sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/நான் வந்த பாதை! (7)

நான் வந்த பாதை! (7)

நான் வந்த பாதை! (7)


PUBLISHED ON : ஜூன் 18, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2023


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!

டி.கே.எஸ்., நாடக குழு நிர்வாகிகளில் மூத்தவரான, டி.கே.சங்கரன் மிகவும் நல்லவர். என்னிடம் மிக அன்பு கொண்டவர்.

ஆனால், அவரிடம் ஒரே ஒரு குறை உண்டு. யாராவது இருவருக்குள் தகராறு ஏற்பட்டால், முதலில் எவன் போய் அவரிடம் புகார் செய்கிறானோ, அதை நம்பி, அடுத்தவனை அழைத்து எதுவும் விசாரிக்காமல் முரட்டுத்தனமாக தாக்கி விடுவார். அதனால், சிலர் சங்கடத்துக்கு ஆளானதும் உண்டு.

வைரவன் என்ற நடிகன், ஏதோ ஒரு தகராறில் என்னை மிகவும் தரக்குறைவாக பேசி விட்டான். கோபத்தில் அவனை அடித்து விட்டேன். அவன் அலறியடித்து, அபாரமாக நடித்து, டி.கே.சங்கரனிடம் ஓடிச்சென்று முறையிட்டான்.

கோபத்துடன் என்னை அழைத்து, எதுவும் விசாரிக்காமல், என் இடது கன்னத்தில் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அடித்தார், டி.கே.சங்கரன்.

அந்த பயங்கர அடியால் கண்ணில் ரத்தம் கொட்டத் துவங்கியது. உடனே, நான் மயக்கமானேன். மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

என்னை அடித்த, டி.கே.சங்கரன், மிகவும் சங்கடப்பட்டு, சிறிது காலத்துக்கு, தன் சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு போய் தங்கி விட்டார். அப்போது நடைபெற்று வந்த, 'அந்தமான் கைதி' நாடகம் தொடர்ந்து நடந்து வந்தது. அதில், நான் தான் கதாநாயகன். என் கதி இப்படி ஆகிவிட்டதால், டி.கே. ஷண்முகமே அந்த வேடத்தில் தொடர்ந்து நடித்தார்.

அடுத்த வாரம், 'நடிகன்' கையெழுத்துப் பிரதி, துணை ஆசிரியரால் தயாராகிக் கொண்டிருந்தது.

ஒருநாள், மருத்துவமனைக்கு வந்து, 'இந்த சமயத்தில், நீங்கள் ஏதாவது எழுதினால் தான், பத்திரிகை சுவை உள்ளதாக இருக்கும்...' என்றார், துணை ஆசிரியரான, ஆத்மநாதன்.

'ஒற்றைக் கண்ணன்' என்ற புனை பெயரில், நான் தாக்கப்பட்டு மருத்துவமனையில் படுத்திருக்கும் சம்பவத்தை நினைவுபடுத்தி, 'நிரபராதியின் தண்டனைக் காலம்' என்ற தலைப்பில், சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பினேன்.

அடுத்தநாள் மாலை, 'நடிகன்' கையெழுத்துப் பிரதியுடன் வந்து, நான் கண் விழிக்கும் வரை என் படுக்கைக்கு அருகில், அமர்ந்திருந்தார், டி.கே. ஷண்முகம்.

நான் விழித்ததும், 'நன்றாக துாங்கினாயா, டாக்டர் சொன்னபடி மருந்துகள் சாப்பிட்டாயா...' என, நலம் விசாரித்து, 'நடிகன்' பத்திரிகையை காட்டி, 'இதில், ஒற்றைக் கண்ணன் என்பவர் தாங்கள் தானோ...' என, கிண்டலாக கேட்டார். நானும், ஆமாம் என தலை அசைத்தேன்.

'ஏன்டா, கண் கட்டை அவிழ்த்துப் பார்த்தால் தானே நிலைமையை சொல்ல முடியும். அபாயக் கட்டத்தில் நீ இருக்கும் போது, இந்த வேலையெல்லாம் தேவைதானா... ஒரு வாரமாவது கண்களை அசைக்காமல் முழு ஓய்வு எடுக்க வேண்டுமென டாக்டர் கூறியிருக்கிறார்...' என, அறிவுறுத்தி, ஆறுதல் சொல்லிப் போனார். கண் கட்டு பிரிக்கும் வரை, சொந்த ஊரில் தங்கியிருந்தேன்.

