sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இவளா என் தோழி!

/

இவளா என் தோழி!

இவளா என் தோழி!

இவளா என் தோழி!


PUBLISHED ON : பிப் 16, 2020

Google News

PUBLISHED ON : பிப் 16, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பவே முடியவில்லை, ஜானகியால். தன் உயிர் தோழியாய், தான் நம்பிக் கொண்டிருந்த, பாமாவின் அண்ணன் ராஜா, தன்னை காதலிப்பது தெரிந்ததும், மகிழ்ச்சி அடையாமல் அவள், அதிர்ச்சியடைந்ததை, துல்லியமாய் வெளிப்படுத்தியதாய் தோன்றியது, ஜானகிக்கு.

பாமாவின் அந்த வெளிப்படையான அதிர்ச்சி, இவளை சொல்ல முடியாத ஏமாற்றத்தில் அமிழ்த்தியது.

'சிலர் அப்படித்தான். என்னதான் உயிருக்கு உயிராய் பழகி வரும் தோழியே ஆனாலும், தன் அண்ணனால் அவள் காதலிக்கப்படுவது தெரிந்ததும், அவளுக்குள் பொறாமை கிளர்ந்து விடும். சந்தர்ப்பம் வரும்போது தான், மனிதர்களுடைய உண்மையான தன்மைகள் வெளிப்படுகின்றன...' என, எண்ணியவாறு, தன்னுள் பொருமினாள், ஜானகி.

அதே நேரம், தன் எண்ணத்தை பாமாவிடம் மறைக்கவும், அவள் விரும்பவில்லை. அவள் வீட்டில், அண்ணியாய் வந்து வாழ போகிறவள். ராஜாவின் பெற்றோர் பற்றிய கவலையோ, ஐயமோ துளியுமில்லை அவளுக்கு. ஏனெனில், இருவருக்குமே அவளை ரொம்ப பிடிக்கும்.

மேலும், தன் தோழி ஏன் உற்சாகம் காட்டவில்லை எனும் கேள்விக்கு, 'ஒரே அண்ணனின் அன்பு முழுவதையும் அபகரிக்கப் போகிறவள் எனும் பொறாமை தான் பதிலாக இருக்க முடியும்...' என்று, அவளுக்கு தோன்றியது. தன் ஐயத்தை வெளிப்படையாகவே கூறி தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினாள், ஜானகி.

''நேத்து, பஸ் ஸ்டாப்ல, உன் அண்ணன தற்செயலா சந்திச்சப்ப, பக்கத்துல யாரும் இல்லாததால, மனசு விட்டு ஒரு விஷயம் சொன்னாரு... 'அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சிருக்குதாம்... கல்யாணம் பண்ணிக்க சம்மதமா'ன்னு கேட்டாரு,'' என்று வெட்கப்பட்டவாறு, பாமாவிடம் அவள் தெரிவித்தபோது, வெளிப்படையாகவே அதிர்ந்தது தெரிந்தது.

மலர்ச்சியே காட்டாமல் இருந்ததன் பின்னணியை தெரிந்து கொள்ள விரும்பி, ''என்ன, பாமா... ஒண்ணுமே சொல்லாம இருக்கியே... உனக்கு பிடிக்கலியா,'' என்று கேட்டாள், ஜானகி.

அதன் பின்பே சுதாரித்தாள், பாமா.

''சேச்சே... எனக்கு ரொம்ப சந்தோஷம்தாண்டி, ஜானகி. சந்தோஷ அதிர்ச்சியில வாயடைச்சு போயிட்டேண்டி... தப்பா எடுத்துக்காத. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ, என் மனமார்ந்த வாழ்த்துகள். ஆனா, உங்க வீட்டுல ஒத்துக்கு வாங்களாடி?'' என்று, அவளின் கையைப் பிடித்து குலுக்கினாள்.

ஆனால், அந்த தொடுகையில் போலித்தனமே ததும்பியதாக எண்ணிய ஜானகி, ''பிடிவாதம் பிடிக்க வேண்டியது தான்,'' என்றாள்.

ஏழை குடும்ப பெண்ணான பாமாவுடன் பழகுவதையே ஏற்காத பெற்றோர், திருமணத்துக்கு இணங்குவரா எனும் கேள்வியால் அதிர்ச்சியுற்றதாய் அவள் சொன்ன பதில், வெறும் சமாளித்தலே என்பது உள்ளுணர்வாய் தோன்றியது, ஜானகிக்கு. அதே நேரத்தில், தான் ஊகிப்பது தவறாகவும் இருக்கலாம் என்றும் நினைத்தாள்.

