தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 04, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 04, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இவர்களுக்கு யார் பாடம் புகட்டுவது?

என் பையன், தனியார் மெட்ரிக் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறான். அந்தப் பள்ளியில் கல்விக் கட்டணத்தை, திடீரென்று இரண்டு மடங்காக்கி விட்டனர். இது குறித்து, நிர்வாகத்திடம் பேச, எங்களை அனுமதிக்கவில்லை. எனவே, சில பெற்றோர் சேர்ந்து, கல்வித் துறையில், புகார் அளித்தோம். விசாரணையும் நடந்தது; பின், பள்ளி நிர்வாகம் எங்களை அழைத்து, சில ஆயிரம் குறைத்துக் கட்டுமாறு கேட்டுக் கொண்டது. வேறு வழியின்றி, சம்மதித்தோம்.

ஆனால், அதன்பின், என் பையனின், 'ஹோம் வொர்க்' எதுவும் சரியாக திருத்தப்படவில்லை. வாரா வாரம் நடத்திய, 'டெஸ்ட்' விவரங்கள், ஒரு நோட்டில் இருக்கும். அதை, பையனிடம் தராமல், பள்ளியிலே வைத்துக் கொண்டனர். இதனால், அவன் எப்படி படிக்கிறான் என்று, எங்களால், தெரிந்து கொள்ள இயலவில்லை. இதைவிடவும் பெரிய கொடுமை, கட்டணம் தொடர்பாக கேள்வி கேட்ட பெற்றோரின் பிள்ளைகள், எந்தவொரு கலை நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், 'அவர்கள் படித்தாலும் படிக்காவிட்டாலும், கண்டுகொள்ள வேண்டாம்...' என்று, வகுப்பாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் பிள்ளைகள், வகுப்பில் எதையாவது கேட்டால், 'க்ளாஸ் ரூம்ல ரப்பர் தொலைஞ்சுடுச்சுன்னு உங்க பெத்தவங்க போராட்டம் செய்திடுவாங்க...' என்று, ஆசிரியர்களின் கேலி வேறு. இதையெல்லாம் கூறி, 'நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்...' என்று, என் பிள்ளை அழுத போது, எனக்கு ஏற்பட்ட கோபத்திற்கு அளவே இல்லை. போராடியது நாங்கள்; ஆனால், குழந்தைகளிடம், சில்லரைத்தனமாக நடந்து கொள்வது எந்த வகையில் நியாயம்? படிப்பை சொல்லி கொடுக்கும் இந்த மேதாவிகளுக்கு, யார் பண்பைக் கற்றுக் கொடுப்பது? என்னைப் போன்று பாதிக்கப்பட்ட மற்ற பெற்றோர்களும், குழந்தைகளை இந்த ஆண்டு வேறு பள்ளியில் சேர்க்க முடிவு செய்து விட்டோம்.

அரசுப் பள்ளிகள், எல்லா விதத்திலும் தரமாக இருந்தால், நாங்கள், ஏன் இப்படி தனியார் பள்ளியிடம், பிச்சைக்காரர்களைப் போல, நிற்க போகிறோம்?

அரசாங்கம், டாஸ்மாக் நிர்வாகத்தில் காட்டுகிற அக்கறையில், பத்து சதவீதமாவது, பள்ளிகள் விஷயத்தில் காட்டினால், லட்சக்கணக்கான பெற்றோர், மகிழ்ச்சியுடன் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியிலேயே படிக்க வைப்பர்.

— பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.

விளையாட்டு ஐடியா!

என் தோழி, புறநகர்பகுதியில், புதிதாக வீடு கட்டி, குடி புகுந்திருந்தாள். அண்மையில், அவளைப் பார்க்க, அவள் வீட்டுக்கு சென்ற போது, அவள் கணவன் மற்றும் பிள்ளைகளுடன், வாசலில் விளையாடிக் கொண்டு இருந்தாள்.

அவளைப் பார்த்து, 'என்னடி இளமை திரும்புதா? சின்னப்புள்ள மாதிரி விளையாடுறியே...' என்று, கேலியுடன் கேட்டேன். 'இந்தப் பகுதியில், என் பசங்களோடு, விளையாடுவதற்கு ஆளில்ல. அதனால், நாங்க அவங்க விளையாட்டிற்கு, கம்பெனி கொடுக்கிறோம். இப்படி விளையாடுறதுனால, சில நன்மைகள் இருக்கு. நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறவங்க என்கிறதால, எங்களுக்கு, உடற்பயிற்சி செய்ய நேரம் கெடைக்கிறதில்ல. இப்படி பிள்ளைங்க கூட விளையாடுறதுனால, உடலுக்கு, ஆரோக்கியமும், மனதுக்கு உற்சாகமும் கிடைக்கிறது.

'இதோட சடுகுடு, கில்லி மற்றும் பம்பரம் போன்ற, பாரம்பரிய விளையாட்டுகளையும், இடையிடையே கற்றுக் கொடுக்கிறோம். இதை, என் பசங்க, அவங்க வகுப்பு பசங்களிடம் பகிர்ந்துக்கிறாங்க. நம்ம பாரம்பரிய விளையாட்டுகள் மறையாமல் காக்க, எங்களோட சிறுபங்கு இது...' என்று, ஒரு சிற்றுரையே நிகழ்த்தி விட்டாள்.

தோழியின் ஐடியாவை நாமும் பின்பற்றலாமே!

— மு.சுலைஹா, கீழக்கரை.

காலம் மாறிப் போச்சு!

நாங்கள் சிறு வயதாக இருந்த போது, எங்கள் வீட்டுக்கு, ஜட்கா வண்டியில், உறவினர்கள், முன் அறிவிப்பு இன்றி வருவர். எதிர்பாராத இந்த விருந்தாளிகளால், நாங்கள் மகிழ்ச்சியில், திக்குமுக்காடிப் போவோம். அது ஒரு காலம்!

அதுபோலவே, இப்போதும் செய்தால், எவ்வளவு இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்று நினைத்து, மதுரைக்கு சுற்றுலா சென்றிருந்த போது, அங்கு வசிக்கும், என் ஒன்று விட்ட தங்கை வீட்டுக்கு போயிருந்தேன். முதல் முறை செல்வதாலும், விலாசம் மட்டுமே தெரிந்த நிலையில், சற்று திண்டாடிப் போனோம். ஊரிலிருந்து, தொலைவில் இருந்தது அவர்கள் வசிக்கும் காலனி. ஆட்டோவில் சென்றதால், பெரிய தொகை பழுத்து விட்டது.

அவர்கள், எங்களை வரவேற்று உபசரித்தாலும், தற்செயலாக, என் தங்கையின் கணவர் பேசுவதைக் கேட்க நேரிட்டது... 'என்ன இது, திடீர்ன்னு சொல்லாம கொள்ளாம வந்து நிக்கறாங்க. வர்றோம்ன்னு ஒரு போன் கூடவா செய்ய முடியாது. என்ன சிக்கனமோ... முதல் தடவை வந்திருக்காங்க, புடவை, வேஷ்டி வாங்கி தரணும்ன்னு வேற அடம் பிடிக்கறே... இங்கே ஏது கடை... டவுனுக்கு போய் வாங்கிட்டு வரணும். எனக்கு, 'ஷிப்ட்'டுக்கு டைம் ஆயிடுச்சு. நீயே, ஆட்டோ பிடிச்சு, போயி வாங்கிட்டு வா...' என்று, கடுப்புடன் சொல்லிக் கொண்டிருந்தார். இதைக் கேட்டதும், மனசு கனத்து விட்டது.

இனி, யார் வீட்டுக்கு போனாலும், முன்கூட்டி சொல்லி, அவர்கள் சவுகரியத்தை தெரிந்த கொண்ட பின் தான், போவது என்று முடிவு செய்தோம்.

ஹும்... காலம் ரெம்பவே மாறிவிட்டதுங்கோ!

ஆர்.மாலதி, ஸ்ரீபெரும்புதூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us