
ஓட்டு போட மறக்காதீர்!
விரைவில் தேர்தல் வரவிருக்கிறது; ஆனால், சிலர் தேர்தலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. அத்துடன், பலர் ஓட்டு போட ஓட்டுச்சாவடிக்கே செல்வதில்லை. அன்று, 'டிவி' பார்த்து, விருந்து சாப்பிட்டு, பொழுதை கழிக்கின்றனர். ஓட்டு போடுவோரில் சிலர், ஏதோ ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு வந்து விடுகின்றனர். தேர்தலன்று சில விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொள்வது அவசியம்...
* எக்காரணம் கொண்டும், ஓட்டு போடாமல் இருந்து விடாதீர். நம் மாநிலத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் உரிமை, உங்களிடம் தான் உள்ளது.
* யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை, ஒரு சில நாட்களுக்கு முன்பாகவே, முடிவு செய்து கொள்ளுங்கள்.
* எதற்கு ஓட்டை வீணாக்க வேண்டும்; ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு போட்டு விடலாம் என்று நினைக்காதீர். எந்த கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதை, நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
* கட்சி அல்லது வேட்பாளர்களின் கடந்த பத்தாண்டு கால செயல்பாடுகளை, எண்ணிப் பாருங்கள்.
* எந்த வேட்பாளருக்கு ஓட்டு போடுகிறோம் என்பது மிகவும் முக்கியம். வேட்பாளர் சார்ந்திருக்கும் கட்சி, ஜெயிப்பதற்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், தகுதியான வேட்பாளராக இருந்தால், அவருக்கே ஓட்டளியுங்கள்.
* உங்களை புரட்சியாளராக எண்ணி, நோட்டாவிற்கு ஓட்டு போடாதீர். நோட்டா என்பது வேட்பாளர் இல்லை. இதனால், நாட்டிற்கோ, உங்களுக்கோ பயனேதும் விளையப் போவதில்லை.
* தமிழகத்தின், எதிர்காலம் நீங்கள் போடும் ஓட்டில் தான் இருக்கிறது என்பதை மறவாதீர்!
— ஜெ.கண்ணன், சென்னை.
அரசியல் கட்சிகள் தயாரா?
அரசியல் கட்சித் தலைவர்களே... தமிழக வாக்காளர் என்ற முறையில், நாங்கள் எதிர்பார்ப்பது இதுதான்... இதை,தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தால், வெற்றி நிச்சயம்!
எங்களுக்கு ஓட்டுக்கு பணமோ, இலவசங்களோ வேண்டாம்; அதற்கு பதில், தமிழகம் முழுவதும் தரமான சாலை வசதி, பேருந்து, குடிநீர், தடையற்ற மின்சாரம், முழுவதும் மூடிய பாதாள சாக்கடை, சுத்தமான கழிப்பிட வசதிகள் தேவை.
அத்துடன், மக்களை அலைய விடாமல், அரசு பணிகளை சீக்கிரம் முடித்து வைத்தல், விவசாயத்திற்கு என, தனி பட்ஜெட். அவர்களுக்கென காப்பீட்டு திட்டம் தேவை. இதன் மூலம், இனி, எந்த ஒரு விவசாயியும், நஷ்டத்தில் சாகக் கூடாது.
மேலும், தமிழகம் முழுவதும் உள்ள நதிகளை இணைப்பதுடன், பெருமழை காலங்களில், விவசாய நிலங்களில், மழைநீர் தங்காமல் இருக்க வேண்டி ஏற்படுத்துதல், மழைநீர் வடிகாலுடன் கூடிய சாலை.
கருவேல மரங்களை ஒழித்தல், ஆறு, ஏரி மற்றும் குளங்களை முறையாக தூர் வாரி, பராமரித்தல்.
இதுபோன்ற அன்றாட வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய திட்டங்களை அறிவித்து, மக்கள் மனதில் இடம் பிடிக்க பாருங்களேன்!
- எஸ்.சண்முகஸ்ரீநிவாசன், சென்னை.
ஓட்டுப் போட பணம் வாங்காதீர்!
கடந்த, 33 ஆண்டுகளாக வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிகிறேன். சேமிப்பு கணக்கில் பணம் எடுப்போர், எப்போதும் கேட்பது, 500 அல்லது 1,000 ரூபாய் நோட்டுகள் தான். அதனால், தேங்கியுள்ள, 100 ரூபாய் நோட்டுகளை, எங்களது, 'செஸ்ட்' கிளைக்கு அனுப்பி வைப்போம். ஆனால், கடந்த தேர்தல் நேரத்தில், 100 ரூபாய் கட்டுக்களை, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் வாங்கிச் சென்றனர். 100 ரூபாய் கட்டுக்கள் காலியாகிறதே என்று எங்களுக்கும் மகிழ்ச்சி. பின்னர் தான் தெரிந்தது... ஓட்டுக்கு பணம் கொடுக்க இது பயன்பட்ட விவரம். இதேபோல் தான், மற்ற வங்கிகளிலும் நடைபெற்றுள்ளது.
அனுமதி இல்லாமல் யாருக்கும், 100 ரூபாய் நோட்டுக் கட்டுகளை அதிக அளவில் தரக் கூடாது என, இம்முறை, முடிவு செய்துள்ளோம்.
இக்கடிதம் மூலம், முகம் தெரியாத வங்கி நண்பர்களுக்கு கூறுவது... ராமருக்கு உதவிய அணில் போல தேர்தல் கமிஷனுக்கு நம்மால் ஆன, இந்த சிறு உதவியைச் செய்வோம்.
அன்பு பொதுமக்களே... இதன் மூலம், உங்களுக்கு கிடைக்கக் கூடிய அன்பளிப்பு பணம் பறிபோய் விட்டதே என, வருத்தம் அடைய வேண்டாம். நமக்கும், நம் குழந்தைகளுக்கும் அந்த மாசு கலந்த பணம் வேண்டாம்!
— அம்பை நாகு, திண்டிவனம்.
இத காப்பியடிங்க முதல்ல!
சில மாதங்களுக்கு முன், குடும்பத்தினருடன் கேரளா சென்றிருந்தேன். தூய்மையாகவும், அழகாகவும் விளங்கிய அதன் சுற்றுப்புறங்கள் எங்களை பெரிதும் கவர்ந்தது. முக்கியமாக சுவர்களில் அரசியல் கட்சிகளின் விளம்பரத்தையோ, சுவரொட்டிகளையோ காணவில்லை. ஆளுங்கட்சி முதல்வரான உம்மன் சாண்டியின் புகைப்படத்துடன் கூடிய ஒரே ஒரு துணி பேனர் மட்டும் செவ்வக வடிவில் இழுத்து கட்டப்பட்டிருந்தது; அதுவும், ஒரு அரசு அலுவலகத்தில்! அதையும் கூட நினைத்தவுடன் அவிழ்த்து, மடித்து வைத்துவிட முடியும்.
இங்கே, நம்மூர் நிலைமை, தலைகீழாக இருப்பதை ஒப்பிட்டு பார்த்து மனம் வருந்தினோம். ஏதேதோ ஒத்துவராத விஷயங்களையெல்லாம் கலாசாரம் எனும் பெயரில் காப்பியடிக்கும் நம்மவர்கள், இப்படிப்பட்ட நல்ல விஷயங்களையும், மற்றவரிடமிருந்து காப்பியடிக்க முயற்சி செய்யலாமே... செய்வரா?
— எம்.குமாரி, மதுரை.

