
பலே ஐடியா!
நான், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவி. சென்ற வாரம், எங்கள் வீட்டிற்கு ஒரு குடும்பத்தார் வந்தனர். யார் என விசாரித்த போது, என்னை பெண் பார்க்க வந்திருப்பதாக கூறினர். இதை கேட்டதும், எங்கள் அனைவருக்கும் அதிர்ச்சி.
'நாங்கள், யாரிடமும் மாப்பிள்ளை பார்க்க சொல்லவில்லையே...' என்றார் என் அப்பா.
அதன்பின், விசாரித்த போது தான் உண்மை தெரிந்தது. அதாவது, தற்போது, ஆசிரிய பணியில் கிடைக்கும் சம்பளம் மற்றும் சலுகைகள் கருதி, அனைவரும் ஆசிரியை மணமகள்களையே விரும்புகின்றனர். இதனால், ஆசிரிய பயிற்சி பள்ளியில் வேலை பார்ப்பவர்களிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து, அங்கு படிக்கிற மாணவிகளின் முகவரியை பெற்று, பெண் பார்க்க கிளம்பி விடுகின்றனர்.
படிக்கும்போது நிச்சயதார்த்தம், படிப்பு முடிந்தபின் திருமணம் என, அவர்களே முடிவு செய்கின்றனர். இதைவிடக் கொடுமை, சம்பந்தப் பட்டவர்களுக்கு தெரியாமல், பள்ளியிலேயே பெண் பார்க்கும் படலமும் நடக்கிறது. இதுபோன்ற இடையூறுகளால் படிப்பு கெடும் அபாயம் உள்ளது. சம்பந்தப் பட்டவர்கள் இதை உணர்ந்து, திருந்துவரா?
— ப.நிர்மலா, விருதுநகர்.
மனநிலையை புரிந்து கொள்வோம்!
சமீபத்தில், என் தோழியை சந்திக்க, அவளது வீட்டுக்கு சென்றிருந்தேன். அருகில் வசிக்கும் அவளது நாத்தனாரும் வீட்டில் இருந்தாள். அவள், சாதாரண விஷயத்துக்கு கூட தோழியின் மீது எரிந்து விழுந்து, கடிந்தபடியே இருந்தாள். ஆனால், என் தோழியோ, துளியும் எரிச்சல் படாமல் பொறுமையாக நாத்தனாருக்கு பதில் கூறினாள். அவள் போன பின், 'எப்படிடீ... இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்கறே... ஒரு தடவ சூடா பதில் சொன்னா, உன் நாத்தனார் அடங்கிப் போவா...' என்றேன்.
அதற்கு என் தோழியோ, 'என் நாத்தனார், 35 வயதிலேயே கணவன இழந்துட்டா. அவ வீட்டுக்காரர் இருந்தப்ப அவ கிட்ட இருந்த அமைதியும், மகிழ்ச்சியும் இப்போ இல்ல. காரணம், அவளது நியாயமான உடல் தேவைகள் நிறைவேறாதது தான். இது, அவ மனசை பாதிக்கிறதால எடுத்ததற்கெல்லாம் எரிச்சல் படுவா. அதனால, இதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதேன்னு என் கணவர் சொல்லியிருக்கார்.
'என் நாத்தனாரோட பிள்ளைக பருவ வயசுல இருக்கிறதாலே, அவளே, 'எனக்கு மறுமணம் வேணாம்'ன்னு மறுத்துட்டா. குடும்ப மானம், பிள்ளைகளின் கவுரவம் கருதி, தவறான வழியில் செல்லாமல், குடும்ப கவுரவத்தை காப்பாற்றுகிற அவ, ஏதோ இயலாமையில என்னை திட்டுறா. அத எதுக்கு பெரிசுபடுத்தணும்? நான் எதிர்த்து பேசினா அவ மனசு இன்னும் பாதிக்க தான் செய்யும்...' என்றாள்.
என் தோழி சொல்வதும் சரியாகவே பட்டதால், அவளது பொறுமையை பாராட்டினேன்.
— வி.ஜனனி, சிவாபுரம்.
பெண்ணுக்கு, பெண்ணே எதிரியா?
