PUBLISHED ON : பிப் 24, 2019

அன்று அலுவலகத்தில் செய்து முடிக்க வேண்டிய, 'பாலன்ஸ் ஷீட்' பற்றிய யோசனை ஒரு பக்கமும், அடுப்பில் கொதிக்கும் பால் பொங்கி வருகிற கவனம் மறுபக்கமும் இருக்க, பாட்டியும், பேரனும் பேசுவது, நளினியின் காதில் விழுந்தது.
''சரியா சொல்லுடா அருண் கண்ணா... ஏன் பிடிக்கலே, 'மேட்ச்' விளையாட... உனக்கு தான் கிரிக்கெட் ரொம்ப பிடிக்குமே... உங்க, பி.டி., சார் கூட, உன் மேல தனி பிரியம் வெச்சிருக்கார்ன்னு சொல்லுவியே,'' என்றாள், பாட்டி அலமு.
''ஆமாம் பாட்டி... அது பிரச்னை இல்லே... ரெண்டு, 'டீமா' பிரிச்சுருக்கார் சார்... நான் ஒரு கேப்டன்... சத்யா ஒரு கேப்டன்... என், 'பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்' சங்கர், யோகேஷ் ரெண்டு பேரும், எதிர், 'டீம்'ல இருக்காங்க... ஏன், சத்யாவே கூட, 'குட் ப்ரெண்ட்' தான் எனக்கு... எப்படி பாட்டி அவங்களை எதிர்த்து விளையாட முடியும்?'' என்றான் கவலையுடன், அருண்.
அலமு சிரித்தாள்.
''என்னடா... பிரச்னையா இது... விளையாட்டுன்னாலே இப்படித்தானே... கொக்கோ, ஐஸ்பாய், கேரம், செஸ் எதை எடுத்தாலும், ரெண்டு, 'டீம்' தானே... அது தான் விளையாட்டு, 'சீரியஸ்' விரோதம் எதுவும் இல்லேடாகண்ணா.''
''இல்லே பாட்டி... எனக்கு கஷ்டமா இருக்கு... சங்கர், எனக்கு நெறைய, 'மாத்ஸ்' சொல்லிக் கொடுத்திருக்கான்... யோகேஷ், வாழை கன்று கொடுத்தான் நம்ம வீட்டுக்கு... அவங்க விக்கெட்டை எப்படி பாட்டி என்னால எடுக்க முடியும்?''
அலமு சிரிப்பை நிறுத்தி, ''இப்போ உனக்கு, பகவத்கீதை பத்தி சொல்லப் போறேன்... கேட்கறியா?'' என்றாள்.
''மகாபாரதமா?''
''ஆமாம்... அதுல இப்படித்தான் ஒரு காட்சி வருது... குருஷேத்திர போர் நடக்கப் போகுது... கவுரவர்கள் ஒரு பக்கம், பாண்டவர்கள் ஒரு பக்கம்... அர்ஜுனன் தான், முக்கியமான வீரன். ஆனால், அவன் தயங்கித் தயங்கி நின்றான். அவனோட தேரை ஓட்டறது, கிருஷ்ணன்...
''அர்ஜுனன் சொல்றான், 'மாமா... இப்படி எதிர் அணியில எல்லாரும் நமக்கு வேண்டியவங்களா இருக்காங்களே, அவங்களை எதிர்த்து, நான் எப்படி அம்பு விட முடியும், மனசு வரலே மாமா...'ன்னு கவலைப்படறான்...
''அப்போ கிருஷ்ணன், 'இது போர்க்களம், இங்க உணர்ச்சிகளுக்கு இடமில்லே, இவ்வளவு துாரம் வந்த பின், வீரம் மட்டும் தான் இருக்கணும்... உன் கடமை, போர்ல ஜெயிக்கறது மட்டும் தான்... மத்ததெல்லாம் தானா நடக்கும்'ன்னு சொன்னார்... அர்ஜுனனுக்கு தெளிவு கிடைச்சு, போர்ல பிரமாதமா சண்டை போட்டு ஜெயிச்சான்.''
குறுக்கிடாமல் கேட்டான், அருண்.
''போர், கிரிக்கெட் எல்லாம் ஒண்ணு தான்... ரெண்டு, 'டீம்' யாருக்கு வலிமை அதிகமோ, அந்த, 'டீம்' ஜெயிக்கும்... அவ்வளவு தான். 'மேட்ச்' முடிஞ்ச பின் எல்லாரும் பழையபடி நண்பர்கள் சரியா?''
''ஓ.கே., பாட்டி,'' என்று, உற்சாகத்துடன் ஓடினான், அருண்.
