PUBLISHED ON : செப் 02, 2012

தாத்தா தந்த விளக்கம்!
பிளஸ் 1 படிக்கும் என் மகளுக்கு, என்றைக்கும் வராத திடீர் சந்தேகமாக, 'அம்மா, இருக்கிறதிலேயே உயர்ந்த ஜாதி எதும்மா?' என்று கேட்டதும், எனக்கு, என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. 'நான் முக்கியமான வேலையில் இருக்கேன், வெளியே உங்க தாத்தா இருப்பாங்க... அவங்ககிட்ட போய் கேளும்மா...' என்று சமாளித்து அனுப்பி விட்டு, அவள் பின்னாடியே வந்து, என் மாமனார் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்று கேட்க ஆவலானேன்.
அவரிடம் போய் கேட்டதும், 'இதை ரொம்ப ஈசியா கண்டுபிடிச்சிடலாமே...' என்றார். அதற்கு, அவள், 'எப்படி தாத்தா, புரியுற மாதிரி சொல்லுங்க...' என்றாள். உடனே என் மாமனார், 'எந்த ஜாதியில, அடுத்தவங்க நல்லா இருக்கிறதை பார்த்து பொறாமை படலையோ, எந்த ஜாதியில, பீடி, சிகரெட், மது பயன்படுத்தலையோ, எந்த ஜாதியில, குற்றவாளிகளே இல்லையோ அந்த ஜாதிதான் உயர்ந்த ஜாதி மா...' என்றார். உடனே அவள், 'இது தான் எல்லா ஜாதியிலும் இருக்கிற விஷயமாச்சே...' என்றாள்.
'இப்ப புரியுதா... எல்லா ஜாதியும் ஒண்ணுதான். எதுவும் உயர்ந்ததுமில்ல; தாழ்ந்ததுமில்ல. இன்னும் சரியாச் சொன்னா, உயர்ந்த எண்ணமும், செயலும் கொண்டவங்க, ஜாதியைப் பற்றியே பேச மாட்டாங்க...' என்று விளக்கம் கொடுத்தார்.
படிக்கிற பிள்ளைகளின் மனதில், ஏற்றத் தாழ்வை உண்டாக்காத வகையில், அவர் போதித்த விதம் கண்டு பிரமித்துப் போனேன்.
சிறியோர் மனதில் நஞ்சை விதைப்பதும், நல்லதை விதைப்பதும், பெரியோர்களே என்பதை உணர்ந்தேன்.
— பி.மாசில்லா, மதுரை.சிறு நகரங்களுக்கு கூரியரா? ஜாக்கிரதை!
பெரிய நகரங்களுக்கு மட்டுமே கூரியர் அனுப்ப வேண்டும்; சிறிய நகரங்கள், ஊர்களுக்கு அனுப்பினால், என்னவாகும்?
சமீபத்தில் ஒரு நாள் காலையில், கூரியர் மூலம், ஒரு சிறிய பார்சலை, வட மாநிலத்திலுள்ள ஒரு ஊருக்கு அனுப்பினேன். அன்று பிற்பகல், மற்றொரு போஸ்ட்டுக்காக அஞ்சல் அலுவலகம் சென்றேன்.
அப்போது எதேச்சையாக, என் கண்கள், ஸ்பீட் போஸ்ட் பார்சல்கள் பதிவு செய்து வைத்துள்ள டப்பாவுக்கு சென்றது. அதில், ஒரு பார்சல் என்னுடையது போலவே இருந்தது. கெஞ்சிக்கேட்டு, அதை எடுத்து பார்த்த போது, அது என்னுடைய பார்சலே என்பதும் புரிந்தது.
கடுப்பாகி போய், கூரியர் அலுவலகத்தை அணுகி, காரணம் கேட்டபோது, அவர்கள் கூலாக, 'ஆமாம் சார்... பெரிய மற்றும் நடுத்தர நகரங்களுக்குத்தான் எங்கள் கூரியர் வசதி உண்டு. மற்ற ஊர்களுக்காக வாங்கும் பார்சல்களை ஓரிருநாள் கூட ஆனாலும், பத்திரமாய் போய் சேர வசதியாய், ஸ்பீட் போஸ்ட்டில் போட்டு விடுவோம்...' என்று கூறினர். சண்டைபோட்டு, மீதி பணத்தை வாங்கி விட்டாலும், 'எத்தனைப்பேர் ஏமாறுகின்றனரோ...' என்று நினைக்க, வருத்தமாய் இருந்தது.
ஆக, சிறு ஊர்களுக்கு ஸ்பீட் போஸ்ட்டே பெஸ்ட்!
— ராஜி ராதா, பெங்களூரு.ஆடும் ஆட்டமென்ன? பாடும் பாட்டுமென்ன?
சுதந்திர தின, குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகளுக்காக, ஆங்கில சானல்கள், இந்தி கவர்ச்சி நடிகையரை, எல்லைப்புற ராணுவத்தினரிடம் அழைத்துச் சென்று, ஆடி, பாடி கலைநிகழ்ச்சி நடத்துகின்றன. இது, இங்கிலாந்து, அமெரிக்க சானல்கள் செய்வதின் அப்பட்டமான காப்பி. ஊரை மறந்து, வீட்டை மறந்து, மனைவி - மக்களை துறந்து, நாட்டை பாதுகாக்கின்றனர் ராணுவத்தினர். அவர்கள் முன், கவர்ச்சி நடிகையர் போய் கூத்தடித்து வருவது, உறங்கும் அவர்கள் உணர்வுகளை தட்டி எழுப்புவதாகும். நிகழ்ச்சிக்கு பின் ராணுவத்தினர் இயல்பு நிலைக்கு வர, சிலபல வாரங்கள் ஆகும். ராணுவ உயரதிகாரிகள், இதை ஏன் உணர மறுக்கின்றனர்?
— எம்.எல்.எம்.சச்சிதானந்தம், சேத்தியாத்தோப்பு.
