PUBLISHED ON : ஜூன் 22, 2014
வாஞ்சை மிக்க வர்ணனை!
ஏர்போர்சில் பணிபுரியும் என் தம்பி, விடுமுறைக்கு சென்னை வந்திருந்தான். தன்னுடன் பணிபுரியும் நண்பர் சொல்லியிருந்தபடி பேரில், அவரது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து, நண்பர் கூறிய விஷயங்களை சொல்வதற்காக, அவர்களது கிராமத்துக்கு போனான். நானும், என் தம்பியுடன் சென்றிருந்தேன். அக்குடும்பத்தாருடன் தம்பி, வழக்கமான பொது விஷயங்களை பேசினாலும், இடையிடையே, நண்பர், தன் மனைவி மேல் வைத்திருக்கும் பாசம், குழந்தைகளை பற்றிய அவரது பேச்சு, மனைவி அனுப்பிய கடிதங்களின் சுவாரசியம் என்று, இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நண்பரது உணர்வுகளை மிகவும், 'டச்'சிங்காக கூறினான்.
வீடு திரும்பிய போது, எனக்குள் நெருடிய இந்த விஷயம் குறித்து, 'ஏம்ப்பா... இதெல்லாம் அவங்க போன், லெட்டர்ல, 'ஷேர்' செய்துக்க மாட்டாங்களா... ரொம்ப போரடிச்சிட்டியே...' என்றேன். அதற்கு அவன், 'நீ சொல்றது சரி தான்; ஆனாலும், தன் கணவர் தங்களை பற்றியே நினைச்சிட்டுருக்கிறத, மற்றவர்கள் சொல்லி, அவங்க கேக்குறப்ப, ரொம்ப சந்தோஷமாயிருக்கும். அந்த நிம்மதியான உணர்வு, நெடு நாளைக்கு குடும்பத்தை, 'பிரஷ்ஷா' வெச்சிருக்கும்...' என்று விவரித்த போது, அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சிலிர்ப்புடன் தம்பியை பாராட்டினேன்.
— என்.கிர்த்திவாசன், சென்னை.
அதிர்ச்சி வைத்தியம்!
சமீபத்தில், பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்த போது, உற்சாக பானம் அருந்தி, தள்ளாடியவாறு ஏறிய, நடுத்தர வயதை தாண்டிய ஆசாமி ஒருவன், இளம் பெண் ஒருவர் அருகே போய் உட்கார்ந்தான். அந்தப் பெண் அவனை அருவருப்பாக பார்க்க, 'ஹி... ஹி...ஹி... நான் உங்கப்பா மாதிரி; நீ, என் மக மாதிரி...' என்று வழிந்தான். அந்தப் பெண்ணும் கொஞ்சம் ஒதுங்கி, அமர்ந்து கொண்டாள்.
பஸ் மேடு, பள்ளத்தில் குலுங்கும் போதும், டிரைவர், பிரேக் பிடிக்கும் போதும், அதை சாக்காக வைத்து, அந்தப் பெண் மீது விழுவதும், இடிப்பதுமாக இருந்தான். அந்தப் பெண் கோபத்தில் முறைக்கும் போதெல்லாம், 'ஹி... ஹி...ஹி... நான் உங்கப்பா மாதிரி; நீ, என் மக மாதிரி...'என்ற டயலாக்கையே, திரும்ப திரும்ப கூறி வந்தவன், ஒரு கட்டத்தில், அவளது மடியில் போய் விழுந்து, 'ஹி... ஹி...ஹி...' என்று, பல்லைக் காட்ட, 'பளார்' என்று, அறை விட்ட அந்தப் பெண், 'நான் உங்க மக மாதிரி; நீங்க, எங்கப்பா மாதிரி, எங்கப்பா இது மாதிரி தவறாகவோ, அநாகரிகமாகவோ நடந்துக்கிட்டா, நான் இப்படித்தான், 'ஷாக் ட்ரீட்மென்ட்' தருவேன்...' என்றாள். அடுத்த நிறுத்தத்தில், ஆசாமி அம்பேல்.
பெண்களை, கிள்ளுக்கீரையாக நினைத்து, அழிசாட்டியம் செய்தால், இப்படிப்பட்ட அதிர்ச்சி வைத்தியம் தான் கிடைக்கும். நினைவிருக்கட்டும், 'குடி' மகன்களே!
— கே.அஸ்வின், மதுரை.
என்ன ஜென்மங்களோ!
ஜூன் 8, 2014 வாரமலர் இதழில், 'கணவன் இருந்தும்' என்ற தலைப்பில் வாசகி ஒருவர், கணவனை இழந்த நாத்தனாரால் தான் படும் அவதிகளை எழுதியிருந்தார். அதே போன்று, என் தோழிக்கு நேர்ந்த கொடுமை இதோ...
சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது, என் தோழியின் நீண்டநாள் ஆசை. 'கணவன் - மனைவி இருவரும் சம்பாதிக்கிறீர்கள்; நல்ல வீடாக பார்த்து வாங்கக் கூடாதா...' என்று, நாங்கள் கூட கேட்பதுண்டு. பத்தாம் வகுப்பு படிக்கும் தோழியின் மகனோ, 'படிப்பதற்கு தனி அறை வேண்டும்...' என்று, தினமும் புலம்புகிபறான். இதனால், 'ப்ளாட் வாங்கலாம்...' என்று கூறி, தன் சேமிப்பு மற்றும் நகைகள் அனைத்தையும் கொடுப்பதாக சொல்லியும், அவள் கணவன், ஏனோ தயங்குகிறார்.
தோழியின் வற்புறுத்தலால், ஒவ்வொரு முறை வீடு வாங்க முயற்சிக்கும் போதெல்லாம், ஏதாவது முட்டுக்கட்டை போட்டு, தடுத்து வருகிறார் விவாகரத்தான தோழியின் நாத்தனார். இதற்கு மாமியாரும் உடந்தை.
தற்சமயம், கூட்டு குடும்பமாக இருக்கும் இவர்கள், சொந்தமாக வீடு வாங்கி சென்று விட்டால், தங்களுக்கு மாதா மாதம் இவர்களால் வரும் வரும்படி நின்று விடும் என்று, அவர்களாகவே கற்பனை செய்துள்ளனர். ஆனால், இருவருமே தொடர்ந்து உதவும் மனநிலையில் தான் உள்ளனர். அதுமட்டுமல்லாமல், தன்னை விட இவள் மட்டும் எப்படி வசதியாக வாழலாம் என்ற பொறாமையில், தோழியின் கணவரிடம் எதையாவது சொல்லி, வீடு வாங்குவதை தடுத்து வருகிறார் நாத்தனார்.
எப்படியிருக்கிறது பாருங்கள்... படிப்பும், வேலையும் இல்லாமல், தன் அகம்பாவத்தில் விவாகரத்து பெற்று, பெற்றோரின் நிழலில் உட்கார்ந்து, ராஜாங்கம் நடத்தும் நாத்தனார் புத்தியை, என்ன சொல்வது?
தானும் வாழாமல், அடுத்தவர்களையும் வாழ விடாமல் தடுக்கும், இது மாதிரியான ஜென்மங்கள் திருந்துவது எப்போது? தன்னை நம்பி வந்தவளை, சந்தோஷமாக வாழ வைக்கத் தெரியாத, இத்தகைய கணவன்மார்களுக்கு, திருமணம் ஒரு கேடா!
— வேதனைப்படும் தோழிக்கு, ஆறுதல் கூற இயலாமல், தவிக்கும் அன்புத் தோழி.