இரண்டு நாளில் அவளுக்கு, தட்டச்சு செய்த ஒரு மொட்டை கடிதம் வந்தது. அதில், 'நீ மணக்க போகும் ஆளுக்கு, 'எய்ட்ஸ்' நோய் உள்ளது. கவனம்...' எனும் இரண்டே வரிகள் இருந்தன. அவளுக்கு உடனே, பாமாவின் மீதுதான் ஐயம் ஏற்பட்டது.

இருப்பினும், ராஜா, தன் நண்பன் யாரிடமாவது சொல்லி இருந்திருக்க கூடும் என்ற எண்ணமும் வந்தது. அவன் நண்பர்களில் சிலர், ஜானகியிடம் வழிந்ததுண்டு என்பதால், தோழியின் மேல் அவசரப்பட்டு சந்தேகப்படக் கூடாது என்றும் எண்ணினாள்.

தனக்கு இப்படி ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளதை, ராஜாவிடமே சொன்னால் என்ன என்ற கேள்வியும் அவளுள் எழுந்தது. எனினும், அந்த தகவல் உண்மையாக இருந்தால், 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை...' என்று, அவன் பொய் சொல்லக் கூடுமோ எனும் ஐயமும் தோன்ற, குழம்பி தவித்தாள்.

'பாமாவின் மேல் ஏற்பட்ட ஐயம், உண்மையாக இருப்பின், அவளிடம் விஷயத்தை சொன்னால், அதை கேட்கும்போது அவள் முகம் மாறும். அதை கவனிக்கும் வாய்ப்பும் கிடைக்குமே...' என, எண்ணினாள். எனவே, அந்த மொட்டை கடிதத்தை, பாமாவிடம் காட்டும் முடிவுக்கு வந்தாள்.

மறுநாள் -

''பாமா... உங்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். இந்தா, இதை படிச்சு பாரு. நேத்து எனக்கு வந்த இந்த மொட்டை கடிதம். யாரோ பண்ணின விஷமம்ன்னு தோணுது,'' என்றவாறே கொடுத்தவள், தன் ஆழமான ஆராய்ச்சி பார்வையை, அவள் மீது பதித்தாள்.

கடிதத்தை படித்து, ஜானகியிடம் திருப்பி கொடுத்த, பாமாவின் முகம் இறுகியிருந்தது. அவள் எதிர்பார்த்த அதிர்ச்சிக்கு மாறாக, அதில் வேதனை தான் தெரிந்தது.

''என்ன பாமா... இது, யாரோட விஷமத்தனமா இருக்கும். ராஜாகிட்ட நான் இன்னும், இதை காமிக்கலே. அவன், யார்கிட்டயாவது, என்னை கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்லி இருப்பானோ... அந்த ஆள் தான், இப்படி ஒரு விஷமத்தனத்தை பண்ணியிருப்பானோ?'' என்றாள்.

''அது, விஷமத்தனம் இல்லடி, ஜானகி. அண்ணனுக்கு, 'எய்ட்ஸ்' இருக்கறது உண்மை தான். ஆனா, அவனுக்கே அது இன்னும் தெரியாது. அவன் ரொம்ப நியாயமானவன்; மனசாட்சி உள்ளவன். அதான் உன்கிட்ட, தன் விருப்பத்தை சொல்லியிருக்கான். தெரிஞ்சிருந்தா, உங்கிட்ட கேட்டே இருந்திருக்க மாட்டான்.

''அவனுக்கு, 'எய்ட்ஸ்' எப்படி வந்துச்சுன்னு யோசிக்கிறேல்ல... தப்பான வழிக்கு போறவங்களுக்கு தான் அது வரும்ன்னு இல்ல. நடத்தை கெட்டவங்க சிலர், ரத்த வங்கிகள்ல ரத்தம் குடுத்து, காசு வாங்கிட்டு போறாங்கல்ல... அவங்ககிட்டே இருந்தும், மருத்துவமனையில் ஊசி போட்டுக்கிறவங்களுக்கும், ரத்தம் ஏத்திக்கிறவங்களுக்கும் பரவலாம்.

''இந்த காலத்துல, பணம் தான் பிரதானமாயிருக்கு... ஒருத்தனுக்கு வியாதி, வெக்கை இருக்குதான்னு முதல்ல அவனோட ரத்தத்தை சோதிச்ச பிறகு, ரத்த வங்கியில சேமிக்கிறாங்களா என்ன... அன்னைக்கு ஒரு தரம், நானே என் காதால கேட்டேன்.

''நர்சிடம், 'அந்தாளுக்கு, 'எய்ட்ஸ், கிய்ட்ஸ்' ஏதாச்சும் இருக்கான்னு விசாரிச்சுட்டு, அப்பால அவனோட ரத்தத்தை வாங்குங்க...' என்றார், ஒரு டாக்டர். 'சோதனை பண்ணின பிற்பாடு வரச் சொல்லுங்க'ன்னு சொல்லல, அந்த டாக்டர் படுபாவி.

''சில நாள் முந்தி, எங்க அண்ணனுக்கு, 'டைப்பாய்டு' வந்தப்ப, அவனுக்கு நிறைய ஊசி போட்டாங்க, ரத்தமும் ஏத்தினாங்க. அப்பதான் அவனோட உடம்புல, 'எய்ட்ஸ்' தொற்றி இருந்திருக்கணும்,'' என்று, நீண்ட விளக்கம் அளித்த, பாமா, கண்களை துடைத்து கொண்டாள்.

அதிர்ச்சியுடன் எச்சில் விழுங்கிய, ஜானகி, ''அது சரி... ஆனா, உங்க அண்ணனுக்கு, 'எய்ட்ஸ்' இருக்குதுன்ற விபரம், உனக்கு எப்ப தெரிஞ்சுச்சு?'' என, வினவினாள்.

''கொஞ்ச நாளுக்கு முன், எங்கண்ணனும், நானும் ரத்த தானம் செய்யிறதுக்காக, ரத்த சேமிப்புக்கு அழைப்பு விடுத்திருந்த ஒரு சேவை மையத்துக்கு போனோம். எங்க ரெண்டு பேரிடமிருந்தும், சோதனைக்காக ரத்த, 'சாம்பிளை' எடுத்துகிட்டவங்க, அடுத்த ஞாயிற்றுக் கிழமை வரச்சொன்னாங்க.

''அண்ணனால அன்னைக்கு வரமுடியல. நான் மட்டும் போனேன். அப்பதான், அண்ணனுக்கு, 'எய்ட்ஸ்' இருந்த விபரத்தை, அவங்க சொல்லி வருத்தப்பட்டாங்க. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாவும், வேதனையாவும் இருந்துச்சு. எங்க அம்மா - அப்பாகிட்ட கூட, நான் விஷயத்தை சொல்லல, ஜானகி. அழுதுகிட்டிருந்தேன்.

''எப்படியும் சொல்லித்தானே ஆகணும். கூடிய சீக்கிரம் சொல்லிடணும்ன்னு தான் இருந்தேன். ஏதாச்சும், 'ட்ரீட்மென்ட்' எடுக்கணுமில்ல... ஆனா, அதுக்குள்ள அவன், உன்கிட்ட தன் எண்ணத்தை சொல்லிட்டான்,'' என்றாள், பாமா.

''சரி, அந்த ஞாயிற்றுக் கிழமை, ரத்தம் குடுக்க போக முடியாத உங்கண்ணன், அதுக்கு பிறகு அங்க போகவே இல்லியா?''

பொங்கி வந்த கண்ணீரை துடைத்தபடி, ''இல்ல... ஏன்னா, அவனுக்கு, சமீபத்துல, 'டைப்பாய்டு' வந்திருந்தது பத்தி பேச்சு வாக்குல நான், டாக்டர்கிட்ட சொன்னதாவும், அதனால, 'அவன், இப்போதைக்கு ரத்த தானம் பண்ணக் கூடாது; உடம்பு ரொம்ப வீக்காயிடும்'ன்னு, அவரு சொன்னதாவும், அவன்கிட்ட தற்காலிகமா ஒரு பொய்யை சொல்லி வெச்சேன். கூடிய சீக்கிரம் மனசை திடப்படுத்திக்கிட்டு, அவன்கிட்ட உண்மையை சொல்லிடுவேன்,'' என்றாள், பாமா.

''அப்படின்னா, இந்த மொட்டை கடிதத்தை தட்டச்சு செய்து, எனக்கு அனுப்பியது நீ தானா?''

''நான் தான். உன் நெடுநாள் தோழின்ற முறையில, என் கடமையை நான் செய்யணும்ல்ல,'' என, கண் கலங்கிய பாமாவை, பாய்ந்து அணைத்து, தானும் கண் கலங்கினாள், ஜானகி.

ஜோதிர்லதா கிரிஜா






      Dinamalar
      Follow us