தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்...

இது உங்கள் இடம்...

இது உங்கள் இடம்...


PUBLISHED ON : நவ 27, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 27, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பட்ட கடனை திரும்ப செலுத்த...

கடந்த வாரம், என் தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன். அடுக்குமாடி குடியிருப்பில், இரண்டாவது மாடியில் உள்ளது, அவளது வீடு.

'லிப்ட்' வேலை செய்யாததால், படிக்கட்டில் ஏறிச் சென்ற போது, வழியெங்கும், ஆங்காங்கே பல வகையான செடிகள், சிறிய தொட்டிகளில் வளர்க்கப்பட்டிருந்து.

வீட்டைச் சுற்றிக் காட்டினாள் தோழி. பால்கனி, சன்ஷேட், ஜன்னல் என்று எங்கெல்லாம் முடியுமோ, அங்கெல்லாம், சிறிய தொட்டிகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், பாட்டில்கள் என்று எல்லாவற்றிலும், பல்வேறு வகையான செடி, கொடிகளை வளர்த்திருந்தாள்.

'இவ்வளவு சின்ன தொட்டிகளில் செடி, கொடிகளை வளர்த்தால், இலைகள் மட்டும் தானே இருக்கும்; பூவோ, காயோ கிடைக்காதே...' என்றேன்.

'நான், செடிகள் வளர்ப்பது, பூவுக்காகவோ, காய்களுக்காவோ அல்ல; நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனுக்காக! அதோட, நிறைய பிராண வாயுவை இலைகளால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். அதனால் தான், நம்மால் ஏற்பட்ட மாசுக்களை சுத்தப்படுத்த என்னால் முடிந்த அளவு செடிகளை வளர்க்கிறேன்...' என்றாள்.

செடிகள் வளர்ப்பதில், இப்படி ஒரு கோணம் இருக்கிறது என்று, அன்று தான் தெரிந்து கொண்டேன். இயற்கையிடம் நாம் பட்ட கடனை திரும்ப செலுத்த, நானும், செடி வளர்க்க துவங்கி விட்டேன்.

கி.புஷ்பலதா, சென்னை.

வலிய வந்து உதவி!

சமீபத்தில் நான் கண்ட காட்சி இது: இரு சக்கர வாகனத்தில் வந்த பெரியவர் ஒருவர், தெருவில், பள்ளம் இருப்பதை கவனிக்காமல், தடுமாறி கீழே விழுந்தார்; கையிலும், காலிலும், லேசான காயம் ஏற்பட்டது.

இதைக் கண்ட இளைஞர் ஒருவர், தன் பையிலிருந்து, பஞ்சு மற்றும் மருந்துகளை எடுத்து, முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். அதற்குள், பெரியவரின் உறவினரும் வந்து விட்டனர்.

'ரொம்ப நன்றி தம்பி, நீங்க டாக்டரா...' என்று பெரியவர் கேட்க, 'இல்லங்க... நான், 'மார்க்கெட்டிங்'ல இருக்கேன். பலமுறை, விபத்துல சிக்கினவங்கள பாத்திருக்கிறேன்; ஆம்புலன்ஸ் வர்றதுக்குள்ள, முதலுதவி செய்யணும்ன்னு கேள்விப்பட்டு, அதற்காக, சிறப்பு பயிற்சி எடுத்துக்கிட்டேன். என்னோட பையில, முதலுதவி பெட்டி, எப்பவுமே இருக்கும். இதுமாதிரி, யாருக்காவது, உதவி தேவைப்பட்டதுன்னா, உடனே என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்...' என்றார்.

'யாருக்கு என்னவானால் நமக்கென்ன...' என்று நினைப்போர் மத்தியில், வலிய வந்து உதவும் இவரை போன்றோரும் இருப்பதை எண்ணி வியந்தேன்.

எஸ்.பாஸ்கரன், சென்னை.

பிழைக்க தெரிந்த மாணவர்!

