
பெண்கள் என்றாலே போகப் பொருள் தானா!
தோழியோடு அங்கப்பிரதட்சணம் செய்ய, கோவிலுக்கு சென்றிருந்தேன். ஈர உடையோடு, கோவிலை சுற்றி உருண்டு வரும் போது, இளைஞர்கள் சிலர், எங்களைப் பார்த்து, 'ஜொள்' விட்டதோடு, 'நல்ல தரிசனம் மச்சி...' என, கமென்ட்டும் அடித்தனர். ஏதோ பேசி விட்டு போகட்டும் என, கண்டுக்காமல் இருந்தாலும், அவர்கள் விடுவதாயில்லை. எங்களின் சேலை விலகுவதையும், ஈர உடையில் தெரிந்த கவர்ச்சியையும் பார்த்து, 'ஐயோ பால் டப்பா நசுங்குதே, கறவை மாடு அழகா, கன்னி மாடு அழகா... ரேசர் வாங்கிக் கொடுக்கணும் போலிருக்கே மாமா...' என்றெல்லாம், இரட்டை அர்த்தம் தொனிக்க, பேச ஆரம்பித்து விட்டனர்.
வாழ்க்கையில் விரக்தியும், கவலையும் துரத்த, வேண்டுதலோடு கோவிலுக்கு நிம்மதி தேடி வந்தால், இங்கேயுமா இப்படி என நொந்த எனக்கு, எங்கிருந்து தான் அவ்வளவு வேகம் வந்ததோ தெரியவில்லை. அவர்களில் ஒருவனது சட்டையை பிடித்து, 'பெண் போலீஸ்கிட்டயே உங்க வேலையை காட்டுறீங்களா?' என கேட்கவும், இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போயினர். தோழிகளே... இடம் கொடுத்தால், மடத்தையும் பிடிப்பர் இந்த மாதிரி ஆசாமிகள். இது போன்ற தருணங்களில், நம் எதிர்ப்பை காட்டுவதோடு, நம் பாதுகாப்பையும், உறுதி செய்து கொள்ள வேண்டும்.
— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.
எம்மதமும் சம்மதமே!
நெருங்கிய நண்பர் ஒருவர், சற்று வித்தியாசமான கொள்கை உடையவர். அதை, அவரது சொந்த வாழ்க்கையிலும் செயல்படுத்தி, அசத்தி இருக்கிறார். நண்பரின் தந்தை, இந்து; தாய் கிறிஸ்துவர். என் நண்பரோ கிறிஸ்துவ பெண்ணை காதலித்து, மணந்தார். அவருக்கு இரண்டு மகன்கள். அவர்களை, அவர்களின் விருப்பப்படியே படிக்க வைத்தார். படிக்கும் காலத்தில் மூத்த மகன், ஒரு முஸ்லிம் பெண்ணையும் இளைய மகன், வேலை பார்க்கும் இடத்தில், இந்து பெண்ணையும் விரும்பினர்.
இதை அறிந்த நண்பர், எந்த வித எதிர்ப்பும் காட்டாமல், இரு குடும்பத்தாரிடமும் பேசி, இரண்டு திருமணங்களையும் செய்து கலக்கினார். 'மகன்கள் ஆசையை நிறைவேற்றுவதை விட, வாழ்க்கையில், வேறு என்ன இருக்கிறது...' என்பார் நண்பர். இதில், 'ஹைலைட்'டான விஷயம் என்னவென்றால், இப்போது நண்பர் வீட்டில், இந்து, முஸ்லிம், கிறிஸ்து என்று, எந்த மத விசேஷம் என்றாலும், தவறாமல் கொண்டாடுகின்றனர்.
நண்பர் அடிக்கடி சொல்வது, 'எம்மதமும் சம்மதமே! தவிர, ஒருவருக்கு பிடிக்காத ஒன்றை, வலுக்கட்டாயமாக திணிப்பதை விட, அவர்களின் எண்ணமறிந்து, அதை நிறைவேற்றி வைத்தால், வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை...' என்பார். உண்மை தானே!
நண்பரின் வாழ்க்கை, கவலை இல்லாமல் பயணிக்கிறது. இதைத் தவிர, வேறென்ன வேண்டும் வாழ்க்கையில்!
— வி.மூர்த்தி, சென்னை.
வாய்ப்பை நழுவ விட்டால்...
வாழ்க்கையில், வாய்ப்புகள் சில முறை தான் வரும். அதை, பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டால், மீண்டும் அந்த வாய்ப்புகள் வராமலேயே போகலாம் என்பதற்கு, என் உறவினர்களுக்கு நேர்ந்த அனுபவமே சாட்சி.
இளம் வயதில், அவருக்குப் பெண் கொடுக்க, பலர் முன் வந்தனர்.
அவருக்குப் பிடித்திருந்தால், அவர் அம்மாவுக்கு பிடிக்காது; அம்மாவுக்கு பிடித்தால், அப்பாவுக்கு பிடிக்காது. அப்பாவுக்கு பிடித்த இடத்தை அம்மாவும், மகனும் மறுப்பர்.
முடியும் நிலைக்கு வந்த பல இடங்கள், அம்மாவுக்கு திருப்தி இல்லை என்பதாலேயே, நின்று போனது. இன்னொரு பக்கம், அந்த உறவினரின் மேல், காதல் கொண்டு, பல பெண்கள் அணுகியுள்ளனர்.
அதில் ஒரு பெண், 'நீ என்னுடன் வாழ வேண்டாம். உன் வீட்டில் ஏற்பாடு செய்யும் எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் கட்டிக்கொள். ஆனால், பேருக்கு மட்டுமாவது எனக்கொரு மஞ்சள் கயிற்றைக் கட்டு, உன் மனைவி என்ற நினைவுடன் வாழ்ந்து கொள்கிறேன்...' என்று கெஞ்சியிருக்கிறாள்.
எல்லாவற்றையுமே தட்டிக் கழித்து விட்டனர். இப்போது, அவருக்கு வயது முதிர்ந்து, தொப்பை, வழுக்கை, சரும நோய் என்று, தோற்றமே உருமாறி விட்டது. பெற்றோருக்கும் தள்ளாமை வந்து விட்டது. கண் மூடும் முன், மகனின் திருமணத்தை பார்க்க ஆவலாயிருக்கிறனர். வேறு மதம், ஏழை, விதவை, விவாகரத்தானாலும் பரவாயில்லை என்று பார்க்கின்றனர். இன்று வரை அமையவில்லை. வேலை, திருமணம், வீட்டுமனை எல்லாம், அமையும்போதே, முடித்துக் கொள்வது நல்லது. வாய்ப்புகளை அலட்சியப்படுத்தினால், வாய்ப்புகள் நம்மை அலட்சியப்படுத்தி விடும். எச்சரிக்கை!
— சுந்தரமூர்த்தி, திருவள்ளூர்.

