தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : நவ 02, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 02, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்யாண புரோக்கர்கள் சிந்திக்கலாமே!

என் நண்பரின் மகளுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் துவக்கமாக நானும், என் நண்பரும் ஒரு கல்யாண புரோக்கர் அலுவலகத்திற்கு சென்றோம். புரோக்கர் இல்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்டோம்.

அவசரம் என்றோம். அதற்கு அவர், 'நான் ரத்தப் பரிசோதனை நிலையத்தில் இருக்கிறேன். அங்கு வாருங்கள்...' என்றார். நானும், நண்பரும் அவர் இருக்கும் ரத்தப் பரிசோதனை நிலையத்திற்கு சென்றோம்.

இரண்டு இளைஞர்களுடன், அவர்களின் மருத்துவ பரிசோதனை ரிப்போர்ட் வாங்கியபடி வெளியே வந்தார் புரோக்கர்.

'இங்கு என்ன வேலை?' என்றோம்.

'டாஸ்மாக் பணியாளர், நடத்துனர், டிரைவர் மற்றும் கிளீனர் ஆகியோருக்கு பெண் கொடுக்க பலரும் தயங்குகின்றனர். காரணம், அவர்களின் உடல்நலன் மீது சந்தேகப்படுகின்றர்...' என்றார்.

மேலும், 'எயிட்ஸ் உள்ளிட்ட பல டெஸ்ட்டுகளுக்கான ரிப்போர்ட்டை நானே நேரில் சென்று வாங்கி, நகல் எடுத்து அவர்களின் ஜாதகத்துடன் இணைத்து, பெண் வீட்டாருக்கு கொடுக்கிறேன்...' என்றார். எங்களுக்கு வியப்பாக இருந்தது.

இதை அனைவருக்கும் கட்டாயமாக்கினால் நன்றாக இருக்குமே என நினைத்தோம். கமிஷனுக்காக புரோக்கர்கள் பொய் சொல்லாமல், மிகையாக சொல்லாமல் உண்மையை சொல்ல வேண்டும் என்பதை அவரின் பேச்சு எங்களுக்கு உணர்த்தியது.

கல்யாண புரோக்கர்களே... இந்த மருத்துவ பரிசோதனை விஷயத்திலும் உங்கள் பார்வை திரும்பினால் வாழ்வு சிறக்குமே வருங்கால புது ஜோடிகளுக்கு!

— சோ.ராமு, செம்பட்டி.

பெற்றோருக்கு ஒரு பாடம்!

சமீபத்தில், என் குழந்தைகள் படிக்கும் பள்ளியில், பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடப்பதாகவும், அவசியம் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டிருந்தோம். கூட்டம் துவங்கியதும், வழக்கமான நிகழ்வுகளுக்கு பின், பெற்றோருக்கு ஒரு போட்டி என அறிவிப்பு செய்தனர்.

போட்டி என்னவென்றால், குழந்தைகள் படிக்கும் பாடங்கள் ஒவ்வொன்றிலும் மூன்று தலைப்புகளை கூறுமாறு அறிவித்தனர். இக்கேள்விக்கு பதில் தெரியாமல் பெரும்பாலானோர் விழித்தோம். ஆசிரியர்களோ, 'டிவி சீரியல்களில் காட்டும் ஆர்வத்தை உங்கள் குழந்தைகளின் படிப்பு விஷயத்திலும் கொஞ்சம் காட்டுங்கள்; அப்போது தான் உங்கள் குழந்தைகளின், கல்வி தரத்தை உணர முடியும். என்ன தான் பள்ளியில் நாங்கள் பாடம் நடத்தினாலும், உங்களின் ஒத்துழைப்பும் அவசியம்...' என, அறிவுறுத்தினார்.

இச்சம்பவத்துக்கு பின் நாள்தோறும் குழந்தைகளின் கல்விக்காக, ஒரு மணிநேரம் ஒதுக்கி, பாடம் நடத்துகிறோம்; மேலும், அன்றாட பள்ளி நிகழ்வுகளையும் கேட்டு அறிகிறோம்.

— ஜி.கோகுலகிருஷ்ணன், திருவாரூர்.

இப்படியும் ஒரு திருமணம்!

நாம் திருமணத்திற்கு சென்றால் என்ன செய்வோம்... மொய் எழுதுவோம், உணவருந்துவோம், தேங்காய் பையைப் பெற்றுக் கொண்டு வந்து விடுவோம். நண்பர் ஒருவரது இல்லத் திருமணத்திற்கு சென்றிருந்தேன். விழாவில், திருக்குறள் புத்தகத்தை பரிசாக தந்தனர்.

பின், 20 நாட்கள் சென்ற பின், திருமணத்திற்கு சென்றிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த கடிதமும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையிலிருந்து, நாங்கள் பணஉதவி செய்ததற்கான கடிதமும் வந்தது. பின்னர்தான் தெரிந்தது, திருமணத்தில் மொய் எழுதிய அத்தனை பேரின் பெயராலும், அப்பணம் புற்று நோய் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று. நண்பரின், செயல், என்னை மெய் சிலிர்க்க வைத்தது. தான் மட்டும் புண்ணியத்தில் பங்கு கொள்ளாமல், எங்களையும் அதில், பங்கு பெறச் செய்த செயலை நினைத்து பெருமைப்பட்டோம். நாமும், இதுபோல் செய்யலாமே!

— கே.சுரேஷ், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us