இதையெல்லாம் காதில் வாங்கியபடி, புன்னகையுடன், சமையலை முடித்தாள், நளினி.
இரவு-
அழகான பவுர்ணமி நிலவுடன் ஒயிலாக இருந்தது வானம்! துபாயில், சரவணனுக்கும், இப்போது இதே நிலவு தெரியுமா என்று நினைத்துக் கொண்டாள், நளினி. இன்னும் ஆறு மாதத்தில், 'கம்பெனி கான்டிராக்ட்' முடிந்து விடும். அதற்குப் பின் எல்லாரும் சேர்ந்து இருக்கலாம், என்று நினைத்தாள்.
அவள் கைகளை பற்றினான், அருண்.
''மேட்ச்ல ஜெயிச்சதுக்கு எனக்கு ஸ்வீட் வேணும்மா,'' என்றான் கொஞ்சலாக.
''சொல்லணுமா கண்ணு... கேரட் அல்வா உனக்கு ரொம்ப பிடிக்குமே... அதோ அந்த கிண்ணத்துல வெச்சிருக்கேன்... நாளைக்கு உனக்கு, 'சர்ப்ரைசா' தரலாம்ன்னு இருந்தேண்டா கண்ணா,'' என்று, மகனை அணைத்துக் கொண்டாள்.
''எப்படி... 'கிரேட்' மா... ஆபீஸ்ல எவ்ளோ வேலை இருக்கும் உனக்கு... தோசை, சட்னின்னு செஞ்சு, அடுத்த நாளைக்கு காய் நறுக்கி வெச்சு, கிச்சனை, சுத்தம் பண்ணி நெறைய வேலை செஞ்சியேம்மா...
இதுல, அல்வா வேற பண்ணியிருக்கியே... தாங்க்ஸ் மா!''
''நிச்சயமா நீ ஜெயிப்பேன்னு தெரியும்டா கண்ணு... சந்தோஷமா எதை செஞ்சாலும் அலுப்பே தெரியாது கண்ணு,'' என்று கனிவுடன் சிரித்தாள்.
''நளினி, எனக்கு பால் தரியா?'' என்று, மாமியாரின் குரல் கேட்டது.
''இதோ எடுத்து வரேன்மா... அருண் போய் பாட்டிகிட்ட பேசு,'' என்றபடி, பால் பாத்திரத்தை எடுக்கும்போது, அருண், ஏதோ சொல்வது கேட்டது...
''இல்ல பாட்டி... நான் நார்மலாத்தான் இருக்கேன்,'' என்றான், அவன்.
''இல்லேடா... பாட்டிக்கு தெரியாதா பேரனோட மனசு... சொல்லு, ஏன், 'டல்'லா இருக்கே... என்ன விஷயம்?''
''இந்த ராஜ்குமார் பயல் படுத்தறான், பாட்டி!''
''யாரு... பல்லு கொஞ்சம் எடுப்பா இருக்குமே அவனா... என்ன பண்றான்?'' என்றாள், அலமு.
''என் பென்சில் பாக்ஸ் உள்ளே, கரப்பான் பூச்சியை பிடிச்சுட்டு வந்து போடறான்... மதியம் சாப்பிடும்போது, வேணும்னே வேகமா ஓடி, புழுதி பறக்க வெக்கிறான்... விளையாடும்போது, நெறைய அழுகுணி ஆட்டம் ஆடறான்... 'டீசன்சி'யே இல்லே, அவன்கிட்ட.''
''என்னது, கரப்பான் பூச்சிய போட்டானா... சும்மாவா விட்ட அவனை?''
''இன்னிக்கு என் நோட்டுல, அவனே, ராதா மிஸ் படத்தை, சோளக்கொல்லை பொம்மை மாதிரி வரைஞ்சுட்டு, நாந்தான் வரைஞ்சேன்னு அவங்ககிட்ட சொல்லிட்டான்... மிஸ், கோபப்பட்டு, என்னை வெளில நிக்க வெச்சாங்க.''
அலமு கோபத்துடன், ''நீ என்ன, ஏமாளியா இருக்கே, அருண்... நாளைக்கே அவன், 'ரெகார்ட் நோட்டை' எடுத்து, குப்பைத் தொட்டில போட்டுடு, யாருக்கும் தெரியாம... ரவுடிப் பசங்களுக்கெல்லாம் அது தான் தண்டனை,'' என்றாள்.
''அய்யோ... அப்படி எல்லாம் செய்யலாமா பாட்டி... தப்பில்லையா?'' என்றான் பயத்துடன், அருண்.
