sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 03, 2015

Google News

PUBLISHED ON : மே 03, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெரியாதவர்களிடம் கை குலுக்காதீர்!

சமீபத்தில், தி.நகர் ரங்கநாதன் தெருவில், கூட்டத்தில் நடந்து வந்து கொண்டிருந்தேன். திடீரென ஒரு நபர், என்னிடம் வந்து, 'சார்... நல்லாயிருக்கீங்களா... உங்கள பாத்து எவ்வளவு நாளாச்சு... என்னை மறந்திட்டீங்களா...' என்று கேட்டவாறு, என் கையை பிடித்து குலுக்கினார். அவர் யாரென்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அவர் கை குலுக்கும் போது, என் மோதிரத்தை கழட்ட முயற்சிப்பதை பார்த்தேன். உடனே, சுதாரித்து, கையை விருட்டென்று இழுத்துக் கொண்டேன். அதற்குள், திருட வந்த நபர், மின்னலென கூட்டத்தில் மறைந்து விட்டான்.

கொஞ்சம் ஏமாந்திருந்தால், என் மோதிரம் பறி போயிருக்கும். அக்கூட்டத்தில் திருடனை எங்கு போய் தேடுவது?

இப்போதெல்லாம் தெரியாதவரிடம் கை குலுக்கவே யோசனையாய் இருக்கிறது. நீங்களும் மோதிரம் அணிந்தவர் என்றால், முன்பின் தெரியாதவர்களிடம் கை குலுக்காதீர்கள்; எச்சரிக்கையாய் இருங்கள்!

— ராம. முத்துக்குமரன், கடலூர் துறைமுகம்.

மனதில் நின்றவர்!

சமீபத்தில், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில், 30 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஆசிரிய நண்பரின் ஓய்வு தின விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன். அந்த ஊரில் மதிப்புமிக்க ஆசிரியராக வலம் வந்தவர் அவர்.

இவரிடம் படித்த நிறையப் பேர், இன்று நல்ல நிலையில் உள்ளனர். அவர்கள் அனைவரும் விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களிடம், 'யாரும் அன்பளிப்புப் பொருட்கள் வழங்க வேண்டாம்; அப்படிக் கொடுக்க நினைப்பவர்கள், பணமாக கொடுக்கவும்...' என, முன்பே அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியப்பட வைத்ததுடன், 'ஓய்வு பெறும் நாளில் இவருக்கு, பணத்தின் மீது இவ்வளவு பற்று வந்து விட்டதே...' என, பலவாறு பேசினர்.

விழாவின் போது இவருக்கு வழங்கப்பட்ட பணம், சில லட்சங்களைத் தொட்டது. அந்தப் பணத்தை என்ன செய்யப் போகிறார் என்பதை அறிய, பலரும் ஆவலுடன் இருந்தனர்.

அப்போது, விபத்து மற்றும் குடியால் தகப்பனை இழந்த மாணவ, மாணவியரின் தாயார்கள் நான்கு பேரை மேடைக்கு அழைத்து, அன்பளிப்பாக வந்த பணத்தில் பாதியைக் கொடுத்தார். மீதமுள்ள பணத்தை முன்னாள் மாணவர்கள் நிதியில் சேர்த்து, வங்கியில், 'டெபாசிட்' செய்து, அதிலிருந்து வரும் வட்டிப் பணத்தில், இதுபோன்று பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குடும்பத் தலைவியிடம் எதிர்காலங்களில் வழங்கும்படி கூறினார்.

மேலும், 'இந்தப் புண்ணியம், இன்று என்னிடம் பணம் கொடுத்தவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கட்டும்...' என்று பேசியதும், எங்கள் மனங்களில் ஒரு படி உயர்ந்து நின்றார் ஆசிரிய நண்பர்!

— வி.எஸ்.ராமு, திண்டுக்கல்.

அடையாள அட்டை!

சமீபத்தில் வங்கிக்குச் சென்றிருந்த போது, அங்கு, 75 வயது பெரியவர் ஒருவரைப் பார்த்தேன். அவரது கழுத்தில் வித்தியாசமாக ஒரு அடையாள அட்டை தொங்கியது. 'இந்த வயசுல என்ன வேலை பார்ப்பார்...' என நினைத்து, அது குறித்து விசாரித்தேன்.

'எனக்கோ வயசாகிடுச்சு; எல்லா நோய்களும் அதற்கு தேவையான இடத்தை பிடித்து உட்கார்ந்துருச்சு. எங்கு, எப்போ உயிர் பிரியும்ன்னு சொல்ல முடியாது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தா, என்னைப் பற்றிய தகவலைக் கொடுக்கவும், முதலுதவி அளிப்பதற்கு வசதியாகவும், இந்த அட்டையில விலாசம் முதல், என்னைப் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் பதிஞ்சு வச்சுருக்கேன்...' என்று கூறி, அவரது பிளட் குரூப், மொபைல் நம்பர், சிகிச்சை பெறும் டாக்டரின் தொலைபேசி எண் மற்றும் வீட்டு முகவரி உட்பட, அனைத்து விவரங்களும் இருந்ததை காண்பித்தார். வயதானவர்கள், முக்கியமாக வயதான நோயாளிகள் இதை பின்பற்றலாமே!

ஷோபனா தாசன், நாட்டரசன்கோட்டை.






      Dinamalar
      Follow us