
இரண்டு கால்களையும் நீட்டி உட்கார்ந்து, வலி மருந்தை தடவிக் கொண்டிருந்தாள், பார்வதி.
மனைவியை பார்த்து, ''ரொம்ப வலிக்குதா, பார்வதி?'' என்றார், ராகவன்.
''வலி இருக்கத்தான் செய்யுது... என்ன செய்ய முடியும். டாக்டரிடம் போனா, இரண்டு முட்டியும் தேய்ஞ்சுடுச்சு, ஆபரேஷன் செய்யணும்னு சொல்றாரு... வேணுங்கிற வரை உபயோகப்படுத்தியாச்சு. இனி, இருக்கும் காலங்களை, தைலம், எண்ணெய்ன்னு தேய்ச்சு, சமாளிக்க வேண்டியது தான்,'' என, புன்னகைத்தாள்.
அவருக்கு, அவளிடம் பிடித்ததே, இந்த குணம் தான். எது வந்தாலும், அதை பெரிதுபடுத்த மாட்டாள்.
'வாழ்க்கையை வேணுங்கிற வரை திகட்டத் திகட்ட வாழ்ந்துட்டோம். அழகாக ஒரு பிள்ளை பிறந்தான். அவனை படிக்க வச்சு, ஆளாக்கி, கல்யாணமும் செய்து, இப்ப குழந்தை, குடும்பம்ன்னு, சிங்கப்பூரில் நல்லபடியாக வாழ்க்கை நடத்தறான்...
'எஞ்சியிருக்கிற காலத்தை, இருவருமாக ஓட்ட வேண்டியது தான். சின்ன சின்ன வலிகளை பெரிசுபடுத்த கூடாதுங்க... பாருங்க, நம்ப வயசில் இருக்கிற எத்தனையோ பேர், எத்தனையோ உடல் உபாதையுடன் சிரமப்பட்டுட்டு தான் இருக்காங்க. நமக்கு இருப்பது வலிகள் மட்டும் தான், சமாளிப்போம்...' என, பார்வதி சொல்லுவாளே தவிர, அவள் சிரமப்படுவதை பார்த்தால், கஷ்டமாக இருக்கும், ராகவனுக்கு.
கண்களில் சூரிய ஒளியின் பிரகாசத்துடன், தாங்கி நடந்தபடி வந்தாள், பார்வதி.
''என்ன விஷயம், பார்வதி... உன் மகன், ஏதும் சந்தோஷமான விஷயம் சொன்னானா... மொபைல்போனில் ரொம்ப நேரமா பேசிட்டு இருந்தே... யாரு பேசினது?''
''அண்ணனும், அண்ணியும் அமெரிக்காவிலிருந்து வர்றாங்களாம்.''
பார்வதியின் அண்ணன், 25 வயதிலேயே அமெரிக்காவில் குடியேறியவர். அவர் பிள்ளைகள், அந்த நாட்டு பெண்களை திருமணம் செய்து, அங்கேயே வாழ்க்கை நடத்த, அவரது வாழ்க்கையும் அங்கேயே நிரந்தரமானது. 70 வயது அண்ணன், வரப்போவதை நினைத்து, 60 வயது தங்கை, சந்தோஷப்படுகிறாள். இது தான் ரத்த பந்தம். உறவுகளை பார்க்க, இந்தியா வருகிறார்.
''எப்ப வர்றாங்க, பார்வதி?''
''அவங்க வயதுள்ள, நண்பர் குடும்பத்தினர் நாலு பேருடன், தமிழகத்தில் உள்ள கோவில்களை பார்க்க வர்றாங்க... நம் வீட்டில், இரண்டு நாள், அண்ணனும், அண்ணியும் என்னோடு இருக்கப் போறாங்க... எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா?''
''சரி... எப்ப வர்றாங்க... அந்த கேள்விக்கு, நீ இன்னும் பதில் சொல்லலையே?''
''அடுத்த வாரம் சனி, ஞாயிறு இங்கே தான் இருப்பாங்க... சரி, எனக்கு நிறைய வேலை இருக்கு. மீனாவை வச்சுக்கிட்டு, இன்னொரு, படுக்கையறையை தயார் செய்யணும்.
''அப்புறம், கொஞ்சம் ஊறுகாய், முறுக்கு எல்லாம் வாங்கி வைக்கணும். நாட்டு கத்திரிக்காய், வாழைக்காய், வாழைப்பூ, பீர்க்கங்காய்ன்னு வாங்கி சமைக்கணும்ங்க,'' சந்தோஷ குரலில் பேசியபடியே செல்லும் மனைவியை பார்த்தார்.
காரிலிருந்து இறங்கும், அண்ணனை எதிர்கொண்டு, கட்டியணைத்து, சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள், பார்வதி.
''வாங்க அண்ணி... பிள்ளைங்க, மருமகள்கள், பேரப் பசங்க நல்லா இருக்காங்களா?'' நலம் விசாரித்தாள்.
''பார்வதி... உடம்பு எப்படிம்மா இருக்கு?'' எனக் கேட்டார், அண்ணன்.
''வயசுக்குள்ள சின்ன சின்ன தொந்தரவுகள் இருக்கு. மத்தபடி நல்லா தான் இருக்கேன். நீதான் ரொம்ப மெலிஞ்சு போயிட்டே. இத்தனை வருஷம் கழிச்சு உன்னை பார்த்தது, எவ்வளவு சந்தோஷமாக இருக்கு தெரியுமா?''
