சந்தேகம்... சந்தோஷ கேடு!
என் தோழியின் மகளுக்கு, கோவில் மண்டபத்தில், திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணத்திற்கு, நாள், நட்சத்திரம் பார்த்து, தேதி குறித்து, பத்திரிகை மாதிரியை வாசித்த பின், சம்பந்திகள், தாம்பூலத் தட்டை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், 'ஒரு நிமிஷம்... பெண்ணிற்கு எத்தன சவரன் நகை போடுவீங்க... பையனுக்கு தட்சணையா எவ்வளவு ரொக்கம் தருவீங்க...' என்று, கேட்டார் வரனின் அப்பா.
'இருபது சவரன் நகை போட்டு, இரண்டு லட்ச ரூபாய் தருவோம்...' என, பெண்ணின் அப்பா பதில் சொல்ல, ' அதை ஒரு பேப்பரில் எழுதித் தாங்க...' என, வரனின் அப்பா கேட்கவும், சபையில் அனைவருக்கும் அதிர்ச்சி. 'எல்லார் முன்னிலையிலும் அவர் வாக்குக் கொடுக்கிறார்ல...' என்று, சிலர் வாதிட, 'வாய் வார்த்தைகளை நம்ப மாட்டேன். எனக்கு எழுதித் தரணும்...' என்று விடாக்கண்டனாய் கேட்டார் வரனின் அப்பா.
அதற்கு பெண்ணின் தந்தை, 'நான் எழுதித் தர்றேன்; பதிலுக்கு நீங்களும், 'உங்கள் மகளை, நாங்கள், காலம் முழுவதும் கண் கலங்காமல், பார்த்துக் கொள்வோம்'ன்னு உறுதி மொழி எழுதிக் கொடுங்க...' என்று கேட்டார். பதில் பேச முடியாமல், தலை கவிழ்ந்தார் வரனின் அப்பா.
திருமணம் என்பதே நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கும், புனிதமான நிகழ்வு. இதில், சந்தேகங்களை எக்காரணம் கொண்டும் நுழைய விடக் கூடாது.
— ஜக்கி, இடையர்பாளையம்.
'டிப்ஸ்' கலாசாரம் தேவையா?
தற்போது, கம்ப்யூட்டர் தொடர்பான படிப்பு படித்து, சாப்ட்வேர் துறையில், வேலை செய்பவர்கள், அதிகரித்து வருகின்றனர். இவர்கள், அதிகமாக சம்பாதிப்பதால், 'டிப்ஸ்' என்ற பெயரில், பணத்தை வாரி இறைக்கின்றனர். பெட்ரோல் பங்கிற்கு போனால், காற்று அடிப்பவர்களுக்கு, ஏ.டி.எம்.,க்கு போனால் அங்கிருக்கும் காவலாளிகளுக்கு என, எங்கு சென்றாலும், 'டிப்ஸ்' கொடுத்து, புது பழக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
மீன் கடையில் மீன் வெட்டுபவர், உணவு விடுதியில் வேலை செய்யும் சர்வர் மற்றும் பார்க்கிங் காவலாளிகள், சிகை அலங்காரம் செய்வோர் என, இவர்கள், 'டிப்ஸ்' கொடுப்போரின் பட்டியல், நீள்கிறது. எல்லாரும் இவர்களை போல சம்பாதிப்பது இல்லை. நம்மால், இவர்களை போல, 'டிப்ஸ்' கொடுக்க முடியாது என்பதால், குறைவாக, 'டிப்ஸ்' கொடுத்தாலோ அல்லது கொடுக்காமல் விட்டாலோ, நம்மை ஒரு மாதிரி பார்க்கின்றனர், கம்ப்யூட்டர் நிபுணர்களே... ஏற்கனவே, லஞ்சம், ஊழல், என்று தலைவிரித்தாடுகிறது. இதில், நீங்கள் வேறு, புது வழக்கத்தை ஏற்படுத்தாதீர்.
— ஜெ.கண்ணன்,சென்னை.
சொந்த வீடு கட்டி, குடி போறீங்களா?
சமீபத்தில், புதிதாக வீடு கட்டி குடியேறிய, என் நண்பனின், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு, குடும்பத்தோடு சென்றிருந்தேன். இன்முகத்துடன் நண்பரின் குடும்பத்தினர் வரவேற்று, புதிய வீட்டை சுற்றி காண்பித்தனர். வீடு கலை அம்சத்துடன், நல்ல காற்றோட்டத்துடன் கட்டப்பட்டிருந்தது. அதைவிட என்னை பெரிதும் கவர்ந்தது, வீட்டைச் சுற்றி இருந்த பலவகை மரங்களும், பூச்செடிகளும் தான். அந்த சூழலில் வீட்டைப் பார்த்த போது, ஏதோ ஒரு பூங்காவில் இருப்பது போல ரம்மியமான உணர்வு மேலோங்கியது.
நண்பனிடம், 'இன்று தானே குடி வந்துள்ளீர்கள். அதற்குள் எப்படி, இவ்வளவு பெரிய மரங்களும், பூச்செடிகளும்...' என்றேன். அதற்கு நண்பன், 'வீடு கட்டுவதற்கு மூன்றாண்டு முன்பே, இந்த மனையை வாங்கி விட்டேன். காலி இடத்தில், சுற்றி வேலி அமைத்து, கிணறு தோண்டி, சிறு சிறு விதைகளும், செடிகளும் ஊன்றி வைத்தேன். அது இப்போது சோலைவனமாக காட்சியளிக்கிறது...' என்றார்.
நண்பனின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியந்தேன். இந்த யோசனையை, புது வீடு கட்ட நினைப்போர், கடைபிடித்தால், ஒவ்வொரு வீடும் ஒரு சொர்க்கம் தானே!
— முத்தூஸ், தொண்டி.

