sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 22, 2016

Google News

PUBLISHED ON : மே 22, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரப் பெண்மணி!

சமீபத்தில், சென்னை கடற்கரையிலிருந்து, தாம்பரம் செல்லும் மின்சார ரயிலில், முதல் வகுப்பில் பயணம் செய்தேன். முதல் வகுப்பு பெட்டியை ஒட்டி, பெண்கள், 'கம்பார்ட்மென்ட்' உள்ளது. இரண்டிற்கும் இடையில், சிறு அளவிலான தடுப்பு மட்டுமே உண்டு. தடுப்பை ஒட்டி உள்ள இருக்கைகளில் பெண்கள் அமர்ந்திருக்க, முதல் வகுப்பில் பயணம் செய்த, 50 வயது மதிக்கத்தக்க ஒருவன், தடுப்பை ஒட்டி நின்று, மொபைலை ஆராய்ந்தபடி இருந்தான்.

பெண்கள் பகுதியில், அழகான இளம்பெண் ஒருவர் உட்கார்ந்திருந்தார். சில நிமிடங்களில், அந்த இளம்பெண்ணின் அருகில் அமர்ந்திருந்த நடுத்தர வயது பெண் ஒருவர் எழுந்து, அந்த ஆளிடம், 'இப்போ நீ இந்தப் பொண்ணை, 'வீடியோ' தானே எடுத்தே...' என்று கேட்டார்.

அந்த ஆள், 'இல்லையே...' என்று தடுமாறியபடி பதில் கூற, சட்டென்று அவனிடமிருந்து மொபைலை பிடுங்கிப் பார்த்தார். அந்த இளம் பெண்ணை, இரண்டு, 'வீடியோ'க்கள் எடுத்திருப்பது தெரிந்தது. அப்பெண்ணின் பின்புறமாக நின்றபடி, அவளின் துப்பட்டா இல்லாத சுடிதாரின், லூசான மேல்பகுதியை, 'வீடியோ' எடுத்திருக்கிறான். உடனே, ரயில்வே போலீசில் புகார் செய்து, அந்த மொபைலையும் ஒப்படைத்தார் அப்பெண்மணி.

போலீசார் அப்பதிவை அழித்ததுடன், போலீஸ் ஸ்டேஷனுக்கு அவனை கூட்டிச் சென்று விசாரித்துள்ளனர். அவன், சென்னை துறைமுகத்தில் பொறுப்பான அதிகாரி என்று தெரிய வந்தது. போலீஸ் வழக்கு பதிவு செய்தால், வேலை போய் விடும் என்பதால், அவனது மனைவி மற்றும் குடும்பத்தினரை அழைத்து, அவன் செய்த ஈனச்செயலை கூறி, அந்த இளம்பெண்ணிடம் மன்னிப்பு கேட்க வைத்ததோடு, அன்று ஒருநாள் முழுக்க, காவல் நிலையத்தில் வைத்திருந்து, எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

தன் மகள் வயதில் இருக்கும் பெண்ணை, ஆபாசமாக வீடியோ எடுத்த அற்பப்பதரை, மிக சமயோசிதமாக மடக்கி, அவனை போலீசில் பிடித்துக் கொடுத்த அப்பெண்மணியை மனதார பாராட்டினேன்.

இன்றைய சூழலில், இதுபோன்ற தைரியமான பெண்களே அதிகம் தேவை!

— கே.எம்.பரூக், சென்னை.

ஓட்டு போடாவிட்டால் சம்பளம், 'கட்!'

சமீபத்தில், என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அனைவரும், 'டூர்' செல்லும் பரபரப்பில் இருந்தனர். விசாரித்ததில், இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால், சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் (மே 14, 15 மற்றும் 16) 'டூர்' போகவிருப்பதாக தெரிவித்தார். '16ம் தேதி ஓட்டு போடணுமே...' என்றதற்கு, 'ஆமா... நாங்க ஓட்டு போட்டு தான், ஜெயிக்கப் போறாங்களாக்கும்...' என்றார்.

எனக்கு, 'பகீர்' என்றது; அவர் எப்போது பேசினாலும், அரசியலையும், அரசியல்வாதிகளையும், 'கிழிகிழி' யென கிழித்து, நாட்டு முன்னேற்றத்தை பற்றி, வாய் கிழிய பேசுவார். எல்லாம் வாய் பேச்சு என்பது புரிந்த போது, இவரைப் போன்றோருக்கு, அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல என்ன தகுதி உள்ளது என நினைத்தேன். இவரது செய்கையை பார்த்து, அவரது குழந்தைகளுக்கும், தேர்தல் மீது மதிப்பு போய்விடும்.

ஓட்டுப் போடுவது கட்டாய கடமை என்று கூறி, ஓட்டுப் போட, சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கொடுத்து, ஓட்டளிக்கச் சொல்லும் இக்காலத்தில், இவர் செய்வது நியாயமா?

'ஓட்டுப் போட்டதற்கான அத்தாட்சியை காட்டினால் தான், சம்பளம்...' என்று அறிவித்தால் தான், இவரைப் போன்றோர் திருந்துவர்!

— கி.ரவிக்குமார், நெய்வேலி.

100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

— ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.

கைவினை தொழிலும் முக்கியம்!

என் சகோதரியின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க, நானும், என் சகோதரியும் அவள் தோழி வீட்டுக்கு சென்றிருந்தோம். அங்கே அவளின் நிர்வாகம் மற்றும் அனைத்து கலைகளிலும் இருந்த ஈடுபாடு கண்டு வியந்து போனோம். காரணம், குடும்ப சூழ்நிலையால், கல்லூரி முதலாம் ஆண்டிலேயே, படிப்பை நிறுத்தி, அவளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். படிப்பை தொடர முடியாத சூழ்நிலையில், அருகில் உள்ள தையல் பயிற்சி பள்ளியில் சேர்ந்து, தையல் மற்றும் எம்ராய்ட்ரிங் கலையை கற்றுள்ளாள்.

இன்று, சுற்று வட்டாரத்திலேயே அனைத்துப் பெண்களாலும் விரும்பப்படும் தையல் கலைஞராக திகழ்வதுடன், அருகில் உள்ளோருக்கும் தையல் கலையைக் கற்றுத்தரும் ஆசிரியராகவும் உள்ளாள். பொழுதுபோக்காக இக்கலையில் ஆர்வம் காட்ட ஆரம்பித்த தோழி, இன்று, மாத வருமானமாக கணிசமான தொகை வருவதாக பெருமிதத்துடன் கூறினாள்.

வீட்டில் தானே இருக்கிறோம் என்று இல்லாமல், கிடைக்கும் நேரங்களில் இதுபோன்ற கலைகளில் பெண்கள் ஆர்வம் காட்ட ஆரம்பித்தால், கண்டிப்பாக அவர்களுக்குள் சுய ஆர்வம் வளர்வதுடன், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.

க.நாகராணி, உடுமலை.






      Dinamalar
      Follow us