
காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!
அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், 'இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். 'அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ஜோடி ஜோடியா வர்றாங்க. ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் வாங்கிட்டு, இங்கேயே இரண்டு மணி நேரம், டேரா போட்டு அரட்டை அடிக்கிறாங்க. அரட்டை அடிச்சாலும் பரவாயில்லை. ஒருத்தர் தொடையில் ஒருத்தர் கை போடறதும், முத்தம் கொடுக்கறதும், ஊட்டி விடறதும்... பார்க்க சகிக்கலே.
'ஆம்பளை பசங்க அடங்கி போனாலும், இந்த பொண்ணுங்க எல்லாத்துக்கும், தாராளமா இடம் கொடுக்கறாங்க. இவங்களை பார்த்து, மற்ற பெண்களும், குடும்பத்தோடு வருவோரும் கடைக்கு உள்ளே வர தயங்கறாங்க. இவ்வளவு, வெட்ட வெளிச்சத்திலும், இந்த இளசுகள் யாரையும் மதிக்காம, கொஞ்சம் கூட பயப்படாம, ரொம்ப மோசமா நடந்துக்கறாங்க. அதனால தான், 'காதலர்களுக்கு அனுமதி இல்லை'ன்னு போர்டு வச்சுட்டேன். ஆளுங்களை பார்த்த உடனே, கண்டுபிடிச்சு, திருப்பி அனுப்பி விடுவேன். அவுங்களால வர்ற வியாபாரமும், பணமும் எனக்கு முக்கியமில்லை. ஒழுக்கம் தான் முக்கியம்...' என்றாரே பார்க்கலாம்.
பள்ளி, கல்லூரி காதல் ஜோடிகளே... என்னதான் வயதுக் கோளாறு இருந்தாலும், பொது இடங்களில் மற்றவர்களை முகம் சுளிக்க வைக்கலாமா? உங்கள் வாழ்வில் அதற்கு என்று ஒரு நேரம், காலம் உண்டு. அப்போது காட்டுங்க உங்க வித்தைகளை. அதுவரை, எல்லாவற்றையும் கொஞ்சம் அடக்கி வாசிக்க கற்றுக் கொள்ளுங்களேன்.
— கே.ஆர்.ராமகிருஷ்ணன், கோவை.
கல்வி சுற்றுலாவா? இதையும் கொஞ்சம் பரிசீலிக்கலாமே!
சில தனியார் பள்ளிகளில், கல்வி சுற்றுலா என்ற பேரில் லண்டன், பாரிஸ், ஜெர்மனி, பிரான்ஸ், சிங்கப்பூர், துபாய் என்று அயல் நாட்டு இடங்களைக் குறிப்பிட்டு, மாணவர்களிடையே ஆசையை வளர்த்து, பெற்றோரிடமிருந்து பெருந்தொகையை வசூலிக்கின்றனர்.
இதில், வசதி படைத்த பெரும் பணக்கார பெற்றோரின் பிள்ளைகள் மட்டுமே, பங்கேற்க முடிகிறது. மற்ற மாணவர்களால் இதில் பங்கு பெற முடிவதில்லை. கல்வி சுற்றுலா செல்வதற்கு, இந்தியாவில் எவ்வளவோ முக்கியமான இடங்கள் இருக்கின்றன.
இந்திய பண்பாடு, கலாசாரம் மற்றும் நம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, தாஜ்மஹால், செங்கோட்டை போன்ற சரித்திர புகழ் பெற்ற இடங்களின் சிறப்பு, இவைகளை பற்றிய அறிவை, பெறும் விதத்தில் மாணவர்களின் கல்வி சுற்றுலா அமைய வேண்டும்.
அப்போதுதான்... நாளைய தலை முறைகளான, இன்றைய மாணவ சமுதாயத்தால், இந்தியா வல்லரசாக மாற, பல நல்ல திட்டங்களை உருவாக்க முடியும். கல்வி சுற்றுலா, எல்லா தரப்பு மாணவர்களும், பங்கு கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும். சமீபத்தில், 'டிவி' சேனல் ஒன்றில், சில மாணவர்களிடையே, 'ராஜஸ்தான் எங்கு உள்ளது? அந்த மாநிலத்தை பற்றி நாலு விஷயங்கள் சொல்லுங்கள்...' என்று, நிகழ்ச்சி நடத்துகிறவர் கேட்ட போது, யாரும் சரியாக பதில் அளிக்கவில்லை என்பது, மிகவும் வேதனைக்கும், வெட்கத்துக்கும் உரியதாக இருந்தது. கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லும் பள்ளிகள் யோசிக்குமா?
— கோ.சிவகுமார், முகப்பேர்.
அக்கம் பக்கத்தாரை நம்புங்க!
என் தோழி ஒருத்தி, குடும்பத்துடன் நான்கு நாட்கள் சுற்றுலா கிளம்பினாள். அதை தெருவிலுள்ள அனைவரிடமும் கூறி, அண்டை வீட்டுக்காரியிடம், வீட்டுச் சாவியை கொடுத்து, தினமும் மாலை வீட்டுக்குள் விளக்கு போட்டு, பின் அணைக்குமாறு சொல்லி விட்டு கிளம்பினாள்.
'தெரு பூராவும் தம்பட்டம் அடித்து, பக்கத்து வீட்டுல சாவியையும் கொடுத்துட்டு போறியே, எல்லாரும் பொறாமைபடுவாங்களே... கமுக்கமா போக வேண்டியது தானே, சாவியை வேற கொடுத்துட்டு போற... எதையாவது எடுத்துட்டு போனா என்ன செய்வ...' என, கேட்டேன்.
'பைத்தியக்காரி... எல்லாருக்கும் தெரிஞ்சதுனால, முன் பின் தெரியாதவங்க யாரும் வீட்டுப்பக்கம் நடமாடுனா, எல்லாருமே என்ன ஏதுன்னு விசாரிப்பாங்க, பக்கத்து வீட்டுல சாவி இருக்கறதால, நமக்கு தான் நல்லது. நம்மளை நம்பி சாவி கொடுத்துருக்காங்களேன்னு... அவங்க வீட்டை விட, நம்ம வீட்டை கவனமாக பார்த்துக்குவாங்க. வீடு தேடி யார் வந்தாலும், மரியாதையா பதில் சொல்லி அனுப்புவாங்க. ஆள் இல்லாத வீட்டுக்கு அண்டை விட்டுக்காரங்களையும், தெருக்காரங்களையும் விட, வேறு யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஒரு தடவை, இப்படி செய்து பார், புரியும்...' என்றாள்.
யோசித்துப் பார்த்தபோது, இதுவும் சரியாகத்தான் இருக்கும் என்று தோன்றியது.
— ஜி.ராஜரத்னா, தர்மாபுரம்.