தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்....

இது உங்கள் இடம்....

இது உங்கள் இடம்....


PUBLISHED ON : ஜூன் 15, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 15, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

சபலிஸ்ட்களே...

என் தோழியின் கணவர் சபல புத்திக்காரர். தோழி சுமாரான அழகி என்பதால், அவளிடம் மற்ற பெண்களின் அங்க அழகுகளை வர்ணித்து, 'நீயும் இருக்கிறாயே...' என்பார். தோழி இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை.

சில நாட்களுக்கு முன், தோழியின் தங்கை, (அவளும் மணமானவள்) திருமண விழா ஒன்றிற்காக வந்தவர், அக்கா வீட்டில் தங்கியிருக்கிறார். அவளிடம் தோழியின் கணவர், 'உன் அக்காவை விட, நீ அழகாக இருக்கிறாய்; உன் கவர்ச்சி, சினிமா நடிகைகள் எவரிடமும் இல்லை...' என்றும், இன்னும் எழுத முடியாத வார்த்தைகளால் வர்ணித்து, 'உன்னை அனுபவிக்க, எனக்கு கொடுத்து வைக்கவில்லை...' என்று, உளறியிருக்கிறார்.

அத்தானின் அசிங்கத்தனத்தை புரிந்து கொண்ட அப்பெண், அவரிடம், 'உங்கள மாதிரி தான் அத்தான் என் புருஷனும், என்னை விட, அக்கா நல்லா இருக்கிறதா சொல்றாரு; அக்காவ ஒருநாள் என் கூட, என் புருஷனுக்காக அனுப்பி வைங்க... நீங்க சொன்னத, எம் புருஷன்ட்ட சொல்லிட்டு, நானும் இங்க வர்றேன்...' என்றதுமே, அவர் திடுக்கிட்டு, ' ஏய்... என்னைய என்ன மாமா வேலை பாக்குறவன்னா நெனைச்சே...' என்று எகிற, அப்பெண், 'அப்ப நான் விபசாரின்னு நெனச்சியா... ப்ளடி ராஸ்கல். அக்கா புருஷன்னு பாக்குறேன்... இல்ல செருப்பு பிஞ்சிருக்கும். உன்னை விட, எம்புருஷன் எதுலடா குறைஞ்சவரு; நீ உளறினது அவருக்கு தெரிஞ்சது, மவனே நீ செத்த; எச்சரிக்கையாய் இரு...' என எச்சரித்து, காறி உமிழ்ந்து, சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்டாள்.

இந்த விஷயம் அக்கம் பக்கம் பரவி, தோழியின் கணவரின் யோக்யதை தெரிந்துவிட்டதால், இப்போதெல்லாம், குனிந்த தலை நிமிராமல் செல்வதுடன், தோழியிடம், பிற பெண்களைப் பற்றி பேசுவதில்லை. இருப்பதை விட்டு, பறக்க நினைப்பவர்களுக்கு இது தான் கதி!

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

நல்ல விதை விதைத்தால்...

எங்கள் வீட்டுக்கு, உறவினர் சிலர் வந்திருந்தனர். அனைவரும் விருந்துண்டு, 'டிவி'யில், ஆக் ஷன் படம் பார்த்துக் கொண்டிருந்தோம். உறவினர் ஒருவரின் பத்து வயது மகன் மட்டும், 'டிவி' பார்க்காமல், இன்னும் இரண்டு, மூன்று சிறுவர்களுடன் சேர்ந்து, ஆங்கில வார்த்தைகளை அமைக்கும், 'ஸ்க்ராப்ளர்' விளையாட்டு மற்றும்

அட்லசில் இடங்களை கண்டு பிடிக்கும் விளையாட்டுக்களை, விளையாடிக் கொண்டிருந்தான்.

அவனை படம் பார்க்க அழைத்ததற்கு, அவன், 'நான் வரலை... எப்பப் பார்த்தாலும், 'டிவி' பார்க்கக் கூடாது; அதிலும், அடிதடி சினிமாவ பார்க்க கூடாது, 'டிவி' பார்த்தா முன்னேற முடியாதுன்னு எங்க டீச்சர் சொல்லிருக்காங்க... நான் நிறைய படித்து, பெரிய ஆளாகணும்; அதனால, நான், 'டிவி' பாக்க வர மாட்டேன்...' என்று கூறி, மீண்டும் விளையாட்டில் மும்முரமானான்.

எங்களுக்கு ஒரே ஆச்சரியம். எங்கோ இருக்கும் டீச்சரின் வார்த்தைக்கு, இவ்வளவு மதிப்பு கொடுக்கிறான் என்றால், அந்த டீச்சர் எவ்வளவு பக்குவமாக எடுத்துக் கூறியிருக்கிறார். நல்ல விஷயங்களை, நல்ல விதமாக எடுத்துக் கூறினால், குழந்தைகள் மனதில் நன்கு பதிந்து, அவர்களை நல்வழிப்படுத்தலாம் என்பது, புரிந்தது.

