
ஒரு பெண் தனியே நின்றால்...
அலுவலகம் முடிந்து வரும் தங்கையை அழைத்து வர, பஸ் நிலையம் சென்ற போது, பரபரப்பான அந்த சாலையின் நடுவே, 'ஏண்டா... பொம்பளைங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா... பொறுக்கி நாயே...' என திட்டியபடி, ஒருவனை, செருப்பால் விளாசினார் இளம் பெண் ஒருவர்.
'என்ன விஷயம்?' என்று அவரிடம் விசாரித்தோம். 'உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பாக்குறேன். ஸ்பெஷஸ் கிளாஸ் முடிச்சுட்டு வர, லேட்டாகிடுச்சு. அதனால, பஸ் ஸ்டாப்பில தனியாக நின்றிருந்தேன். இருட்டில் தனியாக நிற்கிறத பார்த்ததும், அருகில் யாரும் இல்லாத தைரியத்தில், 'வர்றியா'ன்னு கேட்டான்.
'அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால, இவனுக்கு பாடம் புகட்டணும் என்பதற்காக, 'வர்றேன்'ன்னு சொல்லி இங்க அழைச்சுட்டு வந்தேன்...' என்றார்.
உடனே, எல்லாரும் சேர்ந்து, தர்ம அடி கொடுத்து, புத்தி சொல்லி அனுப்பினோம். அப்பெண்ணின் தைரியத்தை பாராட்டி, பின், பத்திரமாக பஸ் ஏற்றி விட்டோம். பெண்களே... ஆபத்து நேரத்தில் பயப்படுவதை தவிர்த்து, சமயோசிதமாக செயல்பட ஆரம்பித்தால், ரவுடிகள் உங்களிடம் வாலாட்ட மாட்டார்கள்!
— பி.மகேந்திரன், திருப்பூர்.
குடும்ப ஒற்றுமை நீடிக்க...
தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என்னுடன் பிறந்த சகோதர சகோதரிகள் ஆறு பேர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஆனால், சிறு வயதில் எங்களுக்குள் இருந்த ஒற்றுமை, இப்போது இல்லை. ஏதாவது விசேஷ நாட்களில் சந்தித்தால் மட்டும் நலம் விசாரித்துக் கொள்வோம்; மற்றபடி எந்த ஒரு தொடர்பும் எங்களுக்குள் இல்லை. இந்நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் உறவுமுறை குறித்து பிள்ளைகளுக்கு தெரியாமலே போய்விடும் என்பதால், குடும்ப உறுப்பினர் அனைவரின் மொபைல் நம்பரை வாங்கி, 'வாட்ஸ்ஆப்'பில், எங்க அம்மாவின் பெயரில் ஒரு குரூப் துவங்கினேன்.
இப்போது, குடும்ப உறுப்பினர் அனைவரும் தங்களுடைய கருத்துகளுடன், புகைப்படங்கள் மற்றும் அன்றாட குடும்ப நிகழ்வுகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்; இதனால், நாங்கள் அனைவருக்கும் ஒரு கூட்டு குடும்ப உணர்வை உணர்கிறோம்.
— ரா.ஸ்ரீதர், திருப்பூர்.
ஒரு தாயின் எச்சரிக்கை!
என் இரண்டு வயது குழந்தையுடன், பேருத்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தேன். எனக்கு பின் சீட்டிலிருந்த இளைஞன் ஒருவன், குழந்தைக்கு வேடிக்கை காட்டுவதும், அதனுடன் விளையாடுவதுமாக இருந்தான்.
குழந்தை அவனுடன் சிறிது பழகியதும், 'பாப்புக்குட்டி... வா வா...' என குழந்தையை அழைக்க, குழந்தை அவனிடம் தாவியது. குழந்தையை என்னிடமிருந்து வாங்குவதும், திருப்பிக் கொடுப்பதும், விளையாட்டு காட்டுவதுமாக இருந்த அவன், குழந்தையை வாங்கும் போதும், கொடுக்கும் போதும், மெல்ல கையால் என்னை உரசுவதும், தடவுவதுமாக சில்மிஷம் செய்ய ஆரம்பித்தான். அவனை முறைத்த நான், அதன்பின், குழந்தையை என்னிடமே வைத்துக் கொண்டேன்.
குழந்தையுடன் பயணம் செய்யும் தாய்மார்களே... உங்கள் குழந்தைக்கு வேடிக்கை காட்டும் ஆண் நரிகளின் இறுதி நோக்கம், உங்கள் உடலாக தான் இருக்கும். எனவே, வேடிக்கை காட்டும் கோமாளிகளிடம் கவனமாக இருங்கள்!
— ஜெயலஷ்மி நந்தக்குமார், தேனி.