மனைவியை அலைபாய விடாதீர்!
என் தோழியை, சமீபத்தில் சந்தித்தேன். மனம் விட்டு பேசிக் கொண்டிருந்த போது, பேச்சு, 'அந்த' விஷயத்திற்கு திரும்பியது. அவள் சொன்னதை, அப்படியே இங்கே தருகிறேன். 'இப்பெல்லாம், 'அந்த' விஷயத்துக்கு, நான் ரொம்ப ஏங்கறேன்டி... வெளிநாட்டுல வேலை பார்க்கறவரை கல்யாணம் செய்துகிட்டது, ஆரம்பத்துல சந்தோஷமா இருந்தது. ஆண்டுக்கு ஒரு முறை, ஒரு மாதம் தங்கியிருந்து சென்றவர். இப்போது, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறைதான் வருகிறார். இதனால், நான் என் இளமையை, சந்தோஷத்தை இழக்கிறேன்...
'நான், ஏதோ ஆசையில் தடுமாறுகிறேன்னு நினைக்காதே, நானொரு சாதாரண பெண். உடலின் நியாயமான தேவைகள் புறக்கணிக்கப்படுவதால், ஏற்படும் மன உளைச்சலால் தத்தளிக்கிறேன். எவ்வளவு காலம்தான், மனதை கட்டுப்படுத்திக் கொண்டு வாழ்வது? என் மனம் அலைபாயத் துவங்கி விட்டது. கூட்டமான பஸ்சில், ஆண்களோடு நெருக்கமாக செல்லப் பிடிக்கிறது. யாரும் உரசினால் கூட எதிர்ப்புக்காட்ட தயங்குகிறேன். 'எல்லாம், இந்த அவஸ்தையால் தான். அவரைப் பிரிந்து இருக்கும் நான், உடலுடன் நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்தில் எங்கே தப்பு செய்து விடுவேனோ என, பயமாக இருக்கிறது...' என்றாள்
அவளின், நியாயமான உணர்ச்சிகளை புரிந்து கொள்ள முடிந்தது. முற்றும் துறந்ததாகச் சொல்லும் சாமியார்களே, இந்த விஷயத்தில் தடுமாறும் போது, இவள் என்ன செய்வாள் பாவம்! வெளிநாட்டில் வசிக்கும் கணவர்களே... என் தோழியின் இந்தக் கருத்து, உங்கள் மனைவியிடமும் இருக்கலாம். புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
- தீபா ராகவ், காரைக்குடி.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா?
இளம் வயதிலேயே, விதவையாகி விட்ட என் தோழிக்கு, கல்லூரி செல்லும் வயதில் ஒரு பெண் உள்ளார். பெண்ணின் படிப்பு செலவு, மற்றும் வயிற்றுப் பிழைப்புக்காக, ரோட்டோர சாப்பாட்டுக் கடை ஒன்றை திறந்து, வியாபாரம் செய்து வருகிறாள் தோழி. கல்லூரி சென்று வரும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், தோழிக்கு உதவியாக இருந்தாள் மகள். முக்கியமாக, இரவு டிபன் நேரத்தில், தாய்க்கு உதவியாக, இருப்பாள்.
காலை, மதியம் வேளைகளில் சாப்பிட வருபவர்களால், எந்த தொந்தரவும் இருக்காது. ஆனால், இரவு வேளையில், போதையோடு வரும், சில இளைஞர்களால் நாளுக்கு நாள், தொல்லை அதிகரித்து வந்தது.
தோழியையும், அவளது மகளையும் போதை ஆசாமிகள் நக்கல், நையாண்டி மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை பேசி, வியாபாரம் செய்ய விடாமல் இடையூறு செய்தனர். இதற்கு மேலும், பொறுக்க முடியாத தோழி, என்னிடம் ஆலோசனை கேட்டாள். நான் சொன்ன யோசனையின் படி, மகளிர் காவல் நிலையத்தில், ஒரு முறையீடு செய்தாள் தோழி. கூடவே, ஒரு வேண்டுகோளோடு... 'நான் புகார் செய்ததாக தெரிய வேண்டாம். நீங்கள் மப்டியில் வந்து, எங்கள் கடையை கண்காணியுங்கள்...' என்று, கேட்டுக் கொணடாள்.
அன்று இரவு, மப்டியில் கடைக்கு வந்த மகளிர் காவலர்கள் இருவரையும், அந்த போதை கும்பல் விட்டு வைக்கவில்லை.அவர்கள் போலீஸ் என்று தெரியாமல், அந்த இளைஞர்கள் கிண்டல் செய்ய துவங்கியதும், போலீஸ் தன் வேலையை காட்டியது. புகார் தந்தது யார் என்று காட்டிக் கொள்ளாமல், போலீசே நேரே கண்ட காட்சியாக எடுத்துக் கொண்டு, அந்த இளைஞர்களை ஒருவழி ஆக்கி விட்டனர். இப்போது, எந்த வித தொந்தரவும் இல்லாமல், கடையை நடத்துகிறாள் தோழி. வறுமையிலும் உழைத்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் என் தோழி போன்றோரை, பாராட்டா விட்டாலும் பரவாயில்லை, தயவு செய்து தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்.
— வி.சாந்தி, வெட்டுவான்கேணி.
திசை திருப்பும் பாட்டு வேண்டாம்!
சமீபத்தில், அரசு பஸ் ஒன்றில், பயணம் செய்த போது நடந்த சம்பவம் இது: அந்த பஸ்சில், நிறைய பள்ளி மாணவ, மாணவியர் பயணம் செய்தனர். அப்போது, ஒரு பயணி, 'என்ன சார்... பஸ் ஸ்டாண்டில், பஸ் புறப்படும் போது, பாட்டு போட்டு அமர்க்களம் செஞ்சீங்க. இப்போ பாட்டை நிறுத்திட்டீங்களே... கூட்டம் சேக்கறதுக்குத் தான், அந்த 'பில்டப்பா...' என்று, கேட்டார்.
அதற்கு கண்டக்டர், 'அப்படி இல்லங்க சார்... ஸ்கூல் பசங்க பஸ்சில் ஏறிட்டாங்க. இப்போ அவங்களுக்கு பரிட்சை நடக்குது. வீட்டில படிச்சது போக, பஸ்சில் வரும் போது, கடைசி நேர, 'ரிவிஷன்' செய்வாங்க. அவங்க படிக்கற நேரத்தில, பாட்டு போட்டால், அவங்க மனசில், சினிமா பாட்டு தான் பதியும். படிக்கறதுக்கு தொந்தரவாவும் இருக்கும். அதனால தான், இந்த மாதிரி பரீட்சை நேரத்தில், நாங்க பாட்டுப் போட மாட்டோம். அதே போல, ஆசிரியர் பயிற்சித் தேர்வு, தகுதித் தேர்வு, குரூப் தேர்வுன்னு மற்ற தேர்வு நேரங்களிலும், பாட்டு போட்டு, படிக்கறவங்களுக்கு தொல்லை தரக்கூடாதுங்கறதில, நானும், டிரைவரும் உறுதியா இருக்கிறோம்...' என்றார்.
பள்ளி மாணவ, மாணவியர் தங்களால் மதிப்பெண் குறைந்து விடக் கூடாது என்ற அக்கறையில் செயல்படும் டிரைவர், கண்டக்டரின் நல்ல மனசை, அனைவரும், வாய்விட்டு பாராட்டினோம்.
— ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.

