
மாற்றுத் திறனாளியின் மனிதநேயம்!
என் மகனின் திருமண அழைப்பிதழை கொடுக்க, மாற்றுத்திறனாளியான என் பள்ளித் தோழியை சந்திக்க, அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டின் முகப்பில், 'மாற்றுத்திறனாளி ஏழை மாணவ - மாணவியருக்கு இங்கு இலவசமாக டியூஷன் எடுக்கப்படும்...' என்ற 'போர்டு' பளிச்சிட்டது. அதுபற்றி தோழியிடம் விசாரித்த போது, 'ஒரு காலத்தில், ஊனமாக பிறந்து விட்டோமே என, மூலையில் முடங்கி கிடந்தவள் தான் நான். ஆனால், என் தலையெழுத்தை மாற்றும் சக்தி, கல்விக்கு உண்டு என்பது புரிந்து, படிப்பில் கவனம் செலுத்தினேன். இப்போது, நல்ல நிலையில் இருக்கிறேன். நான் பெற்ற கல்வியின் பலனை, என் போன்ற நிலையில் இருப்போரும் பெற வேண்டும் என நினைத்து, டியூஷன் எடுக்கிறேன்...' என்றாள்.
அதைக் கேட்ட போது, மகிழ்ச்சியாக இருந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் படிப்புக்கு, அவளால் முடிந்த உதவிகளை செய்வதாக, பிறர் கூறக் கேட்டு, பிரமித்தேன்.
வெல்க, மாற்றுத்திறனாளியின் மனித நேயம்!
— எஸ்.சுமதி, திட்டக்குடி.
வண்ணம் தீட்டினால், டென்ஷன் குறையும்!
சமீபத்தில், என் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து, ஆளுக்கு ஒரு, 'கலரிங் புக் கை' வைத்து வண்ணம் தீட்டியபடி இருந்தனர். 'என்னது... சின்னப் பிள்ளைங்க மாதிரி வயசு வித்தியாசம் இல்லாம, கிரையான் மற்றும் கலர் பென்சில் வச்சு கலர் அடிச்சிகிட்டிருக்கீங்க...' என்றேன்.
அதற்கு அவ்வீட்டு பெரியவர், 'தம்பி... இப்படி கலர் அடிப்பதும், தியானம் செய்வது போல தான்! டென்ஷன் குறைந்து, சுறுசுறுப்பு ஏற்படுகிறது. தினமும் சில நிமிடங்கள், கலர் அடித்தால், மூளை மற்ற கவலைகளை மறக்க வைத்து, செய்யும் வேலையில் ஈடுபாடும், இதயத்துடிப்பிலும், மூளை அலைகளிலும் நல்ல மாற்றம் ஏற்படுத்தி, நெகடிவ் எண்ணங்களிலிருந்து, பாசிடிவ் எண்ணத்துக்கு, மாற்றுகிறதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க.
'இதனாலேயே, இப்போ ஐ.டி., கம்பெனிகளில் கூட, தன் ஊழியர்களை, 10 நிமிடம் கலர் அடிக்க அனுமதிக்கிறாங்க. மாணவர்கள் வகுப்புக்கு செல்லும் முன், ஐந்து நிமிடம், கலர் அடிச்சிட்டு போனா, பாடத்தை சுலபமா புரிஞ்சுக்கலாம்.
'நீண்ட நாள் நோயாளிகள், 'அடலட் கலரிங் புக்'கை வாங்கி, கலர் அடிக்க ஆரம்பிச்சா, அவங்க உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதாக ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறதாம். இந்த விஷயம் தெரிஞ்சு, ஐ.டி., கம்பெனியில வேலை செய்ற என் மகன், எங்க எல்லாருக்கும், 'கலரிங் புக்' வாங்கி கொடுத்துட்டான்.
'இப்போ வீட்டில நேரம் கிடைக்கும் போதெல்லாம், நாங்க எல்லாருமே சிறிது நேரம் கலர் அடிக்கிறோம். வழக்கமா குழந்தைகளுக்கு கலரிங் புக்கை வாங்கிக் கொடுத்துட்டு, சும்மா இருந்துடுவோம். இப்போ, அதுவே எங்களுக்கும் டென்ஷனை குறைக்குது...' என்று கூறினார்.
இனி, நாமும் வண்ணம் தீட்டுவோம்; டென்ஷனை குறைத்து சந்தோஷமாக இருப்போம்!
- ஆர்.ஸ்ரீராம், சென்னை.
வேண்டாமே குளிர்பானங்கள்!
என் நண்பன், தனியார் நிறுவனத்தில், 'மார்கெட்டிங்' பிரிவில் வேலை செய்கிறான். வெயிலின் கொடுமையால், தாகம் தணிக்க, அவ்வப்போது குளிர்பானங்கள் அருந்துவது அவன் வழக்கம். திடீரென, நாளுக்கு நாள், அவன் உடல் எடை கூடியதுடன், மூட்டு வலியால் மிகவும் சிரமப்பட்டான். மருத்துவரிடம் காட்டிய போது, அவர் பரிசோதித்து, அவன் உணவுப் பழக்கங்களையும் கேட்டறிந்து, 'குளிர்பானங்களில் அதிக கலோரி உள்ளதுடன், அதில், செயற்கை சர்க்கரை சேர்க்கின்றனர். சில குளிர்பானங்களில், 'ஆர்த்தோ பாஸ்பரிக்' என்ற அமிலம் கலப்பதால், அது, உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்...' என்று சொல்லி, அவற்றை அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுரை கூறியுள்ளார்.
வாசகர்களே... தாகத்தை தணிக்க, உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்த, மோர், பழச்சாறு, இளநீர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தர்பூசணி மற்றும் முலாம் பழம் போன்ற இயற்கை பானங்களும், பழங்களுமே நம் உடலுக்கு ஏற்றது. ரசாயன குளிர் பானங்கள் ஒருபோதும் நமக்கு நன்மை தராததுடன், சிலருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் தொற்றுநோய் அபாயத்தையும் ஏற்படுத்தும்.
எல்லாருக்கும் ஏற்ற இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளலாமே!
— ஆ.கண்ணதாசன், சென்னை.

