
கட்டாயப்படுத்தாதீர் பெற்றோரே...
எங்கள் ஊரில் ஒரு பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், திடீரென தற்கொலை செய்து கொண்டாள் அந்த மணப்பெண். பெண்ணுக்கு விருப்பமில்லாத, உறவுக்கார மாப்பிள்ளையை நிச்சயித்ததாகவும், அந்த பெண் மறுத்தும், அந்த வரனை தான் திருமணம் செய்ய வேண்டுமென்று பெற்றோர் கட்டாயப்படுத்தியதால், அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
பெற்றோரே...வாழ்க்கை நடத்தப் போவது உங்கள் மகளோ, மகனோ தான். அவர்களின் விருப்பமில்லாமல், கட்டாயப்படுத்தி, 'பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்...' என்ற போலியான உடன்படிக்கையில், இளம் உயிர்களை கருக செய்து விடாதீர்.
இனிமேலாவது பெற்றோர், தம் பிள்ளைகளின் விருப்பப்படி திருமணம் செய்ய முன் வருவரா?
— பார்வதி கனகராஜ், திருப்பூர்.
எதற்கும் ஓர் அளவு உண்டு!
என் கணவர் ஒரு வெகுளி. சகஜமாக எல்லாருக்கும் உதவி செய்வார். எங்கள் வீட்டுக்கு எதிரே ஒரு தம்பதி. என் கணவரிடம் அடிக்கடி சிரித்து, சிரித்து பேசுவாள், அந்த வீட்டுப் பெண்மணி; ஆனால், என்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை.
என் கணவரை எச்சரித்தேன்; அவரோ, 'நான் தான் ஒரு நல்ல பெண்ணைப் பற்றி தவறாக நினைக்கிறேன்...' என்று கூறினார்.
ஆனால், போகப் போக நிலைமை வேறு விதமாக மாறியது. சிறு சிறு வேலைகளை கூட என் கணவரிடம் கொடுக்க ஆரம்பித்தாள். உதாரணமாக, ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, 'எனக்காக கொஞ்சம் வங்கியில் பணம் எடுத்து தர முடியுமா... ப்ளீஸ்' என்று ஒரு வேண்டுகோள். அவள் கணவர் ஊருக்கு போயிருக்கிறாராம்.
ஏன், கணவர் ஊருக்குப் போயிருந்தால், தானே வங்கிக்கு சென்று வர முடியாதா? யோசித்துப் பார்த்தேன்...எனக்கு வேறு வழி தெரியவில்லை. கணவரிடம், 'இந்த வீடு ராசியில்லை, அது, இது...' என்று சாக்கு போக்கு சொல்லி வீட்டையும், ஏரியாவையும் மாற்றி விட்டேன். பெண்களே...நானும் ஒரு பெண் என்ற முறையில் சொல்கிறேன். அளவுக்கு மீறி பிற ஆடவர்களின் உதவியை நாடி, வீட்டிலுள்ளவர்களுக்கு, 'டென்ஷன்' ஏற்படுத்தாதீர்.
— மதுமதி கண்ணன், காரைக்குடி.
கோவில் சுத்தமாக இருக்க...
கோவில்கள் இன்னும் கொஞ்சம் தூய்மையாக இருக்கக் கூடாதா என்ற ஆதங்கம், நம் எல்லார் மனதிலும் உண்டு. சில கோவில்கள், விதிவிலக்காக தூய்மையாக இருக்கின்றன என்பதை நிதர்சனமாகப் பார்த்த என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். சென்ற வாரம் திண்டுக்கல் அருகில், 8 கி.மீ., தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு என்ற சிற்றூருக்குச் சென்றிருந்தோம். அங்கே, 800 ஆண்டு பழமை மிக்க அழகான சிற்பங்களுடன், ஸ்ரீ சவுந்தர ராஜப்பெருமாள், சவுந்தரவல்லித் தாயாரின் கோவில் இருக்கிறது.
கோவிலையும், சிற்பங்களை யும் ரசித்தபின், பெருமாளுக்கு அர்ச்சனை செய்தோம். தீபம் காண்பித்து அர்ச்சகர் தட்டில் குங்குமத்துடன் வந்து, எல்லாரை யும், குங்குமம் எடுத்துக் கொள்ளச் சொன்னார். எங்களுக்கு வேண்டி யதை எடுத்துக் கொண்டோம். பின்னர், அர்ச்சகரிடம் கேட்டேன். 'இது என்ன புதுமையாக இருக்கிறது. எல்லாக் கோவில் களிலும் அர்ச்சகர்கள் தானே பிரசாதம் தருகின்றனர். இங்கு ஏன் அவரவர்களை எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டேன்.
அதற்கு அர்ச்சகர், 'எல்லா கோவில்களையும் பாருங்கள். நாங்கள் எடுத்துக் கொடுக்கும் விபூதியையும், குங்குமத்தையும் கொஞ்சம் உபயோகித்து விட்டு, மீதியை என்ன செய்வது என்று தெரியாமல், அருகே இருக்கிற தூண்களில் தூவி விட்டு போய் விடுகின்றனர். இங்கே, அவரவர் களுக்கு வேண்டியதை அவர்களே எடுத்துக் கொள்வதால் அனைத்து தூண்களும் சுத்தமாக இருக் கிறது...' என்றார். மற்ற அர்ச்சகர்களும், தாங்கள் பணிபுரியும் கோவில்களில் இதை செயல்படுத்த முன் வர வேண்டும்.
— ஒய்.தண்டபாணி, சென்னை.