
இறுதிச் சடங்கில் குவியும் மாலைகள்!
இறப்பு நடந்த வீடுகளில் குவியும் பூ மாலைகளை அகற்றுவது பல இடங்களில் பெரும் பிரச்னையாக உள்ளது. அதை உணர்ந்த புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி ஆணையர், 'பூமாலை பிரச்னைகளுக்கு நகராட்சியே பொறுப்பெடுத்து, அந்த மாலைகளை அகற்றும்...' என அறிவித்துள்ளார். மேலும், சவ ஊர்வலத்தின் போது, தூக்கி எறியப்படும் மாலைகள், சாலையில் செல்வோர் மற்றும் வண்டியில் செல்வோர் மீது பட்டு, சிக்கி, சில சமயம், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை குறிப்பிட்டு, 'இறுதி ஊர்வலத்தின் போது, மாலைகளையும், பூக்களையும் சாலைகளில் எறிய வேண்டாம்...' என்றும், 'பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பாடைகளை, இடுகாடு மற்றும் சுடுகாடுகளில் வைத்து விட்டால், அதை நகராட்சியே அப்புறப்படுத்தும்...' என்று கூறி, அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
இந்த அறிவிப்பு, மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற நகராட்சி மற்றும் ஊராட்சியினரும் இதைப் பின்பற்றலாமே!
— க.முத்துசாமி, புதுச்சேரி.
பள்ளி மாணவியின் அராஜகம்!
சமீபத்தில், என் உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அங்கே, 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவள், தன் தாயை, 'நான் எத்தனை முறை உன்னை கூப்பிடுறது... மரம் மாதிரி நிக்கறயே... செவுடு செவுடு... சீக்கிரம் என் தலைய பின்னி விடேன்...' என்று கத்தினாள். அவளது தாயோ, உறவினர் முன்னிலையில் மகள் கத்தியதைக் கேட்டு, கண்கள் கலங்க, அமைதியாக இருந்தாள்.
அந்த தாயின் நெருங்கிய உறவினரிடம், 'இந்த சின்ன பொண்ணு அவங்க அம்மாவ கொஞ்சம் கூட மரியாதை இல்லாம எல்லாருக்கும் முன் திட்டிக்கிட்டு இருக்கா. நீங்களும் பேசாம கேட்டுகிட்டு இருக்கீங்களே... கொஞ்சம் எடுத்துச் சொல்லி, அவளுக்கு அறிவுரை சொல்லக் கூடாதா?' என்றேன்.
அதற்கு அப்பெண், 'அவளோட அப்பா, எப்பவும், தன் மனைவிய இப்படித்தான் திட்டிகிட்டே இருப்பாரு. அதை, சின்ன வயசிலிருந்து பாத்து வளர்ந்ததால, இவ, அவ அப்பா மாதிரியே, அம்மாங்கிற மரியாதை இல்லாம, இப்படி தான் திட்டுவா. அவரு தன் மனைவிக்கு மரியாதை தந்திருந்தா, இவ இப்படியெல்லாம் பேச மாட்டா. நாங்க என்ன சொன்னாலும், அவ மாறப் போறதில்ல...' என்று கூறி, உதட்டை பிதுக்கினார்.
அந்த தாயிடமே, 'ஏம்மா... உன் பொண்ணு இப்படி உன்னை கொஞ்சம் கூட மட்டு மரியாதை இல்லாம திட்டுறா... ஆரம்பத்திலேயே நாலு அடி போட்டிருந்தா, இப்படி பேசுவாளா...' என்று நான் கூறியதும், 'நீங்க வேற... அவங்க அப்பா தொட்டதுக்கெல்லாம், கண்மண் தெரியாம என்னை அடிப்பாரு. அப்படித்தான் ஒருமுறை என் பொண்ணை அடிக்கப் போக, அவ, என்னை திருப்பி அடிச்சிட்டா. இதுதான் அவ எனக்கு கொடுக்கிற மரியாதைன்னு நினைச்சு, அதிலிருந்து அவளை அடிக்கிறத நிறுத்திட்டேன்...' என்றாள் வருத்தத்துடன்!
இதுபோன்ற வீட்டுச் சூழலில், எடுத்தெறிந்து பேசும் பிள்ளையைப் பெற்றவர்கள், அவர்களது பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொல்லி, அறிவுரை கூறச் சொல்லலாம் அல்லது மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம்.
இப்பெண், திருமணத்திற்கு பின் கணவன், மாமியார் - மாமனாரிடம் இப்படித் தான் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று நடந்து கொள்வாளோ?
கணவன், மனைவி இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்தால் தான், குழந்தைகளும், தங்கள் பெற்றோரிடம் மரியாதையுடன் நடந்து கொள்வர்.
