
அடுத்தவரை எதிர்பார்க்காமல்...
சமீபத்தில், காட்டுப் பகுதி ஒன்றுக்கு சுற்றுலா சென்றிருந்த போது, அங்கிருந்த குரங்குகளுக்கு பழங்கள் கொடுத்தோம்.
அப்போது அங்கிருந்த வனத்துறை அதிகாரி ஒருவர், 'குரங்குகளுக்கு இப்படி பழங்கள், பிஸ்கெட் கொடுத்து பழக்குவது, தவறானது...' என்றார்.
அவரது பதிலால் ஆச்சரியமடைந்து, 'விலங்குகளுக்கு உணவிடுவது நல்லது தானே...' என்ற போது, 'பிரியத்தில் தான், குரங்குகளுக்கு உணவிடுகின்றனர். ஆனால், தினமும் இப்படியே இவைகளுக்கு உணவு கிடைத்து விடுவதால், கஷ்டப்பட்டு உணவு தேடுவது மற்றும் மரங்களின் மேல் ஏறி, பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை, சிறிது சிறிதாக கை விடுகின்றன. இதனால், புதிய தலைமுறை குரங்குகள் அந்த பயிற்சி இல்லாமல், முற்றிலும் மாறி விடும் அபாயமும் உள்ளது. வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல, இக்குரங்குகளும், 'டூரிஸ்ட்'களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக, மாறி விடும்.
'உழைக்காமல் சும்மா கிடைப்பதை உண்பதை பழக்கமாகக் கொண்ட குரங்குகள், நாளடைவில், எவரேனும் கொடுக்காமல் சென்றால், அவர்களை துரத்தி, மிரட்டி, தாக்கியாவது, பிடுங்கி உண்ண முற்படும்.
'எனவே, இயற்கையுடன் இணைந்து வாழும் விலங்குகளை அதன் போக்கில் வளர விடுவதே, அவற்றுக்கு ஆரோக்கியமானது...' என்று கூறினார்.
அவரது பேச்சு, யோசிக்க வைத்தது. இலவச அரிசி வாங்கி, இலவச கிரைண்டரில் இட்லிக்கு மாவாட்டி, இலவச மிக்சியில் சட்னி அரைத்து, இலவச மின்விசிறியை போட்டு இளைப்பாறி, இலவச, 'டிவி'யில் படமும், சீரியல்களும் பார்க்கும் நம் ஊர் மக்களுக்கு, உழைக்கவே மனம் வருவதில்லை.
நம்மால் செய்துக் கொள்ள முடிகிற காரியத்துக்குக் கூட அரசை எதிர்பார்த்து, அது நிறைவேறாத போது, குறை கூறி, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதைப் போல் தான் இதுவும் என்பது புரிந்தது.
— சி.பி.செந்தில்குமார், சென்னிமலை.
படைப்பாற்றலை பெருக்கலாமே!
என் மகனின் வகுப்பு ஆசிரியை, தன் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தியுள்ளார். ஒவ்வொருவருக்கும் ஆறு தீக்குச்சிகளை கொடுத்து, 'இந்த ஆறு தீக்குச்சியில், உங்களால் எத்தனை உருவங்களை உருவாக்க முடியும் என காட்டுங்கள்...' என்று!
ஒவ்வொருவரும், வீடு, மீன் மற்றும் 'டிவி' என, சில வடிவங்களை செய்துள்ளனர். பின், 'இதையே இன்று உங்களது, 'ஆக்டிவிட்டி'யாக வைத்து வீட்டில் செய்து, 'சார்ட்' பேப்பரில் ஒட்டி வாருங்கள்...' என்று கூறியுள்ளார், ஆசிரியை.
என் மகனும், ஏழெட்டு உருவங்களை ஒட்டி, ஆசிரியரிடம் காட்டி, பாராட்டு பெற்றுள்ளான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால், மொத்தம், 78 வெவ்வேறு உருவங்களை, வகுப்பு மாணவர்கள் செய்து காட்டியுள்ளனர்.
மாணவர்களை இவ்வாறு சிந்தித்து, செயல்பட தூண்டும் வகையில் வீட்டுப்பாடம் தருவது, அவர்களது படைப்பாற்றலை அதிகரிக்கச் செய்வதோடு, கல்வி மீது ஆர்வம் கொள்ள செய்யும் என்பதில் சந்தேகமில்லை!
— கே.நாகலிங்கம், தஞ்சை.
நர்சரி பள்ளியில் சேர்க்கும் போது...
என் தோழியின் மகள், பிரபல நர்சரி பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். சமீபத்தில், தோழியை சந்திக்க சென்றிருந்த போது, அவளது குழந்தையின் ஆசன வாய் பகுதியில் புண் ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவரிடம் காண்பித்து வந்ததாகவும் கூறினாள்.
குழந்தையிடம் விசாரித்த போது, வகுப்பு இடைவேளையின் போது, பாத்ரூம் போனதாகவும், அப்போது, ஆயாம்மா டாய்லெட் கழுவும் பிரஷ் மூலம், தனக்கு கழுவி விட்டதாகவும் கூறினாள்.
தலைமை ஆசிரியரிடம் விவரம் கூறி, ஆயாம்மாவை (திருமணமாகாத சிறு பெண்) விசாரித்த போது, அவர் கையால் சுத்தம் செய்வதற்கு அருவருப்பு கொண்டு, பிரஷ் மூலம், குழந்தைக்கு சுத்தம் செய்ததை ஒப்புக் கொண்டார்.
பள்ளியில் குழந்தைகளை பேணி பாதுகாக்கும் வேலைக்கு, திருமணமாகி குழந்தை பெற்ற, பொறுமையான, அன்பான, தாய் போல கவனிக்கும் நபர்களை பணியில் அமர்த்தும்படி கூறி வந்தோம்.
பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளின் பள்ளிகளில் கழிப்பறைகள் சுத்தமாக உள்ளதா, கிருமி நாசினி பயன்படுத்தப்படுகின்றனவா மற்றும் குழந்தைகளை கவனிப்பவர்கள் பற்றியும் கேட்டு விசாரித்து, அதன்பின், அப்பள்ளியில் சேருங்கள். படிப்புடன், குழந்தைகளின் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்!
—ஷோபனா தாசன், நாட்டரசன் கோட்டை.

