PUBLISHED ON : மே 29, 2016

சமீபத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையில், என் மகன், 'இன்னிக்கு அரை நாள் ஸ்கூல் இருக்கும்மா... எல்லாரும் கண்டிப்பா வரணும்; முடிஞ்சா, வீட்டில் இருக்கிறவங்களையும் கூட்டிட்டு வாங்கன்னு மிஸ் சொன்னாங்க...' என்றான். எனவே, அவனுடன் பள்ளிக்கு சென்றேன்.
அங்கே, நீண்ட ஹாலில் மாணவர்களும், அவர்தம் பெற்றோரும் அமர்ந்திருந்தனர். அரசுதுறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தார் சிலரும், இருந்தனர். சிறப்பு வகுப்பு ஆரம்பித்தது.
மழை, இடி மற்றும் மின்னல் ஆகியவற்றிலிருந்து, நம்மை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது, புயல் மற்றும் வெள்ளத்திலிருந்து எப்படி தப்பிப்பது, திடீரென நிலச்சரிவு மற்றும் பூகம்பம் ஏற்பட்டால், என்ன செய்ய வேண்டும் என்பதை, செயல்முறை விளக்கமாக செய்து காட்டியதோடு, துண்டு பிரசுரங்களையும் கொடுத்தனர்.
ஒரு மணிநேரம் நடைபெற்ற அந்நிகழ்ச்சியை, மாணவர்கள் அனைவரும் ஆர்வமாகவும், கவனமாகவும் கண்டு களித்தனர். அத்துடன், எதிர்காலத்தில், ஏதேனும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், அவர்களே தங்களை தற்காத்துக் கொள்வர் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. இதுபோன்று மற்ற பள்ளிகளும் செய்தால், பயனுள்ளதாக அமையுமே!
— ஆர்.ஜெயா, மூலக்கரை.