''கெட்டவன் தானே அவன், ஒண்ணும் தப்பில்லே... தைரியமா பண்ணு... ராமாயணத்துல இப்படித்தான்... சுக்ரீவன் பொண்டாட்டிய, வாலி கவர்ந்து போய் வெச்சுகிட்டான்... சுக்ரீவன் அழுது கேட்டும் கொடுக்கலே... இத்தனைக்கும் ரெண்டு பேரும் சொந்த அண்ணன், தம்பி.
''அப்போ, ராமர் தான் உதவிக்கு வந்தார். மறைஞ்சு நின்னு, அம்பு விட்டு, வாலியை கொன்னார்... வேற வழி இல்லே... எதிராளியோட பலமும், தனக்கே வர்ற மாதிரி (அப்படி ஒரு வரம் வெச்சிருந்தான், வாலி) அதனால, ராமர், தெரியாம பண்ண வேண்டியதாப் போச்சு...
''காலம் பூரா இப்படித்தான் கெட்டவங்களும், நம்ம கூடவே இருப்பாங்க... நாமளும் இப்படி மறைமுகமா ஏதாவது செஞ்சு, நம்மளை காப்பாத்திக்க வேண்டியது தான்... சரியா?''
அருண் குழப்பத்துடன், தலையாட்டுவதை கவனித்தாள், நளினி.
அன்று வெயில், மிகக் கடுமையாக இருந்தது. நடைபாதை மக்களை பார்த்தவள், 'பாவம்... அதிகப்படியான மழையும் சரி, வெயிலும் சரி, அவர்களை என்ன பாடு படுத்தும்...' என்று வருந்தியபடி, வீடு வந்து சேர்ந்தாள், நளினி.
சோர்ந்து உட்கார்ந்திருந்தான், அருண். 'இந்த நேரத்தில், 'டோரிமான்' பார்ப்பான் அல்லது 'கிடாரில்' வாசித்துக் கொண்டிருப்பான். இப்படி களைப்பும், கவலையுமாக அவனை பார்த்ததே இல்லையே...' என, நினைத்துக் கொண்டாள்.
''என்ன கண்ணா... அப்பா நினைவு வந்துதா... போன்ல பேசறியா... என்னடாப்பா, 'டல்'லா இருக்கே?'' என்றாள் பரிவுடன்.
''இந்த ஸ்கூல் வேண்டாம்மா.''
''என்ன... ஸ்கூல் வேண்டாமா... ஏம்பா?'' என்றாள், திடுக்கிட்டு.
''மாத்ஸ், பிசிக்ஸ் சாரெல்லாம் சரியில்லேம்மா... என்கிட்ட கோபமா பேசறாங்க... பழனிகிட்ட சிரிச்சுகிட்டே இருக்காங்க... சுரேஷ்கிட்ட அன்பா பேசறாங்க... 'பார்ஷியாலிடி' எனக்கு பிடிக்கலேம்மா... வேண்டாம்மா இந்த ஸ்கூல்,'' அருண் குரல் தழுதழுத்தது.
அவள் பதில் சொல்லத் துவங்குவதற்குள், அலமு வந்து நின்றாள்.
''என்னது, பேதம் பிரிக்கறாங்களா... பள்ளிக்கூடத்திலேயா? அநியாயமா இருக்கே,'' என்றாள், கோபத்துடன்.
''ஆமாம் பாட்டி... அதனால தான் எனக்கு, 'மாத்ஸ்'ல போன வாட்டி மார்க் குறைஞ்சது... 'பிசிக்ஸ்'ல இப்ப குறையும் பாரு.''
''நளினி, மொதல்ல ஸ்கூல மாத்து... இப்படி பசங்களுக்குள்ள பேதம் பிரிக்கற வாத்தியார்கள்கிட்ட ஒண்ணும் என் பேரன் படிச்சு கிழிக்க வேண்டாம்... என்ன, மாத்தறியா?''
அவள் பொறுமையாக, மகனின் கரம் பற்றினாள். அலமுவை பார்த்து புன்னகைத்தாள்.
கோபம் மாறாமல் படபடத்தாள், அலமு...
''இருக்கிற இடம் சரியில்லேன்னதும், சீதையே கிளம்பிப் போனாளா இல்லையா, ராமனை விட்டு... 'பூமித் தாய்கிட்ட போறேன்'னு மண்ணுல மறைஞ்சாளா இல்லையா... சொல்லு நளினி, நீதான் எல்லாம் படிக்கிறவளாச்சே!''
''சொல்றேன்மா,'' என்ற, நளினி, தொடர்ந்தாள்...
