
வருங்கால மாமியார்களே... கொஞ்சம் கவனியுங்க!
எனக்கு தெரிந்த பெண் ஒருவர், தன் குடிகார கணவரிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். இதனால், அவருடைய ஒரே மகனை சரியான முறையில் வளர்க்க தவறி விட்டார். விளைவு, 18 வயதிலேயே அவனும் மொடா குடிகாரன் ஆகிவிட்டான்.
சண்டையில், மாமியார், தன் புருஷனை கவனித்து வளர்க்காததால் தான், கணவர் குடிகாரர் ஆகி விட்டார் என்று குற்றம் சாட்டுவார் அப்பெண்மணி. ஆனால், தானும் ஒரு வருங்கால மாமியார், தனக்கும், தன்னைப் போல் ஒரு மருமகள் வருவாள், அதனால், புருஷனை போல் அல்லாமல், தன் மகனை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதை, அவர் நினைத்துப் பார்க்கவில்லை.
திருத்த முடியாத கணவனை திருத்த, நேரத்தை வீணாக்குவதை விட, தன் பிள்ளைக்கு நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுத்து, அவர்களை நல்ல முறையில் வளர்ப்பதில் கவனம் எடுத்துக் கொண்டால், வருங்கால சந்ததியாவது நன்றாக இருக்குமே!
— எம்.மல்லிகா, ராமநாதபுரம்.
தண்ணீர் பாட்டிலில் திருக்குறள்!
ஒருவர் வாழ்வில் சிறந்து விளங்க, திருக்குறள் படித்தாலே போதும்; அத்தனை நல்ல விஷயங்கள் அதில் குவிந்துள்ளன. இதை உணர்ந்ததால் தான், நம் அண்டை நாடு ஒன்று, தண்ணீர் பாட்டிலில் திருக்குறளை அச்சிட்டு விற்பனை செய்கிறது. அந்நாட்டில் தமிழர்கள் அதிகம் வசிப்பதால், தமிழிலேயே திருக்குறளை அச்சிடுகின்றனர்.
நம் மாநிலத்திலும், திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக, அரசு விற்பனை செய்யும் தண்ணீர் பாட்டில், பால் கவர் மற்றும் அரசு தயாரிப்பு பொருட்கள் போன்றவற்றில் திருக்குறளை அச்சிடலாம். அரசு தான் செய்ய வேண்டும் என்பதில்லை; தனியார் நிறுவனங்களும் செய்யலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை நடைமுறைப்படுத்த முன்வருவரா!
— ஜெ.கண்ணன், சென்னை.
தேவை பணமா, மணமா?
இளம் வயதிலேயே கணவனை இழந்த என் தோழி, கணவனது வீட்டில் ஆதரவு இல்லாததால், பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறாள். அவளை, 'டிவி' பார்க்கக் கூடாது, பேப்பர் படிக்கக் கூடாது என்பதுடன், வீட்டில் விதவை பெண் இருந்தால், தங்கைக்கு எப்படி கல்யாணமாகும் என்ற சென்டிமென்ட் வேறு!
வாழ வேண்டிய வயதில், விதவையான மகளை மறுமணம் செய்து கொடுக்க விரும்பாமல், இறந்து போன கணவனின் வீட்டிலிருந்து சொத்தை வாங்க போராடி வருகின்றனர் அவளது பெற்றோர். இளவயதில் கணவனை இழந்த பெண்ணின் மனவுணர்வை, புகுந்த வீட்டாரும், பிறந்த வீட்டாரும் கொஞ்சமும் எண்ணிப் பார்க்கவில்லை. இவர்களை எப்படி திருத்துவதோ!
— எஸ்.ராஜகுமாரி, விருதுநகர்.
எல்லாம் பெட்ரூமிலேயே...
சென்னையில், ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் உறவுப் பெண்ணின் பேத்தி, சமீபத்தில் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். எங்கள் காலத்தில், இரவில் தூங்குவதற்கு மட்டும் தான் படுக்கையறையை பயன்படுத்துவோம்; பகல் வேளையில் படுக்க மாட்டோம்.
ஆனால், இவளோ, எப்போது பார்த்தாலும், பெட்ரூமிலேயே உட்கார்ந்து, மெத்தையில், 'லேப் - டாப்'பை வைத்து, அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நானும், சின்னப் பெண் தானே என்று ஒன்றும் சொல்லவில்லை. அன்று, சமையலறையில், மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று, துணி தீயும் வாசனை வரவே, ஒவ்வொரு அறையாகச் சென்று ஸ்விட்சு போர்டை பார்த்தேன்.
கடைசியில், இந்த பெண் இருக்கும் அறையில் மெத்தையில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது. அவள் குளித்துக் கொண்டிருந்தாள். 'லேப்-டாப்'பை மெத்தையின் மீது வைத்து, அதை சார்ஜ்ஜில் போட்டு விட்டு, குளிக்கப் போய் விட, சூடு தாங்காமல் மெத்தையின் மீது விரித்துள்ள துணி கருக ஆரம்பித்திருக்கிறது. நல்ல வேளை, நான் ஆரம்பத்திலேயே பார்த்ததால், விபத்து தடுக்கப்பட்டு விட்டது.
இவ்விஷயத்தை அவளிடம் கூறிய போது, 'விடுதியில நாங்க இப்படித் தான் செய்வோம்...' என்று, விபரீதம் புரியாமல், சாதரணமாக பேசுகிறாள். இவர்கள் போன்றவர்களை என்ன சொல்லி திருத்துவதோ!
— ஆர்.பிருந்தா ரமணி, மதுரை.