''எனக்கும் தான், பார்வதி... என்ன செய்யறது... என் வாழ்க்கை அமெரிக்காவில்தான்னு ஆயிடுச்சு... சின்ன வயசில், உனக்கு எவ்வளவு நீள முடி இருக்கும். நீ பாவாடை, தாவணியில் இரட்டை ஜடை போட்டு ஸ்கூலுக்கு போனது, இன்னும் என் நினைவில் இருக்கு.''
''நீ மட்டும் என்னண்ணே... 'ஒயிட் அண்டு ஒயிட்'டில், பனியன் போடாமல், மெல்லிய 'டெர்லின்' சட்டை போட்டு, 'இன்' பண்ணி, கருப்பு, 'பெல்ட்' அணிந்து, நடிகர் சிவகுமார் மாதிரி இருப்பே,'' சொல்லி சிரித்தாள், பார்வதி.
இருவரும், பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அண்ணனும், அண்ணியும் வந்ததில், சிறு பெண் போல, ஓடி ஓடி, அவருக்கு பிடித்த ஆப்பம், அண்ணிக்கு குழிப்பணியாரம், காரச் சட்னி, மட்டன் மிளகு வறுவல் என்று, சமையலில் அசத்தினாள்.
ஒரு நாளைக்கு, பத்து தடவைக்கு மேல், கால் நீட்டி உட்கார்ந்து, தைலம் தடவும், பார்வதி, ஒரு தடவை கூட அப்படி செய்யாதது ஆச்சரியமாக இருந்தது, ராகவனுக்கு. வலி உபாதையில், உட்காரும்போதும், எழுந்திருக்கும்போதும், அவள் முகத்தில் தெரியும் வேதனை சுத்தமாக இல்லை.
''கோவிலுக்கு போயிட்டு வருவோமா, பார்வதி... உன்னால் நடக்க முடியுமா... கார் வரச் சொல்லலாமா?'' என்றார், அண்ணன்.
''எதுக்குண்ணே... பக்கத்தில் தானே... பேசிக்கிட்டே காலாற நடப்போம்.''
அண்ணன், அண்ணியுடன் சிரித்துப் பேசியபடி நடக்கும் மனைவியை, வியப்புடன் பார்த்தார், ராகவன்.
'இன்று, பிள்ளையாருக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடக்க போகுது. போயிட்டு வருவோமா, பார்வதி. உன்னால் நடக்க முடியுமா?'
'வேண்டாங்க, நீங்க போயிட்டு வாங்க... கஷ்டப்பட்டு வந்துடுவேன். அப்புறம், ராத்திரியெல்லாம் கால் உளைச்சல் அதிகமாயிடும். எனக்கும் சேர்த்து, நீங்க கும்பிட்டு வாங்க...' என்பாள்.
இப்படி சொல்லும், பார்வதி, இன்று, அண்ணன் கூப்பிட்டவுடன், சந்தோஷமாக போகிறாள். 'என்ன மாயம் இது... இந்த இரண்டு நாளில் அவள் கால் வலி எல்லாம் பறந்து போய்விட்டதா... கடவுளே, இப்படியே தொடர்ந்தால், எனக்கும் சந்தோஷம் தான்...'
அவர் மனம் பிரார்த்தித்தது.
''நாங்க கிளம்பறோம், பார்வதி... உங்களோடு இருந்த இரண்டு நாளும், மனசில் நிறைஞ்சு இருக்கு. அன்பும், பாசமுமா எங்களை நீங்க கவனிச்சுக்கிட்டதுக்கு நன்றி. பழைய நினைவுகளை உன்னோடு பகிர்ந்துகிட்டது, அந்த வயதுக்கே போயிட்டு வந்த திருப்தியை கொடுத்துச்சு!
''உடம்பு ஒத்துழைச்சா, கட்டாயம் இன்னும் இரண்டு வருஷம் கழிச்சு வரேன், பார்வதி!''
தங்கையிடம் அன்போடு விடைபெற்று சென்றார்.
கார் கிளம்பிய பின், கதவை தாழிட்டு உள்ளே வந்தார், ராகவன்.
தைல பாட்டிலுடன் வந்தவள், கால் நீட்டி உட்கார்ந்தாள்.
''என்ன பார்வதி... இரண்டு நாளாக மருந்து எதுவும் தடவலை. உன் முகத்தில், மலர்ச்சியை தவிர வேறு எதையும் பார்க்கலை. கால் வலி உன்னை விட்டு போயிடுச்சோன்னு நினைச்சேன்... வலிக்குதா?''
கணவனை நிமிர்ந்து பார்த்தவள், ''எங்கேயும் போகலைங்க... வலியும், வேதனையும் இருக்கத்தான் செய்தது. ஆனா, அதை, என் அண்ணன் மேல் நான் வச்சிருந்த பாசம் ஜெயிச்சுடுச்சு. மனசு முழுக்க நிறைஞ்சிருந்த, உறவின் இனிமையில், இந்த வலியின் உணர்வை மறந்திருந்தேன்...
''இப்ப, 'நான் எங்கேயும் போகல. உன்கிட்டே தான் இருக்கேன். என்னைக் கவனி'ன்னு சொல்லுது. அதான் மருந்து தடவறேன். கால் வீக்கம் கூட கொஞ்சம் அதிகமா தான் இருக்கு. இரண்டு நாள் ஓய்வு எடுத்தா சரியாயிடும்,'' என்றாள்.
வலியின் வேதனை முகத்தில் தெரிய சிரிக்கும் மனைவியை பார்த்தார், ராகவன்.
பரிமளா ராஜேந்திரன்