PUBLISHED ON : ஆக 08, 2010

காதல் படுத்தும் பாடு
'கல்யாணத்தன்று, காதலனுடன் மணப்பெண் ஓட்டம்...' என்ற செய்தி, சமீப காலமாக நாளிதழ் களில் அதிகம் காணப் படுகிறது. எடுத்தேன், கவிழ்த்தேன் என எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், உணர்ச்சிப்பூர்வமாக இளைய தலைமுறை அவசர முடிவெடுப்பது ஆபத்தான விஷயம்.
காதலனோடு வாழ விரும்பினால், பெற்றோரிடம் பேசி பார்க்கலாம். சம்மதிக்காத பட்சத்தில், நிச்சயத்திற்கு முன்பே ஓடிப் போகலாமே! லட்சக்கணக்கில் கடன் வாங்கி, செலவு செய்யும் கல்யாணத்தன்று, ஊரைக் கூட்டி, பெற்று வளர்த்தவர்களின் மானத்தை வாங்கிவிட்டு ஓடுவது நியாயமா? 'கல்யாணம் தான் கட்டிகிட்டு ஓடி போலாமா?' என்று பாடல் எழுதியதை குற்றமென காய்ச்சி எடுத்தனரே...
இன்று, கல்யாணத்திற்கும் சம்மதித்து விட்டு, காதலனோடு ஓடிப் போகும் அசிங்கமல்லவா நடக்கிறது. காதலை உயிரென மதிக்கும் இளம் பெண்களே... பெற்றவர்கள் கல்யாண ஏற்பாடு செய்வதற்கு முன்பே ஓடிப்போய், உங்கள் விருப்பம் போல் வாழ்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து பெற்றவரை அவமதித்து, நஷ்டப்படுத்தாதீர்கள்!
— மல்லிகா அன்பழகன், சென்னை.
* * *
பொருட்களை வாங்கும் போது...
எங்கள் வீட்டில், பிறந்த நாள், பெற்றோரின் திருமண நாள் போன்ற தினங்களில் நாங்கள் வெளியே சென்று ஓட்டல்களில் விருந்து சாப்பிடுவதைவிட, அந்த பணத்தை இயலாதவருக்கு கொடுத்து மகிழ்வதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டில், நோயாளிகளுக்கு இலவச உணவு அளிக்கும் அமைப்பிற்கு ஐம்பது கிலோ பச்சரிசி, துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு தலா எட்டு கிலோ, சமையல் எண்ணெய் போன்றவை வாங்கித் தர முடிவு செய்து, தி.நகர் (பனகல் பார்க்) பகுதியில் உள்ள மளிகை கடைக்கு சென்றோம். (பிரமாண்டமான சூப்பர் மார்க்கெட் கடை அல்ல.)
கடைக்காரர் பிடித்துக் கொடுத்த ஆட்டோவில், பொருட்களை ஏற்றி, அடையாறுக்குச் சென்று, அந்த சங்க நிர்வாகியிடம் பொருட்களை கொடுத் தோம். அவர் கொடுத்த நன்கொடை ரசீதில், '43 கிலோ பச்சரிசி!' என்று போட்டிருந்தது. 'நாங்கள் கொண்டு வந்தது ஐம்பது கிலோ அரிசி...' என்று அவரிடம் கூறியபோது, எங்கள் முன் அரிசியை மீண்டும் எடை போட்டார்.
43 கிலோ தான் இருந்தது; ஏழு கிலோ அரிசி குறைவு. எங்களுக்கு அவமானமாகவும், வருத்தமாகவும் ஆகிவிட்டது. தானம் தானே கொடுக்கப் போகிறார், யார் கவனிக்கப் போகின்றனர் என்று, அளந்து போடும் போது, ஏழு கிலோ குறைவாக (கிட்டத்தட்ட 260 ரூபாய்) அளந்து கட்டியிருக்கின்றனர். சங்க நிர்வாகியிடம் நடந்ததை கூறி, 'சாரி' கேட்டுவிட்டு வந்தோம். மீண்டும் கடைக்கு வந்து, கடைக்காரரிடம் நடந்ததை சொன்னபோது, அவர் நிதானமாக, 'பருப்பு எல்லாம் வாங்கினீங்க இல்ல... எடை போடும் போது, பசங்க தவறு பண்ணியிருப்பாங்க...' என்றார் சர்வ சாதாரணமாக!
அன்றிலிருந்து எங்கள் வீட்டில் யாரும் எந்த பொருள் வாங்கவும் அந்த கடைக்குச் செல்வதில்லை. எந்த பொருளை வாங்கும் போதும், எடை சரியாக இருக்கிறதா என்று பார்த்து வாங்க வேண்டும் என்றும் பாடம் கற்றுக் கொண்டோம்.
— ஆர்.ஆதித்யா, சென்னை.
* * *
ஒருவருக்கு இரு பயிற்சிகளும் தேவை!
சென்னையிலிருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பேருந்து விழுப்புரம் தாண்டியதும், ஓட்டுனருக்கு திடீரென தலைசுற்றல் வந்து, அவரும், பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு, அருகில் இருந்த நடத்துனரை பேருந்தை ஓட்டச் சொல்லி, அவர் நடத்துனர் இருக்கையில் அமர்ந்து, ஒரு மாத்திரையை போட்டு தண்ணீர் அருந்தி, ஒரு மணி நேரம் ஓய்வெடுத்தார். அதுவரை நடத்துனரே பேருந்தை ஓட்டி வந்தார். பின், மீண்டும் பழைய ஓட்டுனர் ஓட்டி வர, பேருந்தில் இருந்த அனைவரும் மன நிம்மதியுடன் இருவருக்கும் நன்றி சொல்லி வந்தோம்.
விசாரித்ததில் தெரிந்த தகவல்: ஓட்டுனர், நடத்துனர் இருவருமே இரண்டு பயிற்சிகளும் பெற்று, இரண்டு உரிமங்களும் வைத்திருப்பவர்களாம். அதனால் தான், பேருந்து பயணிகளுக்கும், ஓட்டுனருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லாமல் பயணத்தை தொடர முடிந்தது. எனவே, ஓட்டுனர், நடத்துனர் ஆகியோரை பணியில் நியமிக்கும் முன், இருவித பயிற்சிகளையும் பெற்று, இருவித உரிமங்களையும் வைத்திருப்பவர்களை நியமிக்கலாமே! இதனால், பயணிகளும் ஆபத்தின்றி பயணிக்க முடியும்; ஓட்டுனர்களுக்கும் ஆபத்தில் உதவ முடியும்! போக்குவரத்து நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கலாமே!
— வி.பரமசிவம், சென்னை.
* * *
