
பெண்கள் நிர்வாகத்தில் இருந்தால்...
எங்கள் வீட்டிற்கு அருகில், புதிய வீடு ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டடம் கட்டும் மேஸ்திரி, தினமும், இருசக்கர வாகனத்தில், தன் மனைவியுடன் வருவார். சில சமயங்களில், சித்தாள்களோடு சேர்ந்து, வேலை செய்வார் அவர் மனைவி.
ஒருநாள் மேஸ்திரியிடம், 'எதுக்குண்ணே தினமும் உங்க மனைவியையும் அழைச்சுட்டு வர்றீங்க...' என்று கேட்டேன். அதற்கு அவர், 'நான், எங்க வேலை செய்தாலும், என் மனைவியையும் அங்க கூட்டிட்டு போவேன். இதனால, வேலை சரியா நடக்குதான்னு கண்காணிப்பதுடன், வேலையாட்களுக்கும் ஒத்தாசையா இருக்கிறாள். சிமென்ட், செங்கல் மற்றும் கம்பி கணக்கு வழக்குகளை எல்லாம் சரி பாத்துக்கிறா.
'அது மட்டுமில்லீங்க... என் மனைவி, என் கூட வந்து கண்காணிக்கிறதால, வேலையாட்கள் வேலை நேரத்துல வீண் அரட்டை அடிக்கிறதில்ல; எல்லாத்துக்கும் மேல, பாலியல் குற்றங்கள் நடக்க வாய்ப்பு ஏற்படுவதில்ல. மேலும், வீட்டுக்காரங்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்து, அவங்களுக்கு தெரிந்தவர்களிடம் எங்களைப்பற்றி நல்லவிதமாக சொல்வதால், எங்களுக்கு நிறைய வேலை வாய்ப்பும் கிடைக்கின்றன...' என்றார்.
பெண் நிர்வாகம் செய்யும் இடங்களில் கட்டுப்பாடும், கவுரவமும் தானே வந்து விடுகிறது என்பதை, அந்த மேஸ்திரி மூலமாக நன்கு உணர்ந்தேன்.
— எஸ்.பூவேந்தரசு, கம்பைநல்லூர்.
வளைகாப்பு செய்வது ஏன்?
கர்ப்பிணியான என் தோழிக்கு, வளைகாப்பு சடங்கு செய்ய விரும்பினர் அவளது பிறந்த வீட்டினர். ஆனால், அவளது மாமியார் வீட்டினர், 'வளைகாப்பு செய்யும் பழக்கம் எங்களுக்கு இல்லை...' என்று கூறி மறுத்தனர். அதற்கு தோழியின் பாட்டி, 'வளைகாப்புங்கிறது வெறும் சடங்கு இல்ல; அது, அவசியமானது. ஏன்னா, கர்ப்பிணி பெண்களுக்கு கை, கால்களில் நீர் சுரந்து, வீக்கம் ஏற்படும். இதைத் தவிர்க்கத் தான், வளைகாப்பின் போது, கை நிறைய கண்ணாடி வளையல்களை போடுறோம். அந்த வளையல்கள், கை நரம்புகளில் உரசிக்கிட்டே இருக்கிறதால, ரத்த ஓட்டம் சீராகி, கை, கால்களில் ஏற்படும் வீக்கம் மட்டுப்படும்.
'அதோட, வளையல்கள் உரசும் போது ஏற்படும் சத்தத்தோட அதிர்வால், வயிற்றில் இருக்கும் குழந்தை, அசைந்து புரளும். இப்படி அடிக்கடி புரள்வதால, அதிக கஷ்டமில்லாமல் சுகப்பிரசவம் ஏற்படும். அதனால் தான், கர்ப்பிணி பெண்களுக்கு, வளைகாப்பு சடங்கை செய்றோம்...' என்று விளக்கமாக கூறினார்.
உண்மையை உணர்ந்த, தோழியின் மாமியார் வீட்டினர், வளைகாப்பு விழாவை விமரிசையாக நடத்தினர். நம் முன்னோர் செய்யும் எல்லா காரியமும், ஏதாவது காரணத்தோடு தான் இருக்குமென்று உணர்ந்து கொண்டேன்.
— எஸ்.விஜயலட்சுமி, கோச்சடை.
மருந்து வாங்கி தரலாமே!
சமீபத்தில், என் கணவர் நினைவு நாளன்று ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, ஒருநாள் உணவு வழங்க, பணம் கட்டினேன். அப்படியே, அங்கு பணியாற்றும் என் பள்ளித் தோழியை சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது, அவள், 'நிறைய பேர் உணவுப் பொருட்கள் கொடுக்குறாங்க; மருந்துப் பொருள் தான் கிடைக்கிறதில்ல. நீ கொடுக்குற உணவுக்கான தொகைக்கு, மருந்து பொருள் வாங்கி கொடுக்கலாமே...' என்றாள்.
இந்த யோசனையை நிர்வாகியிடம் சொல்ல, அவரும், நல்ல யோசனை என்று கூறி, இல்லத்திற்கு தேவையான மருந்து பட்டியலை தந்தார்; என்னால் முடிந்த அளவு மருந்துகளை வாங்கி தந்தேன்.
பொதுவாக, இதுபோன்ற இல்லங்களுக்கு உதவ நினைப்பவர்கள், அங்கு என்ன தேவை என்பதை அறிந்து உதவலாமே!
— எஸ்.சந்திரா, பூவிருந்தவல்லி.