தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஜன 06, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 06, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காதலர்களே உஷார்...



என் தோழி, ஆண் நண்பருடன், நகரிலுள்ள பூங்கா ஒன்றுக்கு சென்றிருக்கிறாள். இருவரும், அத்துமீறி விளையாடிக் கொண்டிருந்த சமயம், எவனோ ஒரு இளைஞன், தன் கேமரா மொபைலில், அதை படமாக்கி எடுத்திருக்கிறான். சில தினங்களுக்குப் பின், மீண்டும் அதே பூங்காவுக்கு, தோழி, ஆண் நண்பருடன் சென்ற போது, இருவர் தம்மை அறிமுகம் செய்து, முன்பு தாங்கள் எடுத்த படத்தை, பிரின்ட் போட்டு காண்பித்திருக்கின்றனர்.

அதிர்ந்து போன தோழியும், அவளது ஆண் நண்பரும் பதறியபடி, அழுதனர். அவர்களிடம் பேரம் பேசி, தோழியின் இரண்டரை பவுன் செயின், மோதிரம், நண்பரின் செயின், வாட்ச், ரிங், இருவரது மொபைல்போன் உட்பட, பணமும் கணிசமாக பெற்றுக் கொண்டு, படத்தையும் கொடுத்து, மொபைலில் அழித்து விட்டோம் என்று சொல்லி, மொபைலையும், இவர்களிடமே கொடுத்து, 'எஸ்கேப்' ஆகியிருக்கின்றனர். வெளியே தெரிந்தால் கேவலம் என்று, மூடி மறைத்துள்ள தோழி, நகையை தொலைத்ததாக கூறியிருக்கிறாள். பெரும் பிரச்னை <உருவாகி, தற்போது தப்பித்து விட்டாள்.

தோழியரே... பொது இடங்களில் கொஞ்சல், குலாவல் என, ஆண் நண்பருடன் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.

காதலர்களே... இவ்விஷயத்தில், உஷா ராய் இருங்கள்.

— எஸ்.மாரியம்மாள், திருநெல்வேலி.

கணவர்களை நம்பாத மனைவியர்!



நான் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். காப்பீடு செய்யும் ஒருவர், தன் காப்பீடு தொகைக்கு வாரிசுதாரராக, ஒருவரை நியமனம் செய்ய வேண்டியது நடைமுறை அவசியம். இந்த வகையில், ஆண்கள் காப்பீடு செய்யும் போது, திருமணமான ஆண்களில், 95 சதவீதம் பேர், தங்கள் மனைவியைத்தான் வாரிசுதாரர்களாக பதிவு செய்கின்றனர். அதேசமயம், திருமணமான பெண்கள் காப்பீடு செய்யும் போது, குறைந்தபட்சம், 75 சதவீதம் பெண்கள், கணவனை தவிர்த்து, அண்ணன், அக்கா, அம்மா, அப்பா இப்படி உறவு முறைகளில் உள்ள வேறு யாரையாவது தான், வாரிசுதாரர்களாக பதிவு செய்கின்றனர்.

இந்த நிலைக்கு காரணம்... தனக்கு ஏதாவது ஆகிவிட்டால், கிடைக்கும் பணத்தை மனைவி பெற்றுக்கொண்டு, குடும்பத்திற்கு உபயோகமாக, ஏதாவது ஒருவழியில் பயன்படுத்திக் கொள்வாள் என்று, ஒரு ஆண் நம்பிக்கை வைத்து செயல்படுவதைப் போல், மனைவியாகிய ஒரு பெண், காப்பீடு செய்யும்போது, தமக்கு ஏதாவது ஆகிவிட்டால், அதற்காக கிடைக்கும் பணம், கணவன் கைக்கு போவதை விரும்பவில்லை என்று தெளிவாகிறது.

இதிலிருந்து தெரியவரும் உண்மை, சமூகத்தில் இன்று, 'கணவன் - மனைவி' என, தம்பதியராக குடும்பம் நடத்தி வந்தாலும், பரஸ்பர புரிதலும், நம்பிக்கையும் ஊசலாட்டமாகத்தான் உள்ளதென்பதோடு, பெரும்பாலான கணவன்கள், மனைவியின் நம்பிக்கைக்கு உரியவராக இல்லாமலோ, அதற்கேற்றாற்போல், அவர்களின் நடவடிக்கை இல்லாமல் இருப்பதாகவே தெரிகிறது. இதுபோன்ற போக்கு தொடர்வதென்பது, எதிர்காலத்தில் கணவன் - மனைவி - குடும்பம் என்கிற அமைப்பையே குலைத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

ஒவ்வொரு கணவனும், குடும்ப பொறுப்போடும், குறிப்பாக மனைவியின் நம்பிக்கைக்குரியவராகவும் தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொள்வதும், சில இடத்தில் கணவன் பொறுப்புணர்வுடன் இருந்தாலும், அதை மனைவி புரிந்துகொள்ளாமல் மனதில், ஒரு அச்சவுணர்வுடனோ, வெறுப்புணர்வுடனோ, சந்தேகப்பார்வையுடனோ கணவனை தவிர்த்து, மற்றவர்கள் மீது நம்பிக்கைக் கொள்ளும் போக்கை மாற்றிக் கொள்வதும் மிக அவசியமானதும், காலத்தின் கட்டாயமுமாகும்.

