PUBLISHED ON : ஜூன் 08, 2014

மேலதிகாரிகளே... மரியாதையை காப்பாற்றி கொள்ளுங்கள்!
என் கணவர், மாரடைப்பு ஏற்பட்டு திடீரென்று இறந்து விட்டார். அவர், அரசு பணியில் இருந்ததால், அவருக்குப்பின், அந்த வேலை எனக்குக் கிடைத்தது. இளம் விதவையான நான், மற்றவர் மனதில் சலனம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, என் உடை, அலங்கார விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். என் செக் ஷன் சூப்பர்வைசர் ஒரு, 'ஜொள்' பார்ட்டி. அதுமட்டுமில்லாமல், செக் ஷனில் இருப்பவர்கள் தன்னிடம் வந்து வழிந்துகொண்டு பேச வேண்டும் என்றும், தனக்கு, 'ஜால்ரா' அடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்ப்பார். இதில் எனக்கு விருப்பம் இல்லாததால், நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருப்பேன்.
இதனால், அந்த சூப்பர்வைசர், என்னைப்பற்றி மற்றவர்களிடம் மட்டமாக, கீழ்த்தரமாக பேசுவார். என் வேலையில் எப்போதும் குறை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார். வயிற்று பிழைப்புக்காக வேலைக்கு வந்தால், இது போன்ற மனிதர்களிடம் மாட்டிக்கொண்டு, வேதனைப்பட வேண்டியிருக்கிறது. படித்து, நல்ல பதவியில் இருப்பவர் இப்படி நடந்து கொண்டால், இவர் மீது எப்படி மரியாதை ஏற்படும்? தனக்கு சாதகமாக இல்லாத ஒரே காரணத்தால், ஒருவர் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டு, தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இம்சைப்படுத்தும் இவரைப் போன்றவர்கள் எப்போது தான் திருந்தப் போகின்றனரோ!
— எம்.ஜெயந்தி, மடிப்பாக்கம்.
இன்ப அதிர்ச்சி ஏற்படுத்திய இளசுகள்!
சென்னை திருவல்லிக்கேணி கோஷா மருத்துவமனை, பேருந்து நிறுத்தத்தில், நான் கண்ட காட்சி, என்னை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாலை, 5:00 மணி இருக்கும். 75 வயது மதிக்கக்தக்க, ஒரு மூதாட்டி கையில், ஒரு துணிப்பையுடன், பரிதாபமாக, கடை ஓரமாக அமர்ந்திருந்தார். சில இளம் பெண்கள், பஸ் நிறுத்தத்தில், கூட்டமாய் நின்று கொண்டிருந்தனர். அவர்களுள், இருவர் அங்கிருக்கும் பெட்டிக் கடையில், ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி வந்து, 'பாட்டி...' என்று, அன்புடன் அழைத்து, அவரது கையில் கொடுத்ததுடன், காபியும் வாங்கி கொடுத்தனர். அந்த மூதாட்டி, அவர்களுக்கு தெரிந்தவராய் இருக்குமோ என நினைத்து, அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், 'தெரிஞ்சவங்க இல்ல; அந்தப்பாட்டியின் முகம் வாடிப் போய் இருந்ததால் தான், காபி மற்றும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்தோம்...'என்றனர்.
நான், அவர்களைப் பாராட்டி, மனமாற வாழ்த்தினேன். 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்...' என்ற வள்ளலாரின் வாக்கு தான், என் நினைவிற்கு வந்தது.
- எஸ்.தியாகமணி, சென்னை..
கணவன் இருந்தும்...
என், கணவருக்கு ஒரு தங்கை உள்ளார். கணவனை இழந்தவர். பிறந்த வீட்டில் இருக்கும் அவரை, எந்த வேலையும் செய்ய விடாமல், எல்லாருமே அன்பாக பார்த்து கொள்வோம். ஆனால், அவரோ, எங்களது இந்த சலுகையை தனக்கு சாதகமாக்கி, முடிசூடா ராணி மாதிரி வளைய வந்து கொண்டிருக்கிறார். நான் பொட்டு, பூ வைத்துக்கொண்டால் போச்சு... வீடு திமிலோகப்படும். அவரைப் போலவே நானும் பொட்டு வைக்காமல், பூ சூடாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்.
அது மட்டுமல்ல, நான் என் கணவருடன் எங்காவது வெளியில் சென்று வந்தால், பத்ரகாளியாக மாறி விடுவார். இதற்கு பயந்தே நான் வெளியில் எங்கும் செல்வது கிடையாது. என்னுடைய மாமியார், எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்றுவது போல், தன் மகளுக்கு சாதகமாக பேசுவது போல், என்னை இழிவுப்படுத்துகிறார்.
எவ்வளவு நாளைக்குத் தான், இந்த இம்சையை பொறுத்துப் போவதோ தெரியவில்லை. இத்தனைக்கும், எனக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டு தான் ஆகிறது. வீட்டு பெண் வாழாமல் இருக்கிறார் என்பதற்காக, வந்த மருமகளும் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பது, எந்த விதத்தில் நியாயம்? கணவன் இருந்தும், பூ, பொட்டு இல்லாமல் இருப்பது கொடுமை அல்லவா? இதை எப்படி இவர்களுக்கு சொல்லி, புரிய வைப்பது?
— ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி..
