தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : அக் 19, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 19, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உழைப்பில் கவுரவம் பார்க்காதீர்!

நான் பணிபுரியும் நூலகத்துக்கு, பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் ஒருவன், தினமும் வருவான். ஒருநாள், கட்டுமானப் பணி நடைபெறும் ஒரு கட்டடத்தின் அருகே, கடும் வெயிலில், அழுக்கு பனியன் அணிந்து, வியர்வை சொட்ட சொட்ட சுத்தியலால் கம்பியை அடித்து, உடைத்துக் கொண்டிருந்தான்.

மாலை, நூலகம் வந்த அவனிடம், 'கம்பி அடிக்கும் வேலை செய்துட்டு இருந்தியே... இன்று கல்லூரிக்கு போகலயா...' என்று கேட்டேன். அதற்கு அவன், 'பாலிடெக்னிக்கில் போதுமான ஆசிரியர்கள் இல்ல; ஒருநாள் விட்டு ஒருநாள் தான் வகுப்பு நடத்துறாங்க. அதனால தான் வகுப்பு இல்லாத நாட்கள்ல இப்படி கட்டட வேலைக்கு போறேன். பணத்துக்கு பணம் கிடைப்பதுடன், பொழுது போன மாதிரியும் ஆச்சு; ஒரு வேலையை கத்துக்கிட்ட திருப்தியும் கிடைக்குது...' எனக் கூறி, ஆச்சரியப்பட வைத்தான்.

'கவுரவமான வேலை கிடைத்தால் மட்டுமே வேலைக்கு செல்வேன்; இல்லை என்றால் வேலைக்கே போக மாட்டேன்...' என்று சொல்பவர்கள் மத்தியில், படிக்கும் மாணவன் ஒருவனின் உழைப்பு குறித்த சிந்தனையும், உழைப்பில் கவுரவம் பார்க்காத அவனது குணத்தையும் நினைத்து பெருமிதம் அடைந்தேன்.

— எம்.இளங்கோ, திருவள்ளூர்.

உ.பா., வேண்டாமே!

அரசு அலுவலரான என் நண்பன் புதிதாக கட்டியிருந்த வீட்டின் கிரகப்பிரவேச விழாவுக்கு சென்றிருந்தேன். பக்கத்து வீட்டில், 'உ.பா., பார்ட்டி'க்கு ஏற்பாடு செய்திருந்தான். வெளிநாட்டு சரக்குகள் தாராளமாக வழங்கப்பட்டது. வெள்ளமாய் ஓடிய தண்ணியால், அதீத உற்சாகத்தில் இருந்த நண்பர்களிடையே சின்ன தகராறு வர, அது பெரிய சண்டையாக உருவெடுத்து விட்டது. 'உற்சாகத்தில்' மிதந்த நண்பர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து அடித்துக் கொள்ள, ஏக ரகளையாகி விட்டது. கிரகப்பிரவேசம் நடத்திய நண்பரின் உறவினர்கள் முகம் சுளித்ததோடு, 'இவரது நட்பு வட்டமே இப்படிதானா...' என பேச, நண்பருக்கு பெருத்த அவமானமாகி விட்டது.

உறவினர்களிடையே தலைகுனிய நேர்ந்ததோடு, சண்டையிடும் நண்பர்களில் யாருக்கு பரிந்து பேசுவது என, தவித்தது போனான் நண்பன்.கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற விழாக்களை நடத்துவோரே... இது போன்ற விழா சமயங்களில், 'உ.பா., பார்ட்டி' வைக்க வேண்டுமா என யோசியுங்கள். அப்படியே பார்ட்டி கொடுக்க தான் வேண்டும் என்றால், விழா நாளில்லாமல் வேறு ஒரு நாளில் கொடுங்கள்; மானம், மரியாதையாவது மிஞ்சும்.

— வி.சந்திரசேகர், சென்னை.

ஓட்டல் பில்லில் கவனம் தேவை!

நான் ஒரு பொறியியல் கல்லூரி மாணவி. எங்கள் வகுப்பு தோழி ஒருத்திக்கு, பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. இதை கொண்டாட, மதுரையில் உள்ள பிரபல சைவ உணவகத்துக்கு, அனைவரும் சென்றோம். மொத்தம், 18 பேர்; அவரவருக்கு பிடித்ததை ஆர்டர் செய்து சாப்பிடலாம் என, தோழி கூறிவிட்டாள். அதனால், எங்களுக்கு பிடித்ததை ஆர்டர் கொடுத்தோம். நான், என் தோழியிடம், ஆர்டர் செய்வதை குறித்துக் கொள்ளும்படி சொன்னேன். உடனே, என் தோழிகள் என்னை கேலியாக பார்த்து, 'பெரிய கடை, நாம் கொடுக்கும் ஒவ்வொரு ஆர்டரும், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அதன் பின்னரே சமையலறைக்கு செல்லும். எனவே, தேவையில்லாமல் சந்தேகப்படாதே...' என்றனர். ஆனால், நான் பிடிவாதமாக குறிக்கச் சொன்னதால் என் தோழிகள், குறித்துக் கொண்டனர்.

சாப்பிட்டு முடித்ததும், 6,300 ரூபாய்க்கு பில் வந்தது. எங்கள் பட்டியலையும், பில்லையும் ஒப்பிட்டுப்பார்த்தபோது அதிர்ந்து போனோம். காரணம், பல பொருட்கள் கூடுதலாக போட்டிருந்தனர். 18 பேரில், நாலு பேர் ஐஸ்கிரீம் சாப்பிடவில்லை. ஆனால், 18 என இருந்தது. புலாவ் ஆறு பேர் சாப்பிட்டனர்; எட்டு பேர் என இருந்தது. மொத்தத்தில், நாங்கள் சாப்பிட்டதை விட, 800 ரூபாய் கூடுதலாக இருந்தது. நாங்கள் உடனே மேலாளரை அழைத்து கேட்டோம். அவர் சப்ளையரை அழைத்து கேட்டார். இப்படி ஒருவர் மீது ஒருவர் பழிபோட்டு, இறுதியில் அனைவரும் எங்களிடம் மன்னிப்புக் கேட்டனர். பில்லையும் குறைத்துக் கொண்டனர்.

கல்லூரி மாணவியர் தானே, எவ்வளவு சாப்பிட்டோம் என்று தெரியவா போகிறது என்ற எண்ணமா அல்லது உண்மையிலேயே தவறுதலாக பில்லை போட்டுவிட்டனரா என்று தெரியாது. ஆனால், பில்லில் ஏமாற்ற முயன்றது மட்டும் உறுதி.

எனவே, குழுவாக சாப்பிடச் செல்வோர், சாப்பிடும் பொருட்களை கணக்கு வைத்துக்கொள்வது நல்லது.

— ச.ஸ்வேதிதா, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us