— எம்.கிருஷ்ணன்,கோவை.

திருமண தகவல் மையத்தில் விண்ணப்பிக்க போகிறீரா?

நாளிதழ், வார புத்தகங்களில், 'வரன் தேடுகிறீர்களா? இலவசமாக பதிவு செய்து கொள்ளுங்க...' என்று, விளம்பரம் செய்திருந்த பிரபல திருமண தகவல் நிலையத்தில், என் நண்பர், தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடி விண்ணப்பித்தார். சிறிது நேரத்திலேயே, 'பதிவு செய்து கொண்டோம்; ஆறு மாத சந்தா, 5,300 ரூபாயை வங்கியில் செலுத்துங்கள்...' என்று போன் வந்தது. 'இலவசம் என்றீர்களே?' என, வினவிய போது, 'பதிவு தான் இலவசம்; உங்களைப் பற்றிய விவரங்களை பிறர் பார்க்கவும், மற்றவர்களது விவரத்தை நீங்கள் பார்க்கவும் தான் இந்த கட்டணம். தவிர, இதிலும், 70 வரன்களுக்குரிய எண்களை மட்டுமே பெற முடியும்...' என, பதில் கூறினர்.

பேருக்காகவும், புகழுக்காகவும் இலவசம் என, டமாரம் அடித்துகொள்வது, பின், ஆயிரக்கணக்கில் பணம் பிடுங்க வேண்டியது. இது போன்ற நிலையங்களின் நம்பகத்தன்மையை வரன் தேடுபவர்கள், இனி, சோதித்து, அறிவது நல்லது.

- ஏ.ஜே.ஜப்பார், சத்தியமங்கலம்.

புதுசு அணிந்தால் போச்சு!

நான், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். முதலாளி நல்லவர்; வேலையில், தெரியாமல் தவறு நேர்ந்தாலும், கடிந்து கொள்ள மாட்டார். சம்பளம் தாராளமாக தருவார்; ஆத்திர, அவசரத்துக்கு உதவுவார். ஆனால், ஒரு விஷயத்தில் அவர் போக்கு, எங்களை எரிச்சலூட்டி வருகிறது.

ஊழியர்கள் யாரும், புதிதாக, 'பளிச்'சென்று உடை உடுத்தி வரக் கூடாது. உடனே, அவருக்கு, 'மூடு அவுட்' ஆகிவிடும். புது ஆடை உடுத்தியவனை பார்த்து, 'ஆ' என்று, வாய் பிளந்து, 'கலக்கற... வசதி தான்...' என்று, கமென்ட் அடிப்பார். வேலை செய்ய விடாமல் கூப்பிட்டு, முன்னால் நிறுத்தி, ஏற, இறங்க பார்ப்பார். 'என்ன விலை, எங்கு வாங்கினது, என்ன விசேஷம்...' என்றெல்லாம் குடைவார்.

ஆனால், அவர் மட்டும், புதுசு புதுசாக உடுத்துவார். ஆனால், அது அவருக்கு பிடிக்காதது போலவும், ஏதோ கட்டாயத்தின் பேரில் உடுத்தியிருப்பது போலவும், அலுத்துக் கொள்வதோடு, 'சிலருக்கு எப்படி தான் இப்படி, 'பளபள'ன்னு போட முடியுதோ...' என்று, கடுகடுப்பார். நொந்து போன ஊழியர் ஒருவர், அவர் எதிரிலேயே, புது சட்டையை கழற்றி, தரையில் போட்டு, 'மிதிமிதி' என்று மிதித்து, கசக்கி, 'இப்ப போடலாமா...' என்று கேட்டதோடு, வேலையை விட்டே போய் விட்டார். இருந்தும், அவர் மாறவில்லை.

'உங்களிடம் வேலை செய்பவர், நன்றாக உடுத்தி வந்தால், அது உங்களுக்கு தானே பெருமை. ஊழியர்களை வசதியாக வைத்திருக்கிறீர்கள் என்று, பார்ப்பவர்கள் உங்களை தானே மதிப்பாக சொல்வர்...' என்று, கேட்க தயக்கம். நிறைய நல்ல குணங்கள் கொண்டிருந்தாலும், உடை விஷயத்தில், அவர் நடந்து கொள்ளும் விதத்தால், பலரின் அதிருப்திக்கு ஆளாகிறார். இதைப் படித்த பிறகாவது, அவர் திருந்துவாரா பார்ப்போம்!

— தினமும், பழைய கந்தல் துணி உடுத்தி, வேலைக்கு போகும் அப்பாவி ஊழியர்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us