
மணவறையில் அலப்பரை செய்த மாணவியர்!
சமீபத்தில், ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமகளின், கல்லூரி தோழிகள், மண்டபம் முழுவதும், பட்டாம் பூச்சிகளாக நிறைந்திருந்தனர். பளபளப்பான நாகரிக உடைகளில் ஜொலித்துக் கொண்டிருந்த அவர்களை நோக்கியே, இளைஞர்கள் மற்றும் உறவினர்களின் கண்கள், வட்டமிட்டன. அதனால், குஷியான அந்த கல்லூரி இளசுகள் செய்த அலப்பரையால், திருமண மண்டபமே அல்லோலகல்லோலப்பட்டது.
ஒரு கட்டத்தில், அவர்களின் அலப்பறை எல்லை மீறிப்போனது. அது, பலரையும் முகம் சுளிக்க வைத்ததுடன், ஒரு சிலர், கடுப்பாகி, திட்டவும் செய்தனர்.
மணப்பெண்ணின் கல்லூரித் தோழிகள் என்பதால், அளவுக்கு அதிகமாக இடம் எடுத்து, நலங்கு வைக்கும் நிகழ்ச்சியில், கலர்ப்பொடி, மற்றும் ஜிகினாப் பொடியை, அனைவர் மீதும் பூசுவதும், டைனிங் ஹாலில், ஐஸ்கிரீமை மேலே கொட்டி செய்த ரகளையும் சொல்லி மாளாது.
இவை போதாது என்று, முகூர்த்த நேரத்திலும், மணமக்கள் ஒன்றாக நின்ற வரவேற்பு விழாவிலும், புகைப்படம், வீடியோ எடுக்கும் போது, 'இருடி... நான் இந்த ஸ்டில்லில் கண்ணை மூடிட்டேன், வாயைக் கோணலாக வைத்து விட்டேன், ஹேர்ஸ்டைல் சரியில்லை, நான் பொண்ணு தோளில் சாஞ்சு நிற்கிறேன்...' என்று கலாட்டா செய்தனர். இதனால், புகைப்படம் மற்றும் வீடியோகிராபர்களும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களும், நண்பர்களும் கடுப்பாகி விட்டனர்.
இவர்கள்... அநாகரிகமாக செய்த கலாட்டாவை பார்த்த அனைவரும், 'இளைஞர்களே பரவாயில்லை, அடக்க, ஒடுக்கமாக நடந்து கொள்கின்றனர்...' என்று பாராட்டினர்.
ஆகவே, தோழிகளே... கலாய்க்கிறோம் பேர்வழி என்று, அளவுக்கு மீறி கலாட்டா செய்து மதிப்பையும், மரியாதையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். விருந்து, விசேஷம் நடத்துபவர்களுக்கு, வேதனையை உண்டு பண்ணாதீர்கள்!
- ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.
ஏன் இப்படி பழக விடணும்!
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில், பையனுக்கு வரன் பார்த்தனர். வந்த வரன்களில், ஒரு பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து, பெண்ணை பிடித்து விட்டதாக கூறிவிட்டனர். பின், ஒரு நாளில், பெண் பார்க்க போவதாக திட்டம்.
பெண்ணின் ஊரிலேயே, பையன் வேலை பார்த்ததால், அதற்குள், இருவரும் பழக ஆரம்பித்து விட்டனர். இரண்டு வீட்டிற்கும் தெரிந்தே, இந்த கூத்து நடந்தது.
இந்நிலையில், சில மாதங்கள் கழித்து, பெண் பார்க்கச் சென்றிருந்த போது, பெண், மிகவும் ஒல்லியாக இருந்ததால், பையனின் உறவினருக்கு பெண்ணை பிடிக்கவில்லை. பையன் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவனது, பெற்றோர் ஒத்துக் கொள்ளவில்லை.
இதனால், திருமணம் நின்று போனது. தற்போது, அந்த பையன், 'உங்களால், நான் ஒரு பெண்ணுக்கு, நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன். எனக்கு, இனி, திருமணமே வேண்டாம்...' என்று கூறி, வெளிநாட்டிற்கு பறந்து விட்டான். இந்நிலையில், அந்தப் பெண்ணுக்கு, வேறொரு இடத்தில், திருமணம் முடிந்து விட்டது.
பையனின் பெற்றோரோ, தற்போது, தவியாய் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பெண் கூட பார்க்காத நிலையில், சின்னஞ்சிறுசுகளை பழக விட்டது, பெரியவர்கள் தவறு தானே... தேவையா இது?
- ஜெ. ஜெசிக்கா, சென்னை.
பாஸ்ட்புட் கொடுமை!
எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு, குழந்தை பிறந்து நான்கு நாட்களில், அது, இறந்து விட்டது. அக்குழந்தைக்கு கேன்சராம். தாய்க்கு, கர்ப்பையில் கேன்சர் பாதிப்பு இருந்திருக்கிறது. அது, குழந்தையை பலி வாங்கி விட்டது.
கேன்சருக்கு காரணம், அந்த பெண், கர்ப்பமாக இருந்த போது, இயற்கை உணவை அறவே புறக்கணித்து, கடையில் விற்கும் ரெடிமேட் உணவுகள், திரும்ப திரும்பச் சுட வைத்த எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பேக்கரி பொருட்கள், சிப்ஸ் என்று, இவைகளையே, அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். இதன் விளைவே, கர்ப்பபை புற்று நோய்.
'மேல்நாட்டு மோகத்தில், மக்கள் தாங்களாகவே நோயைத் தேடி கொள்கின்றனரே...' என்று, அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மிகவும் வேதனைப்பட்டார். இதைத் தான், 'சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வது' என்று கூறுவர்.
இனிமேலாவது, இளம் தலைமுறையினர் நம்நாட்டு உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பரா!
- பத்மா திருமலை, கோவை.

