PUBLISHED ON : மார் 10, 2013

பெண்கள் பிரச்னையில் மேலும் ஒரு படம்!
மகளிர் தினம், அன்னையர் தினம் என்று, பெண்களை போற்றி வந்த போதும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், நாளுக்கு நாள் மலிந்து வருகிறது. இந்த கருத்தின் அடிப்படையில், இரு கில்லாடிகள் என்றொரு படத்தை, டென்மார்க் ஹான் என்பவர் இயக்கி வருகிறார். இப்படத்தில், பெண்களின் துயரங்களைப் பற்றி மட்டுமே சொல்லாமல், அதிலிருந்து விடுபடுவது எப்படி என்பதைப் பற்றியும் காட்டப்போவதாக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
யாயாவை எதிர்பார்க்கும் சிவா!
சிவ பூஜையில் கரடி மற்றும் தில்லு முல்லு ஆகிய ரீ-மேக் படங்களில் நடித்து வரும் சிவா, தன் இன்னொரு படமான, யாயாவை ரொம்பவே எதிர்பார்க்கிறார். காரணம், இப்படத்தில் அவருடன், சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் இணைந்து செம காமெடி செய்துள்ளனர்.
— சி.பொ.,
சமையல் கலையில் அசத்தும் சமந்தா!
சில நடிகைகளைப் போன்று, சுடுதண்ணீர் கூட போட தெரியாதவர் அல்ல சமந்தா. கிச்சனுக்குள் புகுந்து விட்டால், சைவம், அசைவம் என்று பலதரப்பட்ட அயிட்டங்களை செய்து, குடும்பத்தினரை அசத்தி விடுவார். அப்படி, தன் கைப்பட சமைக்கும் சில ஸ்பெஷல் அயிட்டங்களை அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களுக்கும் கொண்டு வந்து, இயக்குனர், ஹீரோக்களுக்கும் பரிமாறி, அவர்கள் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
— எலீசா
டாப்சி பாலிவுட் பாய்ச்சல்!
'தமிழ், தெலுங்கில் தலா இரண்டு படங்களில் நடித்து வந்த போதும், பாலிவுட் சினிமாவே என் டார்கெட்...' என்கிறார் டாப்சி. தற்போது, சஷ்மே பத்தூர் என்ற இந்தி படத்தில் நடித்திருப்பவர், அப்படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். அதனால், அந்த படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில், பங்கு பெற்று வரும் டாப்சி, 'இந்த படம் வெற்றி பெற்றால், அதன் பின் முழுநேர இந்தி நடிகை ஆகிவிடுவேன்...' என்கிறார். தனக்கு தனக்கு என்றால் தாய்ச்சீலையும் பதக்குக் கொள்ளும்!
— எலீசா
கமர்ஷியல் நடிகரான விஜய சேதுபதி!
பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களின் வெற்றி, விஜய சேதுபதியை, வியாபார ரீதியில் உயர்த்தி விட்டது. இருப்பினும், பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்பாத அவர், இப்போதும் மினிமம் கியாரண்டி கதைகளாகவே, 'செலக்ட்' செய்து நடிக்கிறார். அதோடு, இப்போதும் தன் சம்பளத்தை, தான் நிர்ணயிக்காமல், படாதிபதிகள் தரும் தொகையையே பெற்றுக் கொள்கிறார்.
— சி.பொ.,
பூஜாகுமாருக்கு பாராட்டு!
விஸ்வரூபம் படத்தில் நடித்துள்ள பூஜாகுமார், நடிகை மட்டுமின்றி, செய்தி வாசிப்பாளர், டான்சர், மாடல், குறும்பட தயாரிப்பாளர் என்று, பலமுகம் கொண்டவர். ஆங்கிலத்தில் இவர் தயாரித்த, 1001 ஆடியன்ஸ் மற்றும் ஹீட் மை லைப் போன்ற குறும்படங்கள், ஹாலிவுட் இயக்குனர்களின் பாராட்டு பெற்றவையாம். அதனால், என்ன தான் நடிப்பில் பிசியாக இருந்த போதும், அவ்வப்போது ஒரு குறும்படத்தை தயாரித்து வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார் பூஜாகுமார்.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!
