PUBLISHED ON : ஜூலை 27, 2014
இப்படியும் இளைஞர்களா!
எங்கள் பக்கத்து ஊரில், இளைஞர் நற்பணி மன்றம் ஒன்று உள்ளது. அவர்கள், ஆண்டுதோறும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டில், விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்துவர். வழக்கம் போல், இந்த ஆண்டும், பகலில் விளையாட்டுப் போட்டிகளும், இரவில், பரிசளிப்பு விழாவும், கலை நிகழ்ச்சியும் நடந்தன.
பரிசளிப்பு விழாவில், ஒரு முக்கிய சிறப்பு விருந்தினர் வரப் போகிறார் என்ற அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில், மேடையில் தோன்றிய அந்த சிறப்பு விருந்தினரை பார்த்து, அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். காரணம், அவர் ஒரு திருநங்கை.
தமிழகத்திலேயே, முதன் முறையாக, அரசுப் பணி பெற்ற, திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் குணவதி தான் அவர். இவர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில், பணிபுரிகிறார். படிப்போ மிக அதிகம்; மாஸ்டர் டிகிரி மற்றும் கின்னஸ் சாதனை என, பல பெருமைக்கும் சொந்தக்காரர். இவரது பேச்சு, மக்கள் மத்தியில், திருநங்கைகள் மீதான தவறான எண்ணத்தை நீக்கியது. விழாவில் பரிசு வழங்கி சிறப்பித்த அவருக்கு, நற்பணி மன்றம் சார்பில், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது. பின் நடந்த கலை நிகழ்ச்சிகளும், ஒரு விசில் சத்தம் கூட இல்லாமல், அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்து முடிந்தது.
இவ்விழாவை கண்ட நான் உட்பட அனைவரும்,இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இளைஞர்களை வாழ்த்தினோம்..
திருநங்கைகளை கேலி செய்யும் இளைஞர்ளே... நீங்களும், இந்த நற்பணி மன்ற இளைஞர்களை போல், யோசிக்கலாமே!
— ம.அந்தோணி கஸ்பார், முள்ளிப்பாடி.
மருத்துவ பரிசோதனையை அலட்சியப்படுத்தாதீர்!
ஒரு பெரிய கடையில், வீட்டு உபயோகப் பொருள் வாங்கிய எனக்கு, முழு உடல் மருத்துவ பரிசோதனைக்கான இலவச கூப்பனைக் கொடுத்தனர். எனக்கும், குடும்பத்தாருக்கும், என் அலுவலகத்தில் இந்த வசதி உண்டென்பதால், இந்த கூப்பனை அடுத்த பிளாட்டில் குடியிருக்கும், அதிக வசதி இல்லாத, ஒரு நண்பருக்கு கொடுத்தேன். அவர், 'எனக்கு ஒரு பிரச்னையுமில்லை வேண்டாம்...' என்று கூறி, வாங்க மறுத்தார்.
நான்தான், 'ஐம்பது வயதுக்கு மேல், எல்லாருமே கண்டிப்பாக, வருடா வருடம், பரிசோதனை செய்து கொள்ளணும்...' என்று வற்புறுத்தி, கூப்பனைக் கொடுத்தேன்.
ஒரு நாள் செக்கப்புக்கு போய் வந்த அவர், அதற்குப்பின் என்னை கண்ட போது, கடுப்புடன் முகத்தை திருப்பிக்கொண்டார். காரணம் தெரியாமல் குழம்பி போய், என் மனைவியிடம் இதைப் பற்றி கூறியபோது, அந்த நண்பர் சொன்னதாக, மனைவி கூறியது, 'அவர் மெடிக்கல் செக்கப் செய்த போது, கொலஸ்டிரால் இருந்ததுடன், இதயத்திலும், நுரையீரலிலும் சின்னச் சின்ன பிரச்னைக இருக்கிறதா சொல்லி, அதுக்கு மருந்து மாத்திரைகள எழுதிக் கொடுத்ததுடன், உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க சொல்லியிருக்காங்க. அதனால கடுப்பாகி போன அவர், எல்லாரிடமும், 'எனக்கு உடம்புல ஒரு நோயும் இல்ல; பாழாப்போன இலவசக் கூப்பனால் தான், இப்ப மனகஷ்டமும், மருந்து செலவும் ஆகிப் போச்சு... எல்லாம் அந்த மனுஷனால தான்...' என்று கூறியதாக சொன்னார். இதைக் கேட்ட எனக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லை.
இவர் மட்டுமல்ல இவரைப்போன்ற பலர், 'எனக்கு ஒரு நோயும் இல்ல; வரவும் வராது...' என்று, வீண் ஜம்பம் பேசி, எந்த மருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ளாமலும், மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்காமலும், அலட்சியமாக உள்ளனர்.
வாசகர்களே... மனித உடம்பு என்பது, கல் கோட்டை அல்ல; ஆண்டுகள் பல கடந்தாலும், அப்படியே இருக்க! ரத்தமும், சதையும், எலும்பும், கழிவும் ஆன இந்த உடம்பை, சரியாக பராமரிக்கவில்லை என்றால், நம்மை நம்பி வாழும் நம் குடும்பத்தினருக்குத் தான் இழப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள்!
— ஆர்.பாலாஜி, ஸ்ரீபெரும்புதூர்.
காலனை கண்டு அஞ்சாத கர்மவீரர்
சமீபத்தில் என் அக்காவின் மாமனாரின் உடல் நிலை மோசமடைந்து, மருத்துவர்களால் நாள் குறிக்கப்பட்ட நிலையில், அவரை பார்க்க மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அவர் உடல்நிலை குறித்து கேட்டபோது, தன்னுடைய வாழ்க்கை முடிய போவது பற்றி துளியும் கவலை படாமல், 'நான் செய்ய வேண்டிய கடமைகளை நல்லமுறையில் செய்துட்டேன். என் பிள்ளைகள், பேரன், பேத்திகள் என்று எல்லாரையும் நல்ல நெலமைக்கு கொண்டு வந்தாச்சு. இனி, எனக்கு என்ன கவலை... சந்தோஷத்தோடு வாழ்க்கையோட முடிவை எதிர்பார்த்துட்டு இருக்கிறேன்...' என்றார்.
அவருக்கு ஆறுதல் கூற சென்ற நான், அவர் கூறிய வார்த்தைகளை கேட்டு, அசந்து போனேன்.
தன் மனைவியை அருகில் அழைத்த அவர், தன்னுடைய இறப்பிற்கு பின், தன் நண்பர்கள் யார் யாரிடம் சொல்ல வேண்டும் மற்றும் தான் இறக்கும் அன்று என்னென்ன செய்ய வேண்டும், பெண் எடுத்த, பெண் கொடுத்த சம்பந்திகளுக்கு என்னென்ன செய்முறை செய்ய வேண்டும் என்று, ஒவ்வொன்றையும் அவர் விளக்கி சொல்ல, அவருடைய மனைவி, பொங்கிவரும் கண்ணீரை துடைத்தபடி கேட்டுக்கொள்ள, அருகில் இருந்த எனக்கு, அழுகை வந்துவிட்டது.
தான் வளர்த்து உருவாக்கிய குடும்பத்தில், அனைத்து காரியத்தையும் பொறுப்போடு செய்த அவர், தன் காலம் முடிவதை பற்றி பயப்படாமல், தான் இறந்த பின், செய்ய வேண்டிய காரியங்கள் கூட சரியாக நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் நடந்து கொண்டதை பார்த்த போது, காலனை எதிர்கொள்ளும் கர்மவீரர் போலவே காட்சியளித்தார்.
— சித.பழனியப்பன், மதுரை.
