
மொட்டை மாடி மாமா!
நாற்பத்தைந்து வயதான என் மாமா, காலை 6:00 மணிக்கு, மொட்டை மாடியில் ஏறினார் என்றால், 8:30 மணி வரை, வயது வித்தியாசமின்றி, எங்கள் காலனி பெண்களை பார்த்து, 'ஜொள்ளு' விட்டுக் கொண்டிருப்பார். வயதானவர்களும், மாமாவின் பார்வைக்கு தப்பாததால், காலனிவாசிகள் அனைவரும் சேர்ந்து, 'ஜொள்ளு மாமா' என, பெயர் வைத்து விட்டனர். இதையறிந்து வெட்கமடைந்த மாமி, மாமாவை திருத்த, எத்தனையோ வழிமுறைகளை கையாண்டும், பலன் பூஜ்ஜியம்தான்.
ஒருநாள், மாமா பெயருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், 'மதிப்பிற்குரிய பெரியவரே... தினமும் காலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை, எங்கள் வீட்டுப் பெண்களை, 'கலைக் கண்ணோடு' தாங்கள் பார்த்து மகிழ்வதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். உங்கள் வீட்டு மாமி, மகாலட்சுமி போல் இருக்கிறார். என்ன செய்வது... அவரின் அருமை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவரை நாங்கள் கண்டு மகிழலாம் என்றால், எங்காவது கடைக்கு வரும் போது தான் பார்க்க முடிகிறது. எனவே, பரந்த மனப்பான்மை உடைய நீங்கள், ஒவ்வொரு நாளும், ஒருவர் வீடு என்ற கணக்கில், இந்த காலனி முழுவதும் அனுப்பி வைத்தால், சர்வ லட்சணம் பொருந்திய மாமியை நாங்களும், 'கலைக் கண்ணோடு' கண்டு மகிழ வசதியாக இருக்கும். வரும் நாட்களில், மாமி எங்கள் வீட்டிற்கு வருவார் என, நம்புகிறோம். வாழ்க மாமா! வளர்க அவரது, கலை ரசனை! இப்படிக்கு, காலனிவாசிகள்...' என்று கடிதம் முடிந்திருந்தது.
கடிதத்தை படித்த மாமா ஆடிப்போய், திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகி விட்டார். இப்போ... கடை மற்றும் ரேஷனுக்கு போவதென்றால் கூட, உடனே பையை தூக்கிக் கொண்டு ஓடுகிறார். எப்படியோ, மாமா திருந்தியதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். மாமாவுக்கு தெரியாத ஒரு ரகசியம் உங்களுக்கு சொல்லட்டுமா? இந்த கடிதம் எழுதியதே எங்க மாமிதான்! சூப்பர் மாமிதான் என்கிறீர்களா?
— பி.அருண், சென்னை.
மாணவர்களின் எதிர்காலம்!
பல ஆண்டுகளுக்குப் பின், சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். கடைத் தெருவில் தற்செயலாக, என் நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போது, படிப்பே வராத மக்குப் பையன் அவன். எல்லா ஆசிரியர்களும், 'இவன் உருப்படவே மாட்டான்...' என்றுதான் அர்ச்சிப்பர். ஆனால், அவன் வியாபாரத்தில் இறங்கி, இன்று, புகழ், செல்வாக்கு, வசதி வாய்ப்பு என, கொடி கட்டிப் பறக்கிறான்.
அவனது இன்றைய சூழல், எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்தது. ஆனாலும், பள்ளிக் கூடத்தில், 'படிப்பில் கெட்டி' என்று எல்லாரிடமும் நல்ல பெயர் வாங்கினாலும், தனியார் நிறுவனத்தின் வேலையிலும், வாடகை வீட்டிலும் காலந்தள்ளும் என் சூழல் வருத்தப்பட வைத்தது.
இன்றைய மாணவர்களின் பெற்றோரே... பிள்ளைகளுக்கு படிப்பு வரவில்லையெனில், அவர்களை படிக்கக் கட்டாயப்படுத்தாமல், அவர்களுக்கு எந்தத் துறையில் ஆர்வமோ அதில் ஈடுபட வையுங்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
குறிப்பு: நண்பனை 'உருப்படவே மாட்டான்...' என அதிகமாக திட்டித் தீர்த்த, வாத்தியாரின் மகள் திருமணச் செலவுக்கு, கணிசமாகப் பண உதவி செய்து, அவரை சந்தோஷப்படுத்தியிருக்கிறான் என் நண்பன்.
— கே.எம்.பாருக், சென்னை.
சமையலும் ஒரு கலை தான்!
என் தோழி வீட்டிற்குச் சென்றிருந்தேன். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது, 10வது படிக்கும், அவளது இளைய மகன் வந்தான். அவனிடம், எங்கள் இருவருக்கும், டீ போட்டு கொண்டு வரும்படி கூறினாள் தோழி.
'ஆம்பிளை பிள்ளையிடம் போய், இந்த வேலையை சொல்கிறாயே... மனதுக்கு சங்கடமாக இருக்கிறது...' என்றேன். உடனே அவள், 'ஆம்பிளை பிள்ளைன்னா, வீட்டு வேலை செய்யக் கூடாதா... எனக்கு பெண் குழந்தைகள் இல்லை. இருவருமே, ஆண் பிள்ளைகள் தான். பிறகு, எனக்கு யார் உதவி செய்வர்? பெரியவன், சமையல் வேலைகளை கற்றுக் கொண்டு, உதவி செய்வான். அவன், இப்போது அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். சமையல் தெரிந்திருப்பதால், அவனுக்கு அங்கு சாப்பாட்டை பற்றிய கவலை இல்லை. அவனே வேண்டியதை சமைத்துக் கொள்கிறான். ஆணும், பெண்ணும் சமம் தான். நீயும், உன் எண்ணத்தை மாற்றிக் கொள்...' என்று பெரிய லெக்சரே கொடுத்து விட்டாள்.
அவள் சொல்வதிலும் நியாயம் உள்ளதை உணர்ந்து கொண்டேன். சமையலும் ஒரு கலை தானே! ஆண்களும் அதை கற்றுக்கொள்வது நல்லது.
— வ.சந்திரா மாணிக்கம், கோச்சடை.