''இதிகாசம், புராணம் எல்லாம், மனிதனை, வாழ்க்கையை யதார்த்தமா பார்க்க வைக்க உண்டானது... பிரச்னைகளை கொஞ்சம் சுலபமா கையாள கத்துத் தருவது... அதுக்காக, நம்ம வசதிக்கு ஏத்த மாதிரியோ, அதிகப்பட்ட உணர்ச்சி வேகத்துக்கு ஏத்த மாதிரியோ, அந்த கதாபாத்திரங்களை உபயோகிக்கிறது சரியில்லேம்மா.
''அருண்... பாட்டி மாதிரி நானும் மகாபாரதத்தையே எடுத்துக்கறேன், துரோணர் தெரியும் உனக்கு... பாண்டவர்கள், கவுரவர்களோட குரு. அவர் மகன் அஸ்வத்தாமன்.
''அவன், கோபத்தோட அப்பாகிட்ட, 'அப்பா... நீங்க பாரபட்சம் பார்க்கறீங்க, அர்ஜுனனுக்கு தான் நிறைய வில் வித்தையை சொல்லித் தரீங்க... அவன் சிறந்த வில் வித்தைக்காரன்னு பேர் வாங்கிட்டான். சொந்த மகனான என்னை விட, அவனுக்கு தான் நீங்க நிறைய வித்தைகளை கத்துக் கொடுத்திருக்கீங்க. இது, குற்றம்'ன்னு சண்டை போடறான்...
''அப்போ துரோணர், 'மகனே... அப்படிப் பாத்தா, அர்ஜுனனையே ஜெயிச்சானே ஏகலைவன், அவனுக்கு நானா சொல்லிக் கொடுத்தேன்... மறைஞ்சு நின்னு அவனா கத்துக்கிட்டதுதானே... சரியா, புரிந்துகொள் மகனே...' என்றவர்...
''மீண்டும் தொடர்ந்து, 'குரு என்கிறவர், எப்போதும் தன் மாணவர்கள் எல்லாருமே சிறப்பா வரணும்ன்னு தான் விரும்புவார்; கற்பிக்கிறதுல பேதம் காட்ட மாட்டார். மாணவனோட முயற்சியும், பயிற்சியும் தான், அவனை உயர வைக்குமே தவிர, வேறே எதுவுமே இல்லே...'ன்னு எடுத்துச் சொன்னார்...
''அவனும் புரிஞ்சுகிட்டான்... அருண், உனக்கும் அதுதான் கண்ணா சொல்றேன்... எந்த காலத்துலயும் தன் பசங்க பெரிய ஆளா வரணும்ன்னு தான், மனசுக்குள்ள விரும்புவாங்க வாத்தியார்கள்... நீ இன்னும் நிறைய, 'பிராக்டீஸ்' பண்ணு, அருண்...
''தினமும், 10 'சம்ஸ்' போடு, விடிகாலைல தினமும், 'பிசிக்ஸ்' பாடம் படி... 'குரூப் ஸ்டடி' பண்ணு... நீயும் கத்துக்கோ, அவங்களுக்கும் சொல்லிக் கொடு... எல்லாம் சரியாகும்... ஸ்கூலை மாத்தறது தீர்வில்லே கண்ணா, நம்மை சரியானபடி மாத்திக்கிறது தான் தீர்வு... சரியா?'' என்றாள், நளினி.
மெல்ல தலையாட்டினான், அருண். அரும்பு போல ஒரு புன்னகை உருவாகி, அவன் முகத்தை சட்டென்று ஒளிமயமாக்கியது.
''அப்புறம் இதை மறந்துட்டேனே... வரும்போது, ராஜ்குமாரை பாத்தேன்... 'ப்ரெண்ட்லியா' பேசினான்... பேச்சுவாக்குல, 'ஸ்விம்'மிங் கத்துக்க ரொம்ப ஆசையாம்... வீட்டுல வசதி இல்லைன்னு சொன்னான். வரச்சொல்லி இருக்கேன் நம்ம வீட்டுக்கு... உன் கூட அவனையும் சேர்த்து விடறேன்...
''ரெண்டு பேரும் போய், 'ஸ்விம்மிங் கத்துக்கலாம்... உன் கூட நல்ல, 'ப்ரெண்டா' இருப்பேன்னு சொல்லி, 'பீல்' பண்ணினான்... உனக்கு, ஓ.கே., தானே அருண்?''
''டபுள், ஓ.கே.,மா... எல்லாத்துக்கும்,'' என்று, தாயை அணைத்துக் கொண்டான், அவன்.
''நானும், ஓ.கே.,'' என்று சிரித்தாள், அலமுவும்.
வானதி