






      Dinamalar
      Follow us