PUBLISHED ON : அக் 17, 2010

அந்தரங்க விஷயங்களை சீண்டாதீர் !
சாமியார் ஒருவரால் நடத்தப்படும் பிரசித்தி பெற்ற கோவிலுக்குச் சென்றிருந்தேன். முக்கிய சன்னதியின் கதவுகள் மூடியிருக்க, சன்னதியின் முன் நின்று, கோவிலை நடத்தி வரும் சாமியார், பக்தர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஆண்கள், பெண்கள் தனித்தனி பிரிவாக அமர்ந்திருந்தனர். பெண்கள் பகுதியை நோக்கி பேசிக் கொண்டிருந்த சாமியார், 'வீட்டு விலக்கு வந்து ஐந்து நாட்கள் முடிவடையாத பெண்கள் யாராவது இருந்தால், அவர்கள் பின்னால் சென்று, ஓரமாக உட்காருங்கள்!' என்றார். உடனே இரண்டு பெண்கள் மனசாட்சிக்கு பயந்து, எழுந்து பின்னால் சென்று விட்டனர். இருவரும் திருமண மாகி, குழந்தை பெற்றவர்கள். இருப் பினும், மற்றவர் அவர்களை புழுக்களைப் போல் பார்த்தனர். திருமணம் முடிந்து குழந்தைகள் பெற்ற பெண்கள் மாதவிலக்கு காலத்தில் மூன்று நாட்களுக்குப் பின் கோவிலுக்குச் செல்வதில் தவறில்லை என பெரியோர் கூறுகின்றனர். அப்படி இருக்கையில், ஆண், பெண் இருபாலரும் அமர்ந்திருக்கும் சபையில், ஆன்மிகம் என்ற பெயரில், பெண்களின் அந்தரங்க விஷயமான, 'அந்த' விஷயத்தை அங்கே கிளறி விடுவது சுத்த அபத்தம். அந்த சாமியாருக்கு இது ஒரு பொழுதுபோக்கா? கோவிலுக்கு வரும்போது ஒழுக்கம் தவறி நடந்து கொள்ளும் பக்தர்களின் பாவ, புண்ணியங்களை கடவுள் கவனித்துக் கொள்வார். அதை விடுத்து, அடுத்தவர்களின் அந்தரங்க விஷயங்களை சீண்டி பார்க்கும் இதுபோன்ற ஆசாமிகள் எப்போது திருந்துவர்?
— உமா சீனிவாசன், ஈஞ்சம்பாக்கம்.
ஏன் இந்த ஏமாற்று வேலை !
பத்து பைசா புழக்கத்திலேயே இல்லை. 50 பைசா மீதி கேட்டால் கிடைப் பதில்லை. மீறி கேட் டால், 50 பைசா இல்லையென ஒரு சாக் லெட்டை தருகின்றனர். இந்த நிலையில், 'பேட்டா' செருப்பு நிறுவனம் உட்பட, இன்று பல மால்களில் வெளி யிடப்படும் விலை விளம்பரங் களை பார்க்கும் போது சிரிப்பு தான் வருது.பத்து பைசாவே புழக்கத்தில் இல்லாதபோது, 90 பைசா என விலை போட்டு என்ன பயன்? இது தெரிந் தும், ஸ்டண்ட் விலை ஏன்? இதை அரசும் கண்டு கொள்வதில்லை. இதனால், பாதிக்கப் படுவது, 'மிடில் கிளாஸ்' தான். இதேபோல் 10 பொருட்களுக்கு 10 பைசா போனால் ஒரு ரூபாய் நஷ்டம்! பெரிய மனிதர்கள் வேண்டுமானால் இதை பொருட்படுத்தாமல் இருக்கலாம்; ஆனால், 'மிடில் கிளாஸ்' மக்களுக்கு இந்த நஷ்டம் தேவையா? வாங்குபவரை ஏமாற்றும் இந்த 90 பைசா விலைக்கு முடிவு எப்போது?
— பட்டு, பெங்களூரு.
அதிர வைத்த ஆபாச சி.டி.
தினசரி நான் அலுவலகம் செல்ல பயணிக் கும் ஒரு தனியார் பேருந்தில், கல்லூரி மாணவ, மாணவியரும் வருவர். பேருந்தில் உள்ள, 'டிவி'யில் போடுவதற்கு ஒவ்வொரு நாளும் புதுப்புது படங்கள் மற்றும் பாடல்களின், 'சிடி'யை மாணவர்களே எடுத்து வந்து, நடத்துனரிடம் கொடுத்து, போடச் சொல்லி ரசித்து கேட்டபடி வருவர். சமீபத்தில், ஒரு நாள் மாணவர்கள் கொடுத்த, 'சிடி'யை நடத்துனர் வாங்கிப் போட, பேருந்தே அதிர்ச்சிக்குள்ளாகி, களேபரத்தில் குலுங்கியது! காரணம், திரையில் ஓடியது ஆபாசப் படம்! உடனடியாக, 'டிவி'யை நிறுத்திய நடத்துனர் பேய் முழி முழிக்க, பயணிகள் கோபத்தில் கொந்தளித்து, நடத்துனரை வறுத்தெடுக்க, 'சிடி'யைக் கொடுத்த மாணவனையும் சிலர் வசைபாட, அந்த மாணவனோ, 'நான் வேண்டுமென்றே செய்யவில்லை... எப்படியோ, எங்கேயோ தவறு நடந்து விட்டது!' என மன்னிப்புக் கேட்டான். பரபரப்பு அடங்கிப் போனாலும், பேருந்தில் இருந்த பெண்கள், மாணவியர் என, அனை வரும் தர்மசங்கடத்தில் தலை குனிந்து கொள்ள வேண்டியதாகி விட்டது. பேருந்து போன்ற பொது இடங் களில், 'டிவி'யில், 'சிடி'க்களை போடும்போது, சோதித்துப் பார்க்கா மல் இப்படி யாரேனும் கொடுப்பதை வாங்கி ஓடவிடுவது எத்தகைய விபரீதங் களுக்கு வழிவகுக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எச்சரிக்கை!
— எஸ்.ராஜேந்திரன், கபிஸ்தலம்.