ஒருவழியாக, கண்ணிலிருந்து கட்டு அவிழ்க்கப்பட்டது. நல்லவேளை, என் இரண்டு கண்களாலும் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. நடந்தவைகளை மறந்து, மறுபடியும் என் நடிப்புப் பணியை தொடரலாம் என்ற நம்பிக்கை வந்தது.

அப்போது, உடனே புறப்பட்டு வரும்படி, டி.கே.எஸ்., நாடகக் குழுவிலிருந்து கடிதம் வந்தது. எனக்கோ உடல்நிலை சரியில்லை. அப்படியும் புறப்பட தயாரானேன்.

உடனே, பெரியவர்கள் சிலர், 'பையனுக்கு மணல் வாரி அம்மை போட்டிருக்கிறது. குணமானவுடன் தலைகுளித்து தான் வெளியூர் போக வேண்டும்...' என்றனர்.

அந்த நிலையில் என்னை அனுப்ப கண்டிப்பாக மறுத்து விட்டார், அம்மா. இந்த விபரத்தை விளக்கி, நாடக சபா நிர்வாகிக்கு கடிதம் எழுதினேன்.

என் உடல் நிலை சரியானதும், நான் கோவைக்கு புறப்பட்டு சென்றேன்.

'சட்டையை கழற்று...' என்றார், என்னை அடித்து காயப்படுத்திய, டி.கே.சங்கரன்.

என் உடலை உற்று கவனித்து, 'ஏன்டா, அம்மை நோய் என்று பொய் சொல்கிறாய்... தழும்பையே காணோமே...' என, சத்தம் போட்டார்.

'எனக்கு வந்தது, மணல் வாரி அம்மை. வியர்குரு மாதிரி வந்து, மறைந்து விடும். கிராமத்தில், விளையாட்டு அம்மை என்று சொல்வர்...' என, விளக்கி சொன்னேன்.

'அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ பொய் சொல்கிறாய். நீ செய்த குற்றத்துக்கு, மன்னிப்பு கேட்டு விட்டு, நாடக குழுவில் இரு. இல்லையேல் வெளியே போய்விடு...' என்றார்.

'செய்யாத குற்றத்துக்காக மன்னிப்பு கேட்க, நான் தயாராக இல்லை. நாடக குழுவிலிருந்து விலகிக் கொள்ள தயாராயிருக்கிறேன்...' என்றேன்.

அவர், அந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், முக்கியமான வேடங்களில் நடிக்கிறவன், நான்.

'நன்கு சிந்தித்து, நாளை காலையில் வந்து சொல்...' என்றார்.

அன்று இரவு கழிந்தது. காலையில் எழுந்தவுடன், என் பெட்டி, படுக்கைகளை கட்டி, புறப்படும் நிலைக்கு தயார் செய்திருந்தேன்.

திருச்சியில் இருக்கும் போது, நான் செய்த சிறிய குற்றத்துக்காக, அவர் கடுமையாக தாக்கியதால், வாழ்நாள் முழுவதும் ஒரு கண் இழந்தவனாகவே வாழ வேண்டி வருமோ என்ற அச்சம் ஏற்பட்டபோது கூட, நான் இவ்வளவு சங்கடப்படவில்லை.

காலையில் அவரது அலுவலகம் சென்றேன்.

'என்ன?' என்றார்.

'நான் செய்யாத குற்றத்துக்காக மன்னிப்பு கேட்டு, மீண்டும் இக்குழுவில் நீடிக்க விரும்பவில்லை. ஆகவே, தங்கள் நாடக குழுவிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்...' என்றேன்.

பிறகு, என் கணக்கு வழக்கு தீர்க்கப்பட்டது.

நாடக குழுவில் இருந்த பெரும்பாலோர் சங்கடப்பட்டனர். சிலர் அழுதனர்.

'அவசியம் நீ போகத்தான் வேண்டுமா?' என, கவலையுடன் கேட்டார், டி.கே. ஷண்முகம்.

'முடிவெடுத்தாகி விட்டது...' என்றேன்.

'சரி, எங்கே போகப் போகிறாய்?'

'இந்த இடத்தை விட்டு வெளியேறிய பிறகு தான் சிந்திக்கப் போகிறேன்...' என்றேன்.

'நீ எப்போது வேண்டுமானாலும் இங்கே வரலாம்...' என்றார்.

'நன்றி, வணக்கம்...' எனக் கூறி, என் பெட்டி, படுக்கையுடன் குதிரை வண்டியில் ஏறி, கோவை ரயில்வே ஸ்டேஷன் போய் இறங்கினேன்.

அடுத்து எங்கே சென்றேன் தெரியுமா?

- தொடரும்

எஸ். எஸ். ராஜேந்திரன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us