— ஆர்.ரகுவர்மன், கபிஸ்தலம்.

குடிநீர் தர மறுத்த கிராதகன்!



தொலைதூர ரயில் பயணங்களின் போது, நான் சைடு லோயர்பெர்த் ரிசர்வ் செய்து கொள்வேன். இரண்டு லிட்டர் பாட்டிலில் ஜின்னும், இன்னொரு இரண்டு லிட்டர் வாட்டர் பாட்டிலில், வோட்காவும் கலந்து வைப்பேன். ஒன்றை பெட்டிக்குள் பத்திரப்படுத்திக் கொண்டு, இன்னொன்றை குடிக்க வைத்துக் கொள்வேன்.

ஒரு வாய் குடிக்க, இருபது பக்கம் வாசிக்க செய்வேன். முழு பாட்டிலும் தீர, நான்கு மணி நேரமாக்குவேன். அந்த இடைவெளியில், நான்கு புத்தகங்களை வாசித்து விடுவேன். ஒரு தடவை என் பெட்டியில், ஒரு கணவன், மனைவி நான்கு வயது மகனும் பயணித்தனர். பொடியன், என் சரக்கு கலந்த வாட்டர் பாட்டிலை கேட்டு, கலாட்டா பண்ண ஆரம்பித்து விட்டான்.

'கொஞ்சுண்டு அவனுக்கு குடிக்க தாங்க சார்...' என்று, கணவன், மனைவி, இதர பயணிகளும், என்னை கெஞ்சினர். குட்டு வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில், மறுத்தேன்.

தொடர்ந்த களேபரத்தின் ஒரு கட்டத்தில், அம்மாகாரி என் பாட்டிலை பிடுங்கி, சிறிது குடித்து விட்டாள். துப்பவில்லை, வாந்தி எடுக்கவில்லை. கணவனிடம் திரும்பி, 'உங்க சனியன் பிடிச்ச வேலையை செஞ்சிருக்கிறார். (மகனிடம் திரும்பி) அச்சுக் குட்டி... அந்த மாமா தண்ணி, ஆயித்தண்ணி. அடுத்த ஸ்டேஷனில் நிக்கட்டும். வேற தண்ணி வாங்கித் தருகிறேன்!' என்றாள்.

அசடு வழிந்தேன். அதன்பின், சரக்கு கலந்த ஒரு பாட்டிலும், சரக்கு கலக்காத ஒரு பாட்டிலும், எடுத்து போக ஆரம்பித்தேன். ஹி...ஹி!

— ஓ.ஜம்புலிங்கம், கோவை.

ஏ.டி.எம்., கொள்ளையை தடுக்க...







கடன் அட்டைகளுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருந்த ஏ.டி.எம்., வசதி, தற்போது அனைத்து வங்கிப்பணி, பணபரிவர்த்தனைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இயந்திரத்தில் கார்டை நுழைத்து, ரகசிய எண்ணை அழுத்தி, பணம் எடுக்கும் சில நொடிகளில், கார்டின் ஜாதகமும், ரகசியக் குறியீட்டு எண்ணும், திருடர்களால் களவாடப்பட்டு, அதன் மூலம் லட்சக்கணக்கில் திருடப்படும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்துள்ளன.

'சைபர் க்ரைம்' போலீசும் கொள்ளையைத் தடுக்க, 'பின் எண்ணை' அவ்வப்போது மாற்றச் சொல்லி அறிவுறுத்துகிறது. ஆனாலும், கொள்ளை சம்பவங்கள் தொடர்கதையாக@வ உள்ளன. இதை முற்றிலும் தடுக்க, ஒரு உபாயம் உள்ளது. மிஷினில் கார்டை நுழைத்து, பின் எண்ணையும் அழுத்திய பின், வந்திருப்பவர் கார்டின் உண்மையான உரிமையாளர் தானா என்பதை அறிய, இயந்திரம் அவரது பிறந்த தேதி மற்றும் தந்தையின் பெயரை மிஷினில் அழுத்தச் சொல்லலாம்.

இதனால், பரிவர்த்தனைக்கு, ஓரிரு நிமிடங்கள் கூடுதலாகலாம். ஆனால், நம்முடைய அட்டையின் ரகசிய எண்ணும், மற்ற விவரங்களும் திருடப்பட்டு, அதன் மூலம் நிகழும் கொள்ளை தவிர்க்கப்படும். வங்கிகளும், காவல் துறையும் கவனத்தில் கொள்ளுமா?

— ஜெ.கும்பகர்ணன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us