PUBLISHED ON : டிச 12, 2010

வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க, varamalar@ dinamalar.in என்ற மின் அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சில நேரங்களில், சில மனிதர்கள்!
நானும், என் கணவரும், சமீபத்தில், இரவு பயணமாக வெளியூர் ஒன்றுக்கு, அரசு விரைவு பேருந்தில் சென்றோம். வார விடுமுறை நாளானதால், கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 12 மணியளவில், திடீரென்று, ஏதோ ஒரு ஊருக்கு அருகாமையில் பஸ் நின்று, விளக்குகள் எரிந்தது. தூக்க மயக்கத்திலிருந்தபடியே, ஏன் பஸ் நின்று விட்டது என்று பார்க்க, கண்டக்டர் உரத்த குரலில், 'பெண்ணிடம் யாரோ சில்மிஷம் செய்ததாக, எங்களிடம் புகார் வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர் இறங்கி போய் விடுவது நல்லது. இல்லையென்றால், வண்டி போலீஸ் ஸ்டேஷன் போகும்...' என்று, சொல்லிவிட்டு போட்ட விளக்கையும் அணைத்து விட்டார். இருட்டில் ஒரு ஆள் பெட்டியை தூக்கிக் கொண்டு இறங்கியது தெரிந்தது. பிறகு, வண்டி கிளம்பியது. நமக்கென்ன என்று இருக்காமல், இது போன்று, யாரையும் அவமானப்படுத் தாமல், புண் படுத்தாமல், நாகரிகமாக, கடமை உணர்ச்சியுடன், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்புள்ள டிரைவர், கண்டக்டர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
— வரலட்சுமிமுத்துசாமி, சென்னை.
சரியான பாதுகாப்பு இது!
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் என் உறவினர் பெண் ஒருவரை, அவரது அலுவலகத்தில் சந்திக்க நேர்ந்தது. அவருடன், பத்து பதினைந்து பெண்கள் பணிபுரிகின்றனர். அனைவரும் ஆண்கள் அணிவது போல், 'ஒயிட்' கலரில் மேல் சட்டை அணிந்திருந்தனர். 'இது என்ன மேலே மட்டும், 'யூனிபார்ம்' மாதிரி இருக்குது...' என விசாரித்த போது, அலுவலகத்தில் குனிவது, நிமிர்வது போன்ற நேரங்களிலும், பரபரப்பாக பணிபுரியும் போதும் சேலை ஒதுங்கி, இடைஞ்சல் தருவதுண்டு. அந்த சமயங்களில், ஆடையை சரி செய்ய வேண்டும். அந்தக் கவனத்தில் இருக்கும் போது, வேலையில் முழு மனதுடன் ஈடுபடுவது கஷ்டமாக உள்ளது. மேலும், இதனால், சக ஆண் ஊழியர்களும் வேலையில் கவனம் தவிர்த்து, அதைப் பார்த்து ரசிப்பதில் கவனம் செலுத்த நேரிடும். அவர்கள் மட்டுமின்றி அலுவலகத்துக்கு வருவோர், போவோர் என அனைவரும் சபலப்பட்டு, கழுகுப் பார்வை பார்க்க நேரிடும். இப்படி ஆண்கள் சட்டையைப் போல் போட்டுக் கொண்டு பணிபுரிவதால், பெண்களுக்கு ஆடை சரி செய்யும் கவலை இல்லை. ஆண்களின் கழுகுப் பார்வைக்கும், சபலத்துக்கும் வழியில்லை. அனைவரும் எப்பிரச்னையுமின்றி வேலையில் முழு கவனம் செலுத்த முடிகிறது என்பதால் இது முதலாளியின் ஏற்பாடு என்று கூறினார் அப்பெண்; எனக்கும் இது மிகச் சரியாகப் பட்டது. பெண் பணியாளர்களின் நலன் கருதி, இதை, பிற தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, அரசு நிறுவனங்களும், வங்கிகளும் கூட பின்பற்றலாமே... இதனால், பல பிரச்னைகள் தவிர்க்கப்படும். அனைத்து தரப்பினரும் சிந்திப்பரா?
— ஜி.ராஜரத்னா, ராஜபாளையம்.
சுகாதாரமற்ற செயல்களை தவிர்க்கலாமே!
நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றபோது, அவரின் ஐந்து வயது பெண் குழந்தை, இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சாப்பிடும்போது இடையிடையே, தன் ஐந்து விரல்களையும், ஒவ்வொன்றாக வாய்க்குள் விட்டு, விட்டு எடுத்தது.
இதைக் கண்ட குழந்தையின் தாய், 'இதென்ன புதுப் பழக்கம் அசிங்கமாக... இப்படியெல்லாம் செய்யக் கூடாது. எங்கிருந்து வந்தது இதெல்லாம்...' என்று கடிந்து கொண் டாள்.
உடனே அந்தக் குழந்தை, 'பாட்டி பார்க்கிற, 'டிவி' சீரியல்ல ஒரு, 'பேட்' அங்கிள் இப்படித்தான் சாப்பிட்டார்...' என்று கூறினாள். 'அதுக்குத்தான் பாட்டி, 'டிவி' பார்க்கும் போது நீயும், 'டிவி' பார்க்கக் கூடாது என்கிறேன்... சொன்னால் கேட்டாத்தானே...' என்று மாமியாரையும் ஜாடையாக தாக்கினாள் குழந்தையின் தாய். வயதானவர்களுக்கு, 'டிவி' ஒரு பொழுதுபோக்கு சாதனம். அவர்களிடம் பேரக் குழந்தைகள் ஆசையாக போவதும், அப்படியே, 'டிவி'யில் அவர்களும் ஒன்றி விடுவதும், பல வீடுகளிலும் நடக்கும் நிகழ்ச்சி தான். 'டிவி' நாடகங்களில், டைனிங் டேபிளில் சாப்பிட்ட தட்டிலேயே நூறு மில்லி தண்ணீரில் கை கழுவுவதும், சமையல் செய்யும் போது இடது உள்ளங்கையில் சாம்பாரை விட்டு நாக்கால் ருசி பார்ப்பதும், தலை முடிக்கு போடும் ப்ளாஸ்டிக் கிளிப்பை வாயில் கவ்விக் கொண்டு தலையை கோதி குமிப்பதும் வாடிக்கை. இதுபோன்ற சுகாதாரமற்ற செயல்களையாவது நாடகங் களிலிருந்து தவிர்த்தால், இளம் தலைமுறையினருக்கு கெட்ட பழக்கங்கள் வருவது குறையும்; செய்வரா?
— ஜி.நீலா, சென்னை.