என் நண்பரின் மகன், தனியார் கல்லூரியில், இளங்கலை, இரண்டாம் ஆண்டு படிக்கிறான். தினமும், கல்லூரி, பிற்பகல், 3:00 மணிக்கு முடியும்; அதன்பின், வீடு திரும்பி, இன்டர் நெட், பேஸ் - புக்' என்று காலத்தை கடத்தியவனுக்கு, மனதில் என்ன தோன்றியதோ தெரியவில்லை; மாலை நேரத்தில், பகுதி நேர ஊழியராக, வீட்டிற்கு அருகில் உள்ள மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து விட்டான். தற்போது, அவனது, கை செலவுக்கு பெற்றோரை நாடுவது இல்லை.

இதேபோன்று ஒவ்வொரு பிள்ளைகளும், 'பேஸ் - புக், வாட்ஸ் - ஆப்' என வெட்டியாக காலத்தைக் கழிக்காமல், சின்னச் சின்ன செலவுகளுக்குக் கூட பெற்றோர் கையை எதிர்பார்க்காமல், தங்களுடைய செலவுக்கு தாங்களே சம்பாதிக்க தொடங்கினால், உழைப்பின் மீது மரியாதையும், வாழ்க்கையில் நம்பிக்கையும் ஏற்படும்.

வே.முருகேசன், சென்னை.

பீதியை கிளப்பாதீங்க!

என் மகனுக்கு, வெளியூரில், அரசு வங்கி ஒன்றில், பாதுகாப்பு பெட்டக வசதி உள்ளது. 'லாக்கர் ஆபரேட்' செய்ய, நானும், என் மகனுடன் சென்றிருந்தேன். எங்கள் சாவி சரியாக நுழைய, வங்கியின், 'மாஸ்டர் கீ' நுழையாமல், 'மக்கர்' செய்தது.

உடனே, வங்கி மேலாளர், 'நீங்கள் எதையோ, 'டம்ப்' செய்து வைத்துள்ளதால் தான், திறக்க முடியவில்லை; கம்பெனிக்கு, சொல்லி, பூட்டையே மாற்ற வேண்டும். அதற்கு ஆகும் செலவு, 10,000 ரூபாயையும், நீங்க தான் தர வேண்டும்...' என்றார்.

உடனே, நான், அருகில் உள்ள கடையில், ஒரு ரூபாய்க்கு தேங்காய் எண்ணெய் பாக்கெட் வாங்கி, சாவி மற்றும் பூட்டின் துவாரங்களில், இரண்டு சொட்டு விட்டு, இரண்டு முறை நுழைத்து பார்த்ததில், திறந்து விட்டது.

மெத்த படித்த மேலாளர்களே... அவரசப்பட்டு பீதியை கிளப்பாமல், சற்று நிதானமாக செயல்பட்டால், புண்ணியமாக போகும்!

— வி.ரேவதி, தஞ்சை.

'டிவி' சீரியல் மறுவாழ்வு இல்லங்கள்!

பல ஆண்டுகள் தொடர்ந்து ஒளிபரப்பாகி, மக்கள் மனதில், நீங்கா இடத்தை பிடித்து வருகிறது, 'டிவி' சீரியல்கள். ஆனால், பல சீரியல்கள், கதாபாத்திரங்களின் நிலை என்ன என்பதை கடைசி வரை காட்டாமல், ஏதோ ஒரு கதாபாத்திரத்தை சாகடித்து, சுபம் என்று போட்டு, திடீரென முடித்து விடுகின்றனர்.

இதில், ஏமாந்து, நொந்து போகிறவர்கள், பெண்கள் தான். பகலில், சரியாக தூங்காமல், குடும்பம் மற்றும் உறவுகளை மறந்து, சீரியலுக்கு அடிமையாகி போன இவர்கள், இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இவர்களை குணப்படுத்த, 'டிவி' சீரியல் நோயாளிகளின் மறுவாழ்வு இல்லங்கள் வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. ஒவ்வொரு சீரியல் முடிந்ததும், ரத்த அழுத்தம் அதிகமாவது தான் இவர்களுக்கு கிடைக்கும் பரிசு.

சீரியல் அடிமைகளே... ஏதாவது ஒரு நல்ல பொழுதுபோக்கை தேர்வு செய்து, பொன்னான நேரத்தை, செலவு செய்யக் கற்று கொள்ளுங்களேன்!

— கே.ஆர்.ராமகிருஷ்ணன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us