இன்று அம்மாவுக்கு நேர்ந்தது, பிற்காலத்தில் அப்பாவுக்கும் நேரலாம். எனவே, ஆரம்பத்திலேயே தன் பிள்ளைகளுக்கு உதாரணமாக, ஆதர்ச பெற்றோராக இருக்க முயற்சி செய்வீர்களா பெற்றோர்களே!
— ஆர்.ஸ்ரீராம், சென்னை.
சாதனையாளர்களாக மாற...
அரசு பள்ளியில், தலைமை ஆசிரியராக இருக்கும் நான், மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் சம்பந்தமாக நான் பெற்ற அனுபவங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...
தங்கள் பிள்ளைகள் நன்கு படித்து, முதல் மாணவனாய் வர வேண்டும் என, பெற்றோர் நினைப்பது இயல்பே! அதற்கான வழிமுறைகள் சிலவற்றை பின்பற்றினால், பெற்றோரின் எதிர்பார்ப்பு நிறைவேறும். அது:
* மாதம் ஒருமுறையாவது பள்ளிக்குச் சென்று வகுப்பாசிரியர், பாட ஆசிரியர், தலைமை ஆசிரியரை சந்தித்து, உங்கள் குழந்தைகளை பற்றி கலந்துரையாடுங்கள்.
* சுற்றுப்புற சூழ்நிலைகளே மாணவர்களை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுகிறது. எனவே, வீட்டில் பெற்றோர் சண்டையிடுவதை தவிருங்கள்.
* அதிகாலையில் எழுதல், பல் துலக்குதல், இயற்கை உபாதைகளை கழித்தல், குளித்தல், தூய ஆடைகளை அணிதல் போன்றவற்றில் குழந்தைகளோடு சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.
* அடிக்கடி விடுப்பு எடுக்க அனுமதிக்காதீர்கள்.
* குழந்தைகளின் நட்பு வட்டாரத்தை விசாரித்து, முறைப்படுத்துங்கள்.
* மாலையில் பள்ளியை விட்டு வந்ததும் சிற்றுண்டியுடன், சிறிது நேர விளையாட்டிற்கு பின், படிப்பதை கட்டாயப்படுத்துங்கள். முடிந்தவரை, தினமும் பள்ளியில் நடந்தவற்றை அக்கறையோடு விசாரியுங்கள்.
* தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கு அவ்வப்போது பரிசுகள் கொடுத்து உற்சாகப் படுத்துங்கள்.
* சிறு வயதிலேயே எதிர்கால லட்சியத்தை கேட்டு அதற்கான வழிமுறைகளை எடுத்துச் சொல்லுங்கள்.
* நல்ல உணவு பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுங்கள்.
* உடல், உடை மற்றும் சுற்றுப்புற தூய்மை பற்றி விழிப்புணர்வை உருவாக்குங்கள்.
* குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில், அதிக கவனம் செலுத்துங்கள்.
பிறகு பாருங்கள்... உங்கள் குழந்தைகளும் சாதனையாளர்களாக மாறுவர்!
— வே.செந்தில்குமார்,
கொங்கணாபுரம்.
பொதுத்தேர்வா... பயப்படாதீர்!
தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறாள் என் மகள். சமீபத்தில், அப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவியர் மற்றும் பெற்றோருக்கு கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
அக்கூட்டத்தில், 'பொதுத் தேர்வை சந்திக்க உள்ள பிள்ளைகளுக்கு, அன்றாடம் மதிய உணவில் பயத்தம் பருப்பு சேர்த்த கூட்டு அல்லது கீரை கூட்டு என தினமும் செய்து கொடுத்தால், மூளை நன்கு வளர்ச்சி பெறுவதுடன், ஞாபக சக்தி கூடி, படிப்பது மனதில் பதிவாகும் என விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது...' என்று கூறி, காய்கறி மற்றும் கீரையில் உள்ள சத்துகளைப் பட்டியலிட்டனர்.
மேலும், 'அன்றாடம் பிள்ளைகளை கண்காணிப்பது, அதிகாலை எழுப்பி, காபி அல்லது டீ கொடுத்து குழந்தைகளை படிக்க தூண்டுவதுடன், சில பாடத்தில், மதிப்பெண் குறைவாக பெற்றாலும், 'அடுத்து வரும் தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்று விடுவாய்...' என உற்சாகப்படுத்தினால், நிச்சயம் பொதுத் தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெறுவர்...' என்று, 'டிப்ஸ்' கொடுத்தனர். இது, பெற்றோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மற்ற பள்ளிகளும் இதுபோல் செய்யலாமே!
— ம.தர்மராஜ், வக்கம்பட்டி.

