தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 12, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 12, 2014


Follow on Google
அ நிறம் | அளவு

சண்டைக்கோழி பெற்றோரா நீங்கள்?

மாலை நேரத்தில், நண்பர்கள் சிலருடன் நடைபயிற்சி சென்றிருந்தேன். நடைபயிற்சிக்கு பின், பள்ளி விளையாட்டு மைதானத்தின் ஓரிடத்தில் அமர்ந்தோம். சற்று தள்ளி, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், எங்கள் அருகில் வந்து அமர்ந்தனர். அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு அதிர்ந்து போனோம்.

ஒருவன், 'வீட்டுக்கு போகவே புடிக்கலடா; எங்கம்மாவும், அப்பாவும் எப்பப் பாரு சண்ட போடுறாங்க. எங்கப்பா ஒரு லூசுப்பயன்னா, எங்கம்மா ஒரு கிறுக்குடா. இவங்க போடுற சண்டையில படிக்கவே முடியல. ஆனா, 'படிடா... படிடா'ங்கறான் அந்த பரதேசி; ஆனா, படிக்க விடறதில்ல. இதுகளையெல்லாம் முதியோர் இல்லத்துல கொண்டு போய் விட்டுடணும்டா...' என்றான்.

அவனைத் தொடர்ந்து மற்றவர்களும், தம் பெற்றோரை சகட்டு மேனிக்கு மண் வாரி தூற்றினர். ஒருவன் கூட தன் பெற்றோரை, மரியாதையாய் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களது பெற்றோர்களின், 'வருங்காலம்' எப்படி இருக்கும் என்பது இப்போதே தெரிந்தது. பெற்றவர்கள் சரி வர நடந்து கொள்ளாததால், பிள்ளைகள் சிறுவயது முதலே, அவர்கள் மீது வெறுப்பை மனதில் பதித்து, பின்னாளில் அது பழிவாங்கும் எண்ணமாக மாறி, முதியோர் இல்லங்களுக்கு அனுப்பப்படுகின்றனர் என்பதும் புரிந்தது. இதை, சண்டைக்கோழி பெற்றோர்கள் உணர்ந்து திருந்துவரா?

— டி.ஆறுமுகம், விஜயமங்கலம்.

வாழ்க்கையை மாற்றிய மருத்துவம்!

ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் நான். பல ஆண்டுகளாக தோள் பட்டை வலியால் அவதிப்பட்ட நான், எவ்வளவோ சிகிச்சை எடுத்துக் கொண்ட போதும், பணச் செலவு தான் மிச்சம்; குணமாகவில்லை.

'ஊசி, மருந்துகளை விட்டு, மாற்று மருத்துவத்திற்கு முயற்சிக்கலாம்...' என நினைத்தேன். அச்சமயத்தில், பக்கத்து வீட்டுக்காரர், ஒரு மருத்துவரை குறிப்பிட்டு, 'அக்கு பிரஷர் மற்றும் பங்சர் பார்க்கிறார்; பீசும் குறைவு...' என்றார். அவர் குறிப்பிட்ட கிளினிக்கிற்கு போனேன்.

அங்கு இருந்த மருத்துவரை பார்த்ததும், ஆச்சரியத்தில் திக்குமுக்காடிப் போனேன். காரணம், அந்த டாக்டர், என்னோடு பணிபுரிந்து, எனக்கு முன் ஓய்வு பெற்ற நண்பர். அவரிடம் இது குறித்து கேட்டபோது, 'ரிடையர் ஆனதும் வருமானம் குறைஞ்சு போகுது; ஆனா, செலவுகள் குறையறதுல்ல. அதை ஈடு கட்டவும், ஓய்வு காலத்தை நல்லபடியாக கழிக்கவும் என்ன செய்யலாம்ன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன். அப்ப எனக்கு இருந்த சில உடல் உபாதைக்கு, ஒரு அக்குபிரஷர் வைத்தியரிடம் சிகிச்சைக்கு போனேன். அந்த வைத்தியத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, மருத்துவரிடம், 'இதை கற்று தர முடியுமா?' என, கேட்டேன். அதற்கான படிப்பில் சேர்த்துவிட்டதோடு, தன் மருத்துவமனையில் பயிற்சி பெறவும் அனுமதித்தார். தேர்ச்சி பெற்றதும் தனியாக வந்து, கிளினிக் போட்டுட்டேன். ஓரளவு வருமானமும் வர, செய்வதற்கு ஒரு தொழில் இருக்கிற தெம்புடன் மகிழ்ச்சியாக இருக்றேன்...' என்றார்.

இவரைப் போல் முன் யோசனையில்லாமல், மகனின் தயவில் வாழ்ந்து முடங்கிக் கிடக்கிறோமே என்ற ஆதங்கம் ஏற்பட்டது.

— ச.பஞ்சாட்சரம், சென்னை.

நவராத்திரி- நான் அறிந்த பாடம்!

நவராத்திரி கொலுவிற்காக, என் தோழியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். கொலு பார்த்து விட்டு வீட்டுக்கு கிளம்பும் போது, ஒரு காகிதப் பையில் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பழம் அவற்றுடன், 100 ரூபாய் வைத்து கொடுத்தாள். 'எதற்கு பணம்?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'நவராத்திரியின் போது வெற்றிலை, பாக்குடன் ஜாக்கெட் பிட் வைத்து கொடுப்பது நம்முடைய சம்பிரதாயம். இப்போது நல்ல பிளவுஸ் துணி வாங்க வேண்டுமானால், குறைந்தது, 100 ரூபாயாவது வேணும். பிளவுஸ் துணி வச்சுக் கொடுக்கலாம்ன்னா, நாம கொடுக்கற கலரு அவங்களுக்கு பிடிக்கணும்.

'சில சமயம் நாம தர்ற துணி அவர்களுக்கு அளவு குறைவாகவோ, பிடிக்காத கலராகவோ இருக்கலாம். அதனால அது, திரும்ப நம்ம கிட்டயே வரும். இது என்னோட அனுபவம். அதனால தான் ஜாக்கெட் துணிக்கு பதிலாக பணமாக கொடுத்து விட்டால், பிடித்த கலரில், பிடித்தளவு துணி வாங்கிக்கலாம். அதே மாதிரி சின்ன பசங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பேனா, பென்சிலை வச்சு தர்றேன். பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் பை சுற்று சூழலுக்கு எதிரி; அதேபோல் தேங்காயும் உபயோகப்படுத்தறதில்ல...' என்றார்.

அவர் சொன்னது, எனக்கும், 'சரி' எனப் பட்டது. கொலு வைக்கும் வாசகிகளே...இந்த ஆண்டு இல்லாவிட்டாலும், அடுத்த ஆண்டாவது இதை கடைபிடியுங்கள்!

— லலிதா பாலசுப்ரமணியம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us