
உற்சாகமா பேசுங்க!
என் அலுவலக உயர் அதிகாரி ஒருவர், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். நேரிலோ, போனிலோ யாராவது அவரிடம், 'எப்படி இருக்கிறீங்க...' என்று கேட்டால், 'ரொம்ப நன்றாக, 'ஜம்'ன்னு இருக்கேன்; நீங்களும் அப்படித்தானே...' என்று உற்சாகமாக பதிலளிப்பார்.
மற்றவர்களை பற்றி விசாரித்தால் கூட, 'அவருக்கென்ன சார்... 'ஜம்'ன்னு இருக்கார்...' என்று, அதே உற்சாகத்துடன் கூறுவார்.
நம்மில் பலர், 'எப்படி இருக்கிறீங்க...' என்று யாராவது கேட்டு விட்டால் போதும்... உடனே, முகத்தை சவம் மாதிரி வைத்து, 'ஏதோ இருக்கேன்; பிழைப்பு ஓடிட்டு இருக்கு...' என்று துவங்கி, பிரச்னைகளை அடுக்கி விடுவர். அதை விடுத்து, இவரைப் போல், தன்னம்பிக்கையுடன் பதிலளிக்கப் பழகிக் கொண்டால், உற்சாகம் நம்முள் கொப்பளிப்பதோடு, மறுமுனையில் இருப்போருக்கும் அது தொற்றிக் கொள்ளும். முயற்சி செய்து தான் பார்ப்போமே!
— சி.ஜெகன், மதுரை.
கணவரிடம் மறைக்காதீங்க!
நான், மத்திய அரசு அலுவலக ஊழியை; அலுவலகத்தில், வேலை காரணமாக, சோர்வு ஏற்படாமல் இருப்பதற்காக, அவ்வப்போது, டீ குடிப்பது உண்டு. என் பக்கத்து செக் ஷனில் இருக்கும் நண்பர் ஒருவரும் டீ குடிப்பார். இதனால், எங்களுக்குள் ஒரு ஆரோக்கியமான ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி, இருவருக்கும் சேர்த்து, ஒரே ஒரு டீயை வரவழைத்து, அதை பாதியாய் பகிர்ந்து கொண்டோம்.
இதனால், செலவு குறைவானதோடு, அதிகமாய் டீயை உள்ளே இறக்கி, உடம்பைக் கெடுத்து கொள்வதிலிருந்து பாதுகாத்து கொள்ளவும் முடிந்தது. இவ்விஷயத்தை, எங்கள் அலுவலக ஊழியர் ஒருவர், என் கணவரிடம் கூறி விட்டார்.
விளைவு, வீட்டுக்கு வந்ததும், குதி குதியென்று குதித்தார் என் கணவர். ஆவேசமாய் என்னிடம் கோபப்பட்டாலும், கடைசியில், அவர் கூறியதில் நியாயம் இருந்தது. 'இதை என்னிடம் முதலிலேயே கூறியிருந்தால், என்னிடம் வத்தி வைத்த நபரிடம், 'ஏற்கனவே என் மனைவி இதை கூறி விட்டாள்...' என்று முகத்தில் அறைந்த மாதிரி பேசியிருப்பேனே...' என்றார்; நியாயம் தானே!
வேலைக்குச் செல்லும் சகோதரிகளே... அலுவலகத்தில் ஆண்களோடு பணிபுரியும் போது, இம்மாதிரியான விஷயங்கள் இருந்தால், கணவரிடம் மறைக்காமல் கூறினால், தேவையில்லாத பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்!
— ராதா மனோகர், சென்னை.
உணவை வீணடிக்க வேண்டாம்!
சமீபத்தில், என் நண்பரின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமக்களை வாழ்த்தியபின், உணவருந்த சென்றபோது, அங்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. உணவருந்த வருவோரை வரவேற்க, இருவர் அமர்த்தப்பட்டு இருந்தனர். அவ்விருவரும், விருந்தினரை வணங்கி வரவேற்று, 'உணவை வீணடிக்க வேண்டாம்!' என்ற நான்கு பக்க சிறிய புத்தகத்தை வழங்கினர்.
அப்புத்தகத்தினுள், வாசகங்களை விட, உணவை வீணடிக்கக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் படங்களே அதிகம் இருந்தன. அப்படங்கள், குழந்தைளுக்கும் புரிவது போல், அழகாக அச்சடிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், உணவு அருந்தும் இடத்தில், ஆங்காங்கே பெரிய தொலைக்காட்சி திரைகளை அமைத்திருந்தனர். வழக்கம்போல் திருமண நிகழ்ச்சிகளை தான் ஒளிபரப்பப் போகின்றனர் என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், உணவை வீணடிக்கக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் வகையில், குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இவ்வுலகில், உணவின்றி அவதிப்படுவோரை படம் பிடித்துக் காட்டி, உணவை வீணடிப்பது மகா பாவம் என எடுத்துக் காட்டப்பட்டது.
இந்த நல்ல விஷயத்தை பார்த்த சந்தோஷத்தில், வயிறு நிரம்பியது போல் இருந்தது. சாப்பிட்டு முடித்த பின், பந்தியில் வழக்கமாக வீணடிக்கப் படுவதை விட, மிகக் குறைவாகவே உணவு வீணடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு பூரிப்படைந்தேன். சாப்பிட்ட கையோடு பெண் வீட்டாரிடம் சென்று, என் வாழ்த்துகளை தெரிவித்தேன். நாமும் நம் திருமண விழாக்களில் இதை முயன்று பார்க்கலாமே!
— பரத்வாஜ், சென்னை.

