
எண்களை தமிழில் சொல்ல தெரியுமா?
பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம், தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப் பட்டிருந்தது. எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், '1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0' என்றாள். 'இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?' எனக் கேட்டேன். அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
அதாவது, 'க'டுகு, 'உ'ளுந்து, 'ங'னைச்சு, 'ச'மைச்சு, 'ரு'சிச்சு, 'சா'ப்பிட்டேன், 'எ'ன, 'அ'வன், 'கூ'றினான்; 'ஓ' என்றாள்.
இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள் அல்ல எனப் புரிந்தது. தமிழின் சுவையை, அவ்வாக்கியத்தின் மூலம் அறியவும் செய்தேன். 'தமிழுக்கு அமுதென்று பேர்...' என சும்மாவா சொன்னார்கள்?
— மா.தனலட்சுமி மாரிமுத்து, விருதுநகர்.
உறவினரால் நேர்ந்த அவமானம்!
தனியார் நிறுவனம் ஒன்றில், வேலை பார்க்கும் திருமணமான பெண் நான். எனக்கும், என் கணவருக்கும் ஏற்பட்ட சிறு பிரச்னையால், அவரை விட்டு பிரிந்து, அம்மா வீட்டில் இருக்கிறேன். ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து, பஸ்சில் வீடு திரும்பி கொண்டிருந்தேன். நான் அமர்ந்திருந்த இருக்கைக்கு, இரண்டு இருக்கை தள்ளி, ஆண்கள் அமரும் பகுதியில், என் நெருங்கிய உறவினர் ஒருவர் அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே, 'என்னம்மா, உனக்கும், உன் கணவருக்கும் சண்டையாமே... அம்மா வீட்டில் இருக்கிறாயாமே...' என்று சப்தம் போட்டு கேட்டார். பஸ்சில் இருந்த அனைவரும் என்னை திரும்பி பார்த்தனர். எனக்கு மிகவும் அவமானமாக போய் விட்டது. யார் வீட்டில் தான் பூசல் இல்லை. அதற்காக, எல்லார் முன்னிலையிலும் இப்படி வெளிச்சம் போட்டு காட்ட வேண்டுமா? உறவினர்களே... உங்களால் உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை; தொந்தரவு தராமல் இருக்கலாமே!
— சி.சுபத்ரா, சிவகங்கை.
புகைப்படம் கொடுக்காதீர் இளம் பெண்களே...
நான், கல்லூரி மாணவி. இரண்டு வருடத்திற்கு முன், பிளஸ் 2 முடித்து பிரியும் போது, தோழி ஒருத்தி, 'என் நினைவாக போட்டோ ஒன்று வேண்டும்...' என்று கேட்டதால், நானும் என் புகைப்படம் ஒன்றை அவளிடம் கொடுத்தேன். அன்று நான் கொடுத்த புகைப்படம், என் தோழியின் அண்ணன் கையில் கிடைத்திருக்கிறது. என்னுடைய பெயர், விலாசம் அனைத்தையும் எப்படியோ அறிந்து கொண்டு, என்னிடம் பேச ஆரம்பித்தார். என் தோழியின் அண்ணன் என்ற முறையில், நானும் அவருடன் சகஜமாக பேசினேன்.
திடீரென்று, ஒரு நாள் அவர் என்னிடம், 'ஐ லவ் யூ' என்று சொல்லி விட்டார். அதிர்ச்சியடைந்த நான், அன்றிலிருந்து அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டேன். ஒரு முறை கல்லூரியிலிருந்து வீட்டிற்கு திரும்பும் போது, என்னை வழி மறித்து, தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தினார். நான் மறுக்கவே, தன் சட்டை பையிலிருந்து என்னுடைய புகைப்படத்தை எடுத்துகாட்டி, 'என்னுடன் பேசாவிட்டால், இந்த புகைப்படத்தை நீ தான் எனக்கு கொடுத்தாய் என்று, உன் பெற்றோரிடம் கூறி விடுவேன். அதுமட்டுமல்ல, வலைதளத்தில் போட்டு, நாறடித்து விடுவேன்...' என்று பயமுறுத்தினார். வேறு வழியின்றி, விருப்பமில்லாமல் அவருடன் பேசத் தொடங்கினேன், நான் பேசின மகிழ்ச்சியில், அவரும் என் வீட்டு விலாசத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து மடல் அனுப்பி விட்டார். இது என் பெற்றோர் கண்ணில் பட்டு, நடக்கக் கூடாத விவகாரமெல்லாம் நடந்து, நான் கல்லூரிக்கு செல்வது தடை செய்யப்பட்டது. படிப்பில் ஆர்வம் உள்ள நான், படிப்பையும் பாதியில் நிறுத்தி, பெற்றோரின் அன்பையும் இழந்து, அனாதையாக நிற்கிறேன்.
சகோதரிகளே... உங்கள் நினைவாக உங்கள் தோழியிடம் புகைப்படம் கொடுக்கும் போது, சற்று சிந்தித்து செயல்படுங்கள். இல்லையேல், எனக்கு ஏற்பட்ட நிலைதான் உங்களுக்கும்!
— க.வினோதினி, சென்னை.