sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது பொம்மைகளின் உலகமல்ல!

/

இது பொம்மைகளின் உலகமல்ல!

இது பொம்மைகளின் உலகமல்ல!

இது பொம்மைகளின் உலகமல்ல!


PUBLISHED ON : ஏப் 19, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''அக்கா,'' என்ற பவானியின் குரலில் இருந்த குழைவே, சுமதிக்கு எரிச்சலை வரவழைத்தது.

''என்ன, 'லீவா...' எத்தனை நாளைக்கு?''

''ஆமாக்கா... இங்கதான் லால்பேட்டைல, ஓரகத்தி வூட்டு கல்யாணம்... நாளைக்கு போய்ட்டு நாளன்னிக்கு வந்துடுவேன்க்கா,'' மேலும் குழைந்தாள், பவானி.

''மொத்தத்துல மூணு நாள், 'லீவு' அதானே?''

''அய்யோ, இல்லக்கா... ரெண்டு நாள் தான்... கண்டிப்பா போய்த்தான் ஆகணும்; இல்லாட்டி ஓரகத்தி பிரச்னை பண்ணும்.''

''இதோ பாரு பவானி... நமக்கே ஒரு நியாயம் வேணும், வாங்குற சம்பளத்துக்கு உண்மையா இருக்கணும். இப்பதான் கால் வலின்னு முந்தாநாள், 'லீவு' போட்டே. போன வாரம், பையன் ஸ்கூல்ல வர சொன்னாங்கன்னு, 'லீவு!' இன்னும், 10 நாள் இருக்கு மாசம் முடியறதுக்கு...

''உன் சம்பளத்துல, ஒரு பைசா கூட பிடிக்கறதில்லே... உனக்கா தெரிய வேண்டாமா, தேவைன்னுதானே வேலைக்கு ஆள் வெச்சிருக்கேன்... சொல்லு.''

தலையை சொறிந்தபடி, ''இனிமே, 'லீவு' போடாம பாத்துக்கறேம்மா,'' என்றாள், பவானி.

''சரி, வேலைய முடி... இன்னிக்கு, 'மீட்டிங்' இருக்கு... ஆபீசுக்கு அரைமணி நேரம் முன்னாடி போய் தொலையணும்,'' என்றபடியே, அடுக்களைக்கு போனாள், சுமதி.

'ரெகார்டு நோட்'டில் வரைந்தபடி,''100 ரூபா எடுத்து வைம்மா... ஸ்கூல் போகும்போது எடுத்துட்டுப் போகணும்,'' என்றான், கதிர்.

''என்ன... 100 ரூபாயா, இப்பதானே, 300 ரூபா வாங்கிட்டு போனே?''

''அது, அறிவியல் கண்காட்சிக்கு. நாங்க, அறிவியல் புத்தக விற்பனை கடை போட போறோம்... ௧௦௦ ரூபாய், எங்க ஸ்கூல்ல, 'ஸ்கிரீன்' பண்ணப்போற, 'வால்ட் டிஸ்னி' படத்துக்கு... பேரு, 'டாய் ஸ்டோரி' - பொம்மைகள் உலகம்... ரொம்ப அருமையா இருக்கும்.''

''கட்டாயம் எல்லாரும் பாத்தே ஆகணும்ன்னு சொல்றாங்களா ஸ்கூல்ல?''

''அப்படி இல்லம்மா.''

''அப்புறம் என்னடா, பணம்கிறது... இலவசம் இல்லேடா... நம் ரத்தத்தை உறிஞ்சுற ராட்சசன்... ஆபிஸ்ல, முதுகு ஒடிஞ்சு போகுதுடா... அவ்வளவு பைல் பாக்குறேன்... இப்படி என் தலைல எல்லா சுமையையும், அப்பா கொட்டிட்டு போவார்ன்னு, ஒருநாளும் நான் நெனச்சதே இல்லேடா,'' என்றாள், வழுவழு குரலில்.

''நான் சுமையா அம்மா?'' என்றான், கதிர்.

''அய்யோ, அப்படி இல்லடா... நீ சின்ன பையன்... எனக்கு எவ்வளவு பிரச்னைகள்ன்னு உனக்கு புரியாது... சரி, உனக்கு ரொம்ப ஆசைன்னா அலமாரில, அப்பா படத்துகிட்ட வைக்கிறேன்.''

''வேண்டாம், அடுத்த முறை பாத்துக்கலாம். ரொம்ப முக்கியம் இல்லம்மா. நான் கிளம்பறேன் நேரமாச்சு,'' என்று குளியலறைக்குள் சென்ற மகனை அலுப்புடன் பார்த்து, அடுப்பு வேலைகளை முடித்தாள்.

வாசலில் பால்காரர் வரவே, ''என்ன தாத்தா... இன்னிக்கு, 'லேட்'டா?'' என்று, பாத்திரத்தை எடுத்து விரைந்தாள்.

''ஆமாம்மா... கொஞ்சம் தாமதமாயிருச்சு,'' என்றார்.

''அய்யோ, இதென்ன பால் இவ்வளவு தண்ணியா இருக்கு... தாத்தா, அநியாயம் செய்றீங்களே.''

''இல்லம்மா... கன்னு போட்ட மாட்டு பால், அப்பிடித்தாம்மா இருக்கும்... ஆனா, ரொம்ப நல்லது... தம்பிக்கு கொடுங்க.''

''அதெல்லாம் சரி... இவ்ளோ தண்ணி பாலை குடிச்சு தான் தீக்கணும்... அப்புறம், மோருக்கு என்ன பண்றது தாத்தா... இப்படி பச்ச தண்ணியாதான் ஊத்துவீங்கன்னா, இனிமே வேணாம்.''

''அய்யோ கோவிக்காதீங்க... பாக்கறேம்மா,'' என்று, தலை குனிந்து போன பெரியவரை பார்த்தபடியே, கோபத்துடன் உள்ளே வந்தாள்.

இதென்ன எல்லாரும் தன்னை இப்படி ஏய்க்கின்றனர் என்று தொண்டை அடைத்து, துக்கம் பொங்கியது. முரளியின் மேல் தாங்க முடியாத வருத்தம். இப்படி ஒரு நெருக்கடியில் அவளையும், கதிரையும் விட்டுப் போகிற அளவுக்கு என்ன அவசரம் அவனுக்கு... வண்டியை, 100 கி.மீ., வேகத்தில் ஓட்டு என்று யார் கட்டளையிட்டனர்... குடும்பத்தின் நினைவு இருக்க வேண்டாமா...

இத்தனை வேதனையிலும் ஒரு நல்ல வாய்ப்பாக கருணை அடிப்படையில், அவனுடைய வேலை, அவளுக்கு கிடைத்தது. மானமுடன் வாழவும், மூன்று வேளை உண்ணவும், கதிரை படிக்க வைக்கவும் முடிகிறது. ஆனால், மனதில் நிம்மதி, மகிழ்ச்சி இல்லை.

வாழ்வில் தோற்றுப்போய் விட்டதாலா... அவளாக எதையும் செய்யவில்லையே. தானாக நடப்பதை மாற்ற முடியாதே. அவளுக்கும் தெரியுமே இது. ஆனாலும், ஏன் வாய்விட்டு சிரிக்க முடியவில்லை, கண் மூடி அமைதியாக இருக்க முடியவில்லை. எதை எதையோ சகித்து, வருவதையெல்லாம் கேள்வி கேட்காமல் ஏற்று, நெஞ்சில் பாரத்துடன் வாழ்வதுதானா வாழ்க்கை!

கோப்புகளில் பாதியை முடித்து, ஒரு கோப்பை தேநீருக்காக எழுந்தபோது, அவளது தோழி ரம்யா அலைபேசியில் அழைத்தாள்.

''ரம்யா, எப்படி இருக்கே?'' என்ற சுமதிக்கு, தோழியின் நினைவு மனதை நெகிழ்த்தியது.

முரளியின், இறப்பு சான்றிதழ் வாங்க போன இடத்தில் தான், ரம்யாவை பார்த்தாள். அவளுக்கும் அதே நிலைமை. மன வேதனையில், அதே வேலைக்காக தான் வந்திருந்தாள்; பள்ளித் தோழி. அவள் கணவன், மது போதையில் சிக்கி, உடல் கெட்டு, அநியாயமாக தன்னை பலி கொடுத்திருந்தான்.

இரண்டு தோழிகளும் மனம் கலங்கி, ஒருவர் கையை ஒருவர் இறுக்கிப் பிடித்து கண்ணீர் வடித்தனர். அவள் பெண் குழந்தை ரித்தினி, அழகாக, சிரித்த முகமாக இருந்ததை பார்க்க பார்க்க, நெஞ்சு வலித்தது.

''சொல்லு, ரம்யா... சாரிம்மா, ஏதேதோ வேலைகள்... உன்கிட்டே பேசி எவ்வளவு நாளாச்சு?'' என்றாள் மனத் தாங்கலுடன்.

''ஆமாம், சுமதி... நானும், உன்னை நெனச்சுகிட்டே இருப்பேன்... வேலை வேலைன்னு முழு நாளும் பத்தறதில்லே... வர வெள்ளிக்கிழமை வீட்டுல சின்னதா ஒரு, 'பங்ஷன்' வெச்சிருக்கேன்... கண்டிப்பா, நீயும், கதிரும் வரணும்... எந்த சாக்கும் சொல்லக் கூடாது.''

''அப்படியா... நிச்சயமா வரேன்; ரித்தி குட்டி, எப்படி இருக்கா?''

''ஒரே சேட்டை... இப்ப தான்,

யு.கே.ஜி., போறா... வந்து பாரு... கதிர், நல்லா படிக்கிறானா... வாலிபால் விளையாடுவான்ல?''

''ஆமாம்... சரி, ரம்யா... மானேஜர் முறைக்குறாரு... சந்திக்கலாம், பை பை.''

வீட்டு வாசலில் இறங்கியதுமே, ஓடி வந்தாள், ரம்யா.

''வா, சுமி... கதிர் கண்ணா, வளர்ந்து, குட்டி அஜித் மாதிரி இருக்கியே வா,'' என்று சிரித்தபடியே அழைத்துப் போனாள்.

வீடு மிகச் சிறியது தான். ஆனால், விழாக்கோலம் தரித்து, மிக அழகாக மாறியிருந்தது. சிறிய மாவிலை தோரணங்களும், சின்னஞ்சிறு வாழைக்கன்றும் ஓவியம்போல நிலைப்படியில் ஆடிக் கொண்டிருந்தன.

உறவென்று சொல்லிக் கொள்ள, வயதான தாயார் தவிர, ரம்யாவுக்கு யாருமில்லை. ஆனால், இன்று, வீடு முழுக்க பெண்கள் கலகலவென்று பேசியும், சிரித்தும் இருந்தனர். எல்லா வயதிலும் இருந்த அந்த முகங்களை பார்த்து திகைத்தாள், சுமதி.

யார் இவர்கள்... ரம்யாவின் உறவுகள் இல்லை, நட்பா... அப்படி நட்புக்காக மட்டும் வந்தது போல இல்லையே அவர்களின் மலர்ச்சி... ஆசையாக, உண்மையாக, ஆர்வமாக இருக்கின்றனர். 'விளக்கில் எண்ணெய் விடட்டுமா...' என்கிறாள் ஒருத்தி...

'கோலங்களில் இன்னும் வர்ணம் சேர்க்கட்டுமா...' என்கிறாள், மற்றவள். கண்ணாடி சீசாக்களை கவனமாக எடுத்துப் போகின்றனர், சுடிதார் இளம்பெண்கள். தினை பிரியாணி, சாமை பாயசம் என்று, காதில் விழுகிறது.

'அக்கா, அக்கா...' என்று, ஆயிரம் கேள்விகள் மொய்த்தாலும், சளைக்காத சிரிப்புடன் பதில் சொல்லியபடி, தேனீ போல விரைந்தாள், ரம்யா.

''இந்தா, சுமி... இது, மூலிகை ரசம்... 'ஸ்டார்ட்டர்' மாதிரி குடி,'' என்று கொடுத்த ரம்யாவை, திகைப்புடன் பார்த்தாள், சுமதி.

''என்ன விழா இது, ரம்யா... அதே பழைய வீடு தான்... அதே அம்மா தான்... ஆனால், உன் முகம் ஆயிரம் விளக்கின் ஒளியோட தெரியுது... இங்க வந்திருக்கிற பெண்கள் உற்சாகமா, அன்பா இருக்காங்க... நீ ராணி மாதிரி, புது ரம்யாவா இருக்கே... என்ன மாயம் இது?''

''மாயம் இல்ல, சுமி... நடு தெருவுல கண்ண கட்டிக்கிட்டு நின்னேன்... ஒரு பக்கம் கைக்குழந்தை, மறுபக்கம் வயதான தாய்... வேலை, வருமானம், பாதுகாப்பு எதுவுமே இல்ல... மெல்ல மெல்ல தான் எழுந்து வரணும்ன்னு, முடிவு பண்ணினேன்... அம்மாவும், நானும் ஊறுகாய் போட ஆரம்பிச்சோம்.

''அக்கம் பக்கம், கோவில் வாசல், பள்ளிக்கூட டீச்சர்ஸ்... இப்படி நானே அலைஞ்சு விக்க ஆரம்பிச்சேன்... மொதல்ல யாருமே வாங்கல, இலவசமா கொடுத்தேன்; கடன் வாங்கி தான். மெல்ல ருசி பிடிக்க ஆரம்பிச்சது. வீடு தேடி வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. நல்லா விரிவடைஞ்சது. இப்போ, 'ரம்யாஸ் பிக்கிள்ஸ்' ஆரம்பிக்கிறேன். இதுவும் சின்ன அளவு தான். ஆனா, மெல்ல இது பெருகும்.''

''உன் மனசுல, விரக்தி, கோபம் எதுவுமே இல்லையா... உன்னை விட நான், 'பெட்டரா' இருக்கேன், ரம்யா... ஆனா, மன மகிழ்ச்சி இல்ல.''

''சுமி... மன மகிழ்ச்சி வேற, மன நிறைவு வேற... இதை நான் ஒரு கட்டத்துல புரிஞ்சுகிட்டேன். மகிழ்ச்சிங்கிறது, நல்ல வேலை, நல்ல அழகு, நல்ல புடவை, நல்ல நகைன்னு பொருளாதாரம் தான் பெரும்பாலும். ஆனா, மனநிறைவுங்கிறது, நம் எண்ணம், செயல், அன்பு, அக்கறை இதுல இருக்கிறது.

''என்னை சுத்தி வீட்டு வேலை செய்ற, வேலம்மாக்கா, மாங்காய் நறுக்கித் தர்ற, அஞ்சுகக்கா, இஸ்திரி போடற, வள்ளி, தயிர்க்கார, பொன்னம்மாக்கா, போஸ்ட்மேன், இக்பால் அண்ணா, சைக்கிள் கடை, வேலுண்ணா, தையல்கார கனகராஜ் இப்படி எவ்வளவோ உழைப்பாளிகள்...

''பாவம், எல்லாருமே தினம் உழைச்சு வாழ்கிறவர்கள். முடிஞ்ச வரை, இவங்ககிட்ட அன்பா, உதவிகரமா இருக்கணும்ன்னு, எளிய மக்களை நேசிக்க ஆரம்பிச்சேன். பெரிய மாற்றம் வந்த நொடி தான், என் வாழ்க்கையை மாற்றின நொடி.

''கனிவாகவும், அன்பாகவும் இருப்பது தான், நம்மோட முதல் கடமைன்னு நெனக்கிறேன். அந்த அணுகுமுறை, தானாகவே மன நிறைவை கொடுக்குது,'' என்றாள், ரம்யா.

கண்களில் ஈரத்துடன் தோழியை அணைத்துக் கொண்டாள், சுமதி. அன்புக்கு புது அர்த்தம் கற்றுக் கொண்டதை போலிருந்தது அவளுக்கு.

வானதி






      Dinamalar
      Follow us