PUBLISHED ON : செப் 07, 2014

மசால் தோசை உஷார்!
என் தோழியின் கணவர் திடீர் திடீரென சைக்கோ மாதிரி எதையாவது செய்து விடுவார். இதனால் ஏற்படும் மன அழுத்தம் தாங்காமல், என்னிடம் வந்து தன் மனக் குமுறலை கொட்டுவாள். நானும், எதையாவது சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பேன். இது, 2௦ ஆண்டு தொடர்கதை! திடீரென்று இரண்டு மாதங்களாக அவளிடம் இருந்து எந்தப் புலம்பலும் இல்லை. அத்துடன், ஆளும் 'பளபள' வென்று மாறியதோடு, முகத்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது. அவளிடம், 'என்னடி... உன் கணவர் திருத்திட்டாரா...' என ஆவலோடு விசாரித்த எனக்கு அவளது பதில் அதிர்ச்சியளித்தது. விஷயம் இதுதான்:
எத்தனை முயற்சி செய்தும் திருந்தாத தன் சைக்கோ கணவரின் தொல்லையால் ஏற்பட்ட மன அழுத்தம் குறைய, வாரம் இருமுறை அவர் மிகவும் விரும்பி சாப்பிடும் மசால் தோசையை, சுவையாகப் பரிமாறி இருக்கிறாள்; மன அழுத்தம் போய் விட்டதாம்!
மசால் தோசைக்கும், மன அழுத்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தலையை பிய்த்துக் கொள்ள வேண்டாம். தோழி தயாரிக்கும் மசாலா தோசையின் சிறப்பு என்ன தெரியுமா... சூடான, 'மொறுமொறு' வென்ற பொன்னிற தோசையில், மசாலாவை உள்ளே வைத்து, தோசை நடுவில் எச்சிலைத் துப்பி, அழகாக மூடி, ஆவி பறக்க தட்டில் வைத்து விடுவது தான்!
என்ன வாந்தி வருகிறதா... தோழியின் மனஅழுத்தம் போயே போச்சு!
சைக்கோ கணவர்களே... இனியாவது ஜாக்கிரதையாக இருங்கள் அல்லது தோசை சாப்பிடாதீர்கள்!
- சங்கமித்ரா நாகராஜன், கோவை.
அட! தெருவிலுமா?
ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரம்... நிசப்தமாக இருந்த எங்கள் தெருவில், திடீரென, வாசலில் சத்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தேன்.
மூன்று இளம்பெண்கள் மற்றும் மூன்று வாலிபர்கள். எங்கிருந்தோ பைக்குகளில் வந்தவர்கள், வண்டியை நிறுத்தி ஓடிப்பிடித்து விளையாடி கொண்டிருந்தனர்; யாரும் நிதானத்தில் இல்லை. பெண்கள் ஓடுவதும், பையன்கள் அவர்களை விரட்டி விரட்டி மொபைல் போன் கேமராவில் படம் பிடிப்பதும், பின் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து சிரிப்பதும், நடைபாதையில் புரளுவதுமாய் அமர்களம் செய்தனர்; அந்த கோலத்தில் படமும் எடுத்துக் கொண்டனர்.
நான், அவர்களைப் பார்த்து, 'யார் நீங்க.... எங்கிருந்து வர்றிங்க, என்ன செய்துகிட்டிருங்கீங்க...' என்று சத்தம் போட்டேன்.
'ஒண்ணுமில்ல ஆண்டி... சும்மா தமாஷ்...' என்றான் ஒருவன். அதில் ரொம்ப அலம்பல் செய்த பெண்ணைக் கூப்பிட்டு, 'பாத்தா படிக்கிற பொண்ணுங்களா தெரியறிங்க... அவனுங்க மேலே இப்படி விழுந்து, புரண்டு படம் புடிச்சுக்கிறீங்களே... இன்னைக்கு இது தமாஷா தெரியலாம்; நாளைக்கு அவனுங்க எடுத்திருக்கிற போட்டோக்களால உங்க வாழ்க்கைக்கு பாதிப்பு வராதுன்ங்கிறது என்ன நிச்சயம். அந்த படங்கள வச்சு உங்கள மிரட்டலாம்; நெட்ல போட்டு அசிங்கப் படுத்தலாம். இதனால, உங்க எதிர்காலமே பாழாக வாய்ப்பு இருக்கு. எத்தனை நாடகத்துலயும், சினிமாவுலயும் பாத்திருப்பிங்க... புத்தி வேணாம். ஒழுங்கா அவங்கவங்க வீட்டுக்குப் போங்க இல்லன்னா, போலீசுக்கு போன் போடுவேன்...' என்று மிரட்டியதும், மெதுவாக முணுமுணுத்தப்படி, பைக்கில் பறந்தனர்.
பீச்சுகளிலும், பப்புகளிலும் போட்ட ஆட்டங்கள் போதாதென்று, இப்போது ஆள் இல்லாத தெருக்களிலும் அரங்கேற துவங்கிவிட்டனரே என்ற கவலை ஏற்பட்டது.
பெண்களை கண்காணிக்காமல், கண்டிக்காமல் விட்டுவிட்டு அசம்பாவிதம் நேர்ந்த பின், 'ஐயோ... குய்யோ...' என்று அரற்றுவதில் என்ன லாபம் பெற்றோர்களே!
— கமலை, சேலையூர்.
காசா, பாசமா?
எனக்கு தெரிந்தவரின் மகன், சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்கிறார். அவர் மகனுக்கு, அதே துறையை சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்து வைத்தார். இருவருக்கும், லட்சத்தை தாண்டி சம்பளம்.
அவர்களுக்கு முதலில், ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவர்கள் வேலைக்கு இடைஞ்சல் என, அந்த பெண் குழந்தையை, அப்பா வழி தாத்தா வீட்டில் வளர விட்டனர். அடுத்து, மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறக்கவே இந்த குழந்தை, அம்மா வழி தாத்தா வீட்டில் வளர விடப்பட்டது.
முதல் குழந்தைக்கு தற்போது, நான்கு வயது; இரண்டாவது குழந்தைக்கு, இரண்டு வயது. இரண்டு குழந்தைகளுமே, பெற்றோர் பாசம் கிடைக்காமல் வாடிப்போய் வளர்ந்து வருகின்றனர். பிள்ளைப் பாசம் இல்லாமல், பணமே குறியாக உள்ள இந்த மாதிரி ஜென்மங்களை என்னவென்பது!
முதியோர்களை பராமரிக்க மனம் இல்லாமல், முதியோர் இல்லத்தில் கொண்டு போய் தள்ளுவதை போல, இந்த பிள்ளைப்பாசம் இல்லாதவர்களுக்கு, 'குழவி இல்லம்' ஏற்படுத்திக் கொடுத்தால், சுயநல இன்பத்துடன் வாழ்வர்.
பிள்ளையைப் பெற்றால் மட்டும் போதாது; அதற்கு பாசத்தையும் ஊட்டி, வளர்க்க வேண்டும் என்பதை, இக்கால இளம் தம்பதியினருக்கு யார் அறிவுரை சொல்வது?
- கு.அருணாசலம், தென்காசி.