சமீபத்தில், மாநகரப் பேருந்தில் பயணித்த போது, என் இருக்கை அருகே, நடுத்தர வயது பெண் ஒருவர் நின்றிருந்தார். அவரது மொபைலில் அழைப்பு வர, எடுத்து பேசினார். நீண்ட நேரம் பேசிய அவரது உரையாடலை கவனித்த போது, அவர், அவரது சொந்த தங்கையிடம் பேசுவது உறுதியானது.
அந்த உரையாடலின் உச்சக்கட்டமாக, தங்கைக்கு, அக்காவின் உபதேசம் என்ன தெரியுமா?
'அம்மா வீட்டுக்கு வரணும்ன்னு ஆசை வந்தா அதை தள்ளிப் போடக் கூடாது. நீயே உன் மாமியாரிடம் ஏதாவது பிரச்னையை உருவாக்கி, அதை பெரிதாக்கி, அம்மா வீட்டுக்கு போறேன்னு வந்திரு...
'நீ என்ன செய்தாலும் உன் மாமியார் அமைதியா இருந்தா, உன் பணத்தை, உன் மாமியார் பெட்டியில் வைச்சுட்டு, பணத்தை காணலைன்னு டிராமா போடு. கடைசியில, பழியை உன் மாமியார் மேல் போட்டு, அதை வைத்து பிரச்னையை உண்டாக்கி, வீட்டுக்கு வந்துடு. அப்புறம் சமாளிச்சுக்கலாம்...' என்றாள்.
இப்படி மனசாட்சியே இல்லாமல் தொடர்ந்தது அவரது பேச்சு. ஒரு அக்கா, தன் தங்கைக்கு நல்ல வழிகளை சொல்லிக் கொடுக்காமல், இப்படியா குடும்பத்தில் குழப்பத்தை உருவாக்குவது?
தன் தாயைப் போல், மாமியாரும் ஒரு பெண் என்பதை உணராமல், வீண் பழி போடுவது நியாயமா... அந்தப் பெண், தன் தங்கை குடும்பத்திற்கு நல்லது செய்யா விட்டாலும் பரவாயில்லை. கெடுதல் செய்யாமல் இருந்தாலே போதும்.
இப்படி பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருப்பவர்கள், இனியாவது திருந்துவரா?
— வி.கீர்த்தனா, சென்னை.
எல்லாம் மெகா சீரீயல்கள் கற்றுத் தரும் பாடம் சிஸ்டர். — பொ.ஆ.,
இப்படியும் ஒரு கணவர்...
நீண்ட நாட்களுக்கு பின், என் பால்ய சினேகிதியை சந்தித்தேன். அவள், தன் கணவரைப்பற்றி கூறிய விஷயங்கள் இருக்கிறதே... இப்படியும் ஒருவர் இருப்பாரா என்று அதிர்ச்சியாக இருந்தது.
'அந்த மூன்று' நாட்களில், கணவர் கண்களில் அவள் தென்படக் கூடாதாம்... அந்த நாள் வந்தவுடன், 'உன் வீட்டுக்கு ஓடு...' என்று பிடித்துத் தள்ளாத குறையாக, அவள் தாய் வீட்டுக்கு அனுப்பி விடுவாராம்...
'கல்யாணமாகி ஐந்து ஆண்டுகளாகியும், இன்னும் என்னை, 'அந்த' நாட்களில் பெற்றோர் வீட்டிற்கு விரட்டுகிறார். என் பெற்றோர் அருகில் இருப்பதால், இங்கே வந்து விடுகிறேன். அவர்கள் தொலைவில் இருந்தால் என் பாடு என்னவாகும்...' என்று கூறும்போதே அவள் கண்களில் பொல பொலவென்று கண்ணீர் பொங்கி வடிந்தது.
'பெண்களுக்கு சுதந்திரம் கிடைச்சாச்சு...' என்று மேடை தோறும் முழங்கும் இக்காலத்திலும், இப்படிப்பட்ட ஆணாதிக்க கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
ஆண்களே... திருந்துவீர்களா?
— ஹேமலதாசங்கரன், சென்னை.

