sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்

/

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்

இது உங்கள் இடம்


PUBLISHED ON : டிச 20, 2015

Google News

PUBLISHED ON : டிச 20, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராசி இல்லையென பெண்ணை திட்டலாமா?

என் நண்பரின் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்தனர். ஏழெட்டு வரன்கள் வந்தன; அத்தனையும் நல்ல இடம். வரதட்சணை, சீர்வரிசை பிரச்னையால், அனைத்தும் தட்டிப் போனது. தகுதிக்கேற்ற வரனை பார்க்காமல், பெரிய இடமாக, பார்த்தது தான் காரணம்.

இச்சூழ்நிலையில், பெண்ணுக்கு ஜாதகம் பார்த்துள்ளனர். ஜோதிடர் தன் பங்குக்கு, '30 வயதுக்கு மேல தான், திருமணம் கூடி வரும்...' என்று கூறி விட்டார். ஏற்கனவே, வரன் தேடி சலித்துள்ள நண்பரின் குடும்பத்தார், இது தான் சாக்கு என்று தற்போது, முயற்சியை கைவிட்டு, அப்பெண்ணை கரித்து கொட்டுகின்றனர்.

நண்பரோ, 'இந்த சனியன் எப்போ ஒழியறது; எனக்கு எப்போ திருமணம் ஆகிறது...' என புலம்புகிறார். அந்த பெண்ணின் நிலையோ பரிதாபமாக உள்ளது. பெற்றவர்கள், வரன் பார்க்கத் தெரியாமல் பார்த்துவிட்டு, 'ராசி இல்லாதவள், அதிர்ஷ்டம் கெட்டவள்...' என திட்டுவது எந்த விதத்தில் நியாயம்!

எப்போதுமே, 'விரலுக்கு தகுந்த வீக்கம் தேவை' என்ற பழமொழியை, பெண் வீட்டார் மறந்து விட கூடாது!

கே.விக்னேஷ், விருதுநகர்.

மொட்டை கடுதாசி எழுதுபவர்களே...

வேலைக்குப் போய், தன் வயதான பெற்றோர், விதவை அண்ணி மற்றும் அவரது குழந்தைகளை காப்பாற்றி வருகிறாள் என் தோழி. இதற்காகவே திருமணம் கூட செய்யவில்லை.

சமீபகாலமாக அவளுக்கு தினமும், 'ஐ லவ் யூ' என்றும், 'உன், டிரெஸ் சூப்பர்!' 'ஏன் என்னை ஏறெடுத்து பார்ப்பதில்லை...' என்றும் மொட்டை கடிதங்கள் வருகின்றன. எழுதியவன் யாரென்று தெரியாதபோது, இவள் யாரை ஏறெடுத்துப் பார்ப்பாள்.

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' என்பது போன்று, இப்போது, எந்த ஆணைப் பார்த்தாலும், அவளுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மேலும், வீட்டுக்கு வரும் கடிதங்கள், அவள் அப்பாவின் கையில் கிடைப்பதால், அவர் கடிதத்தை படித்து விட்டு, 'யாரவன்?' என்று கேட்டு மிரட்டுகிறார்.

காதலிப்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால், அது எதிராளியை பாதிக்காமல் இருக்க வேண்டாமா... செய்யாத தவறுக்கு தினம் தினம் தண்டனை பெறும் என் தோழியின் நிலைமை, இனிமேலும் தொடரக் கூடாது.

இதைக் கண்ட பிறகாவது, போக்கிரித்தனமாக மொட்டைக் கடிதங்கள் எழுதி, மற்றவர்களை இம்சிக்கும் கொடுமையை நிறுத்துங்கள்!

பா.பார்வதி, சிவகாசி.

இது சரியா, இளம் மங்கையரே!

சமீபத்தில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருந்து, கோடம்பாக்கம் நோக்கி, இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கனத்த மழையின் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, வாகனங்கள் நகராததால், பேருந்துக்காக காத்திருந்த பயணிகள், மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு நடந்து சென்றனர்.

அதில், இரு இளம்பெண்களும் நடந்து சென்றனர்; போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருந்த போதும், அத்தனை, 'ஜொள்ளர்'களும் அந்த பெண்களையே குறுகுறுவென பார்த்தனர். காரணம் அவர்கள் அணிந்திருந்த ஆடை!

கறுப்பு வண்ணத்தில், 'லெக்கின்ஸ்' எனப்படும் இன்றைய நவீன கால பேன்ட்டும், இடுப்பு வரை உள்ள, வெள்ளை நிற, டீ-சர்ட்டும் அணிந்திருந்தனர். மழையின் காரணமாக, அவர்களின் உடை, மேனியோடு ஒட்டியிருந்தது; இது, பெண்களையே முகம் சுளிக்க வைத்தது.

ஆடை சுதந்திரம், பெண் சுதந்திரம் எல்லாம் சரி தான்; மழை காலத்திற்கு தகுந்தாற்போல உடை அணிய வேண்டாமா, இளம் மங்கையரே!

சி.கலாதம்பி, பட்டுகோட்டை.

மரியாதையும் தலைகாக்கும்!

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் என் நண்பர், சமீபத்தில், பணி நேரம் முடியும் தறுவாயில், இறைச்சி பதப்படுத்தும், 'ப்ரீசர்' அறைக்குள், ஏதோ வேலையாக இருந்த போது, எதிர்பாராத விதமாய், அதன் தானியங்கி கதவு, பூட்டிக் கொண்டது.

பெரும் கூச்சலிட்டாலும், அவர் எழுப்பிய ஓசை, வெளியே யாருக்கும் கேட்கவில்லை; மேலும், பெரும்பாலானோர் வேலை முடிந்து, கிளம்பி விட்டனர். 'இன்னும் சிறிது நேரத்தில், 'ஐசில்' உறைந்து, இறக்கப் போகிறோம்...' என்று எண்ணி, கவலையில் இருந்த வேளையில், கதவு திறக்கும் சத்தம் கேட்டது; உயிர் வந்தவராய், வெளியே ஓடி வந்திருக்கிறார். வெளியே தொழிற்சாலை காவலாளி நின்று கொண்டிருந்தார். சந்தோஷத்தில் அவரை கட்டி தழுவி, 'நான் உள்ளே இருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?' என்று கேட்டுள்ளார்.

'சார்... நான் இங்க, 10 வருஷமா வேலை செய்றேன். நீங்க ஒருத்தர் தான், என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு, காலைல வணக்கமும், சாயங்காலம், 'குட் பை'யும் சொல்றவரு; இன்னிக்கி காலைல, வணக்கம் சொன்னீங்க... ஆனா, சாயங்காலம் நீங்க, 'குட் பை' சொல்லல. அதனால, சந்தேகப்பட்டு, உள்ளே வந்து, ஒவ்வொரு இடமா தேடினேன்; அப்போ தான் உங்கள கண்டு பிடிச்சேன்...' என்றார்.

செய்யும் பணியை வைத்து மற்றவர்களை தரக்குறைவாக எண்ணாமல், மனுஷனாக மதித்து பரஸ்பரம், மரியாதை செலுத்துவது, எப்போதுமே, நன்மை பயக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்!

ஆர்.வினோத், சென்னை.






      Dinamalar
      